செவ்வாய், 6 மார்ச், 2012

நுண் உயிர்களும், மூளையும்


பிரகாஷ் சங்கரன் | 

கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்?
நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்!
குடலிலிருந்து மூளைக்கு
குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா?
மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம்! எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது.
இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது (1). இந்த ஆய்வில் அடையப்பட்ட முடிவுகள் சில: பிறப்பிலிருந்தே நுண்ணுயிர்கள் தொற்றாத அதிதூய்மையான சூழலில் வளர்க்கப்பட்ட எலிகள், சாதாரண சூழலில் வளர்க்கப்பட்ட எலிகளை விட மிகவும் சுறுசுறுப்பாகவும், சாகசமான செயல்களைச் செய்வதாகவும் இருந்தன. அவை இளமையாக இருக்கும்போதே அவற்றை வழக்கமான குடல் நுண்ணுயிர்கள் தொற்றி வளரக்கூடிய சாதாரண சூழலுக்கு மாற்றினால், பின்னர் வளர்ந்து பெரிதாகையில் மற்ற சாதாரண எலிகளைப் போலவே செயல்பட ஆரம்பிக்கின்றன. மாறாக அதிதூய சூழலில், குடலில் நுண்ணுயிர்கள் தொற்றாமல் வளர்ந்து பெரிதான எலிகளை பின்னர் சாதாரண சூழலில் விட்டால், கடைசிவரை அவற்றின் சுறுசுறுப்பிலும், நடத்தையிலும் மாற்றம் வரவில்லை. இதன் காரணத்தை கண்டறிய அந்த எலிகளின் மூளையில் கற்றல், நினைவாற்றல் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சமிக்ஞைப் பாதைகளையும், மரபணுக்களையும் பரிசோதித்தபோது, குடல் நுண்ணுயிர்கள் தொற்றும் சாதாரண சூழலில் வளர்ந்த எலிகளில் இப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. செரோடோனின், டோபமைன் போன்ற நரம்பு சமிக்ஞை கடத்தி வேதிப்பொருட்களை மட்டுமல்ல, நரம்பணுக்களின் சமிக்ஞை (மின், வேதி) கடத்தல் என்ற மொத்த செயல்பாட்டையே கட்டுப்படுத்துகிறது குடலில் வாழும் நுண்ணுயிர்த் தொகை. குழந்தைப் பருவத்தில் குடலில் நுண்ணுயிர்களின் ‘குடியேற்றம்’ நடைபெறுவதும், அந்த ஆரம்பகட்டத்தில் நடைபெறும் மூளை வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பரிணாம வளர்ச்சியின்போதே தொகுக்கப்பட்டவை. இதே முடிவுகள் தனியாக மற்றொரு குழுவினர் கிருமிகளற்ற எலிகளை வைத்துச் செய்த ஆராய்ச்சியிலும் கிடைத்தன. இந்த ஆய்வில், மூளையில் -குறிப்பாக குறுகிய மற்றும் நீண்ட கால நினைவாற்றலுக்குக் காரணமான ‘ஹிப்போகேம்பஸ்’ என்னும் பகுதியில்தான் மேற்குறிப்பிட்ட மரபணு சம்பந்தமான மாற்றங்கள் உண்டாகிறதென கண்டுபிடிக்கப்பட்டது (2).
குடலில் இருக்கும் எல்லா நுண்ணுயிர்களும் தீங்கு செய்பவையும் அல்ல. பல நுண்ணுயிர்கள் (எ.கா. சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு ஆற்றலை விநியோகித்தல், புதிய நோய்கிருமிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற உடலுக்கு நன்மை தரும் செயல்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குடலினுள் இவற்றின் சமநிலை பேணப்பட வேண்டியதும் அவசியமாகும். இந்த சமநிலை குலையும்போது மனநிலையும், மூளைச் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக மன அழுத்தம், இனம் புரியாத சோகம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார்ந்த சிக்கல்கள் உருவாவதில் குடல்வாழ் நுண்ணுயிர்களின் குறைவும் ஒரு காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது (3).
இந்த ஆய்வில் எதிர்-உயிர் மருந்துகள் (ஆன்ட்டிபயாட்டிக்) கொடுத்து எலிகளின் குடல்வாழ் நுண்ணுயிர்களின் இயற்கையான சமநிலை வெகுவாகக் குறைக்கப்பட்டபோது அவற்றின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. கவனமின்மையும், சோர்வும் உண்டானது கவனிக்கப்பட்டது. மன அழுத்தம், சோர்வு போன்றவற்றுடன் தொடர்புடைய, மூளையிலிருந்து பெறப்படும் நரம்பணுக் காரணியின் அளவும் மிகவும் அதிகரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எதிர்-உயிர் மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டதும், குடல்வாழ் நுண்ணுயிர்கள் சமநிலைக்கு வந்து, ஆரோக்கியமான மூளை வேதிச் செயல்பாடுகளும், நடத்தையும் மீண்டது. (ஆனால் நாம் முதலில் பார்த்த ஆய்வு முடிவுகளுடன் இது மாறுபடுவதாகத் தோன்றும். அது மூளை வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் குடல் வாழ் நுண்ணுயிர்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்கிறது, இந்த ஆய்வு அடுத்த வாழ்க்கை நிலைகளில் குடல்வாழ் நுண்ணுயிர்களின் பங்கை ஆராய்கிறது).
இதை இன்னும் நுண்மையாக அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் கிருமிகள் இல்லாத மந்தமான நடத்தைக்கான மரபுப் பின்புலம் கொண்ட எலிகளிடம், சாதாரண எலிகளை விட அதிக சுறுசுறுப்பும் ஆரோக்கியமான நடத்தைப் பண்புகளும் கொண்ட எலிகளின் வயிற்றிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்களைச் செலுத்தியபோது அவை நல்ல உற்சாகமும், சுறுசுறுப்பான செயல்பாடுகளும் மிக்கவையாக மாறின. அதே போல சாதாரணமான நடத்தைகள் உள்ள எலிகளுக்கு மந்தமான நடத்தைக்கான மரபுப் பின்புலம் கொண்ட எலிகளின் குடல்வாழ் நுண்ணுயிர்களை எடுத்துச் செலுத்தினால் அவையும் மந்தமானவையாக மாறின. இதிலிருந்து குடல்வாழ் நுண்ணுயிர்களில் உடல் நலத்திற்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மட்டும் எண்ணிக்கையில் மிகுந்திருந்தால் அது மூளை – அதன் வழியாக நடத்தை, செயல்பாடுகளில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவது உறுதியாகிறது.
இந்த “மூளைக்கு நன்மை செய்யும் குடல்வாழ் நுண்ணுயிர்கள்” எனும் கருத்தை நேரடியாக விளக்குகிறது ஒரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரை (4). ஒரு குறிப்பிட்ட வகை லாக்டோபாஸில்லஸ் (Lactobacillus rhamnosus JB-1 ) என்னும் பாக்டீரியா செலுத்தப்பட்ட எலிகளில் குறிப்பிடத்தக்க அளவு மன அழுத்தம், சோர்வு தொடர்பான நடத்தைகள் குறைந்தது, மேலும் மன அழுத்தத்தினால் அதிகரிக்கும் ‘கார்டிகோஸ்டீரோன்’ போன்ற ஹார்மோன்களின் அளவும் குறைந்தது. இந்த ஆராய்ச்சி மூலம் சில குடல்வாழ் நுண்ணுயிர்கள் எந்த வினைப்பாதையின் மூலம் மூளையின் வேதிச்செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை போன்று எலிகளில் நடத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி முடிவகளைக் கொண்டு மனிதர்களின் உடலுக்கும், மூளைக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்களைக் கொண்டு குணப்படுத்தும் மருத்துவ முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உதாரணமாக குடல் பதற்ற பிணிக்கூட்டு (Irritable bowel syndrome) மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. மேலும் வளர்ந்த பிறகு வரும் (பிறவியிலேயே இருப்பதல்ல) ‘ஆடிஸம்’ குறைபாட்டுக்கு குடல் வாழ் நுண்ணுயிர்களின் சமன்குலைவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவை போன்ற மூளை-மன நோய்களைக் குடல் நுண்ணுயிர்களைக் கொண்டு குணப்படுத்தும் முறைகள் எதிர்காலத்தில் வரலாம். இப்பொழுதே ‘புரோபயாடிக்’ துணை உணவுகளும் பிரபல மடைந்து வருகின்றன.
தொற்றுநோய்களும் அறிவுத்திறனும்
கருவுற்ற தாய்க்கு ஏற்படும் நோய்த்தொற்று கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிக்கும். நோய் தொற்று ஏற்பட்ட தாயின் நோயெதிர்ப்பு செல்கள் வெளியிடும் ‘சைடோகைன்கள்’ (Cytokines) எனப்படும் செல் சமிக்ஞை மூலக்கூறுகள் நஞ்சுக்கொடி வழியாக கடந்து சென்று கருவை அடைகின்றன. இந்த சைடோகைன்கள் பிற செல்களின் பிளவிப்பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கக் கூடியவையாதலால், கருவின் மூளை செல்களின் பெருக்கத்தையும் நரம்பணுக் கட்டுமானத்தையும் பாதிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் கருவிலிருக்கும் குழந்தைகள் பின்னாளில் நரம்பு – மனச் சிக்கல்களுக்கு ஆளாகின்றன. உதாரணமாக இன்ஃப்ளூயன்சா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகும் தாய்மார்களின் கருவிலிருக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் ஸ்கீஸோஃப்ரீனியாவினால் பாதிக்கப்படுகின்றன. இந்த மனநலக் குறைபாட்டினால் அவர்களின் பேச்சு சிந்தனை, உணர்ச்சிகள், நடத்தை போன்றவற்றில் சிக்கல்கள் உருவாகின்றன (5).
மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது. மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரம்ப நிலைகளில் மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பணு வலைக் கட்டுமானம் வேகமாக வளர்ச்சியடையும் முக்கியமான கட்டமாகும். இந்தச் சமயத்தில் உணவிலிருந்து கிடைக்கும் சக்தியில் 90% மூளை வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது. இத்தகைய முக்கியமான கட்டத்தில் தொற்றுநோய்கள் தாக்கினால் அதிகமான ஆற்றல் விரயம் ஆகிறது, இது மூளை வளர்ச்சி, நரம்பணு வலைப்பின்னல் கட்டமைப்பை பாதிக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இளம் வயதில் குடல் புழு தாக்குதல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் அறிவுத்திறன் அளவீடு பின்னர் அவர்கள் வளரும் போது குறைகிறது என்று ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது (6).
இந்தக் கருதுகோளை அடிப்படையாக வைத்து தொற்று நோய் பரவலில் வேறுபாடுள்ள, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிலும், ஒரே நாட்டுக்குள்ளேயே வெவ்வேறு இடங்களில் வாழும் மக்களிலும் சராசரி அறிவுத் திறன் அளவீட்டில் வித்தியாசம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவை இன்னும் ஆதாரமான கேள்வியான அறிவாற்றலில் மரபியல் மற்றும் சூழலின் பங்கைப் பற்றி பேசுவதாகின்றன (பார்க்க:அறிவாற்றல் மரபுப் பண்பா?). முடிவுகள் பெரும்பாலும் தொற்றுநோய்கள் பரவல் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் மக்களின் சராசரி அறிவுத்திறன் அளவீடு குறைவாக உள்ளது என்றே சொல்கிறது. உதாரணமாக அமெரிக்க நாட்டில் மாஸாசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷையர், வெர்மாண்ட் ஆகிய மாகானங்களில் மக்களின் சராசரி அறிவுத்திறன் அளவீடு அதிகமாகவும், கலிஃபோர்னியா, மிசிசிபி, லூஸியானா மாகாணங்களில் குறைவாகவும் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த வேறுபாட்டிற்கு அம்மாகாணங்களின் குறைவான (அ) அதிகமான தொற்றுநோய் பரவலைக் காரணமாகக் குறிப்பிடுகிறது (7). இதற்கு அப்படியே நேர் எதிரான வாதமும் முன் வைக்கப்படுகிறது: அறிவாற்றல் அதிகம் இருக்கும் சமூகத்தில் (அ) பகுதிகளில் உள்ள மக்களுக்கு நோய்த்தொற்றுகள் குறைவாக இருக்கின்றன அதாவது, நோய்ச் சூழலை திறமையாக எதிர்கொள்ள முடிகிறது. இவை முதற்கட்ட ஆய்வுகள். எந்தெந்த நோய்க்கிருமிகளின் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது, அம்மக்களின் மரபியல் முன்சார்புகள், கல்வி, பொதுவான அறிவாற்றல் காரணி (g) போன்றவைகளையும் கருத்தில் கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்போது இவற்றைப் பற்றி தெளிவான கருத்துக்கள் உருவாகும்.
மூளையை நேரடியாகத் தாக்கும் நுண்ணுயிர்கள்
மேலே சொல்லப்பட்டதெல்லாம் எவ்வாறு குடல்வாழ் நுண்ணுயிர்கள் உடல் செயற்பாட்டியல் சார்ந்த வினைப்பாதைகள் வழியாக மூளையின் வேதியல் கூறுகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக மூளை, மன, நடத்தைச் செயல்பாடுகளை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிக்கின்றன என்பது பற்றி.
ஆனால் நுண்ணுயிர்கள் மூளையில் என்ன நேரடித் தாக்கம் செலுத்துகின்றன?
கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படி எந்த நுண்ணுயிரும் தொற்றாதவாறு பாதுகாக்கப்படுகிறதோ, அப்படி நம் ஒவ்வொருவரது உடலிலும் உயிர்வாழும் வரை மூளை பாதுகாக்கப் படுகிறது. இரத்த - மூளை தடுப்பு (Blood – Brain Barrier) என்கிற விசேஷ நரம்பணுக்களால் ஆன தடுப்பமைப்பின் மூலம் ரத்தத்திலுள்ள கிருமிகளோ, வேறு பெரிய வேதியல் மூலங்களோ மைய நரம்பு மண்டலத்தில் மூளையின் புறச்செல் பாய்மங்களுக்குள் (Brain extracellular fluid) நுழையமுடியாதபடி தடுக்கப்பட்டிருக்கிறது. இதனையும் மீறி சில பாக்டீரியாக்கள், வைரஸ், பூஞ்ஜை போன்றவை நரம்புமண்டல செல்களைத் தொற்றி விடுகின்றன. பொதுவாக மூளை/மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் எந்த நுண் உயிர் தொற்றாக இருந்தாலும் புத்தியில் மந்தத் தன்மை, கற்றல், கேட்டல், நினைவாற்றல், ஒருமுகத் தன்மை போன்ற அறிதல் செயல்பாடுகளில் இடைக்கால அல்லது நிரந்தர கோளாறு உண்டாதல், மன அழுத்தம், உளைச்சல், சோம்பல், விருப்பமின்மை, தீராக்கவலை போன்ற மன நலம்/நடத்தை சார்ந்த குறைபாடுகள் உண்டாதல் இவற்றில் சிலவோ அல்லது அனைத்துமோ உருவாகும். முற்றிய நிலைகளில் மரணத்தை உண்டாக்கும்.
முக்கியமான சில உதாரணங்கள்,
1. பாக்டீரியாக்களால் உண்டாகும் நோய்த்தாக்குதல்: நிமோனியா (Streptococcus pneumoniae), இன்ஃப்ளூயன்ஸா (Haemophilus influenzae type B) மற்றும் மெனின்ஜைடிஸ் (Neisseria meningitides). ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் எதிர்-உயிர் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தி விடலாம்.
2. வைரஸ் தாக்குதல்: எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமி நேரடியாக மூளைக்குள் நுழையமுடியாது. ஆனால் ஒருவகை இரத்த வெள்ளை அணுக்களுக்குள் தன் மரபணுவை மட்டும் செலுத்தி, வளர்தல் மற்றும் பல்கிப்பெருகுதல் வேலைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து, வெள்ளை அணு நரம்பு மண்டலத்துக்குள் சென்றதும் பெருகி வளர ஆரம்பிக்கும். விளைவு – மூளைச் செயல்பாடு வேகம் குறையும், கவனம், ஞாபகத்திறன் போன்றவை கெடும், மந்தநிலையும், உணர்ச்சிகள் குறைவும் உண்டாகும். எய்ட்ஸை முற்றிலும் குணப்படுத்த முடியாது, ஆனால் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் எச்.ஐ.வியால் உண்டாகக் கூடிய மூளைக் கோளாறை (ஞாபக அழிவை) தவிர்த்து விடலாம்.
3. அமீபா போன்ற நுண்ணுயிரின் தாக்குதல்: நேக்லேரியா (Naegleria fowleri) எனப்படும் “மூளை தின்னும் அமீபா” வின் தாக்குதல் இருப்பதிலேயே மோசமானது. பொதுவாக இதன் தாக்குதல் உலகளவில் மிகக் குறைவுதான், ஆனால் தொற்றினால் 98% மரணம் உறுதி, அதுவும் பதினான்கே நாட்களில் மரணம் சம்பவிக்கும்(8). தூய்மையாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள், நீர் நிலைகள், தொட்டிகள் போன்றவை இவற்றின் உயிர் வாழிடம். பொதுவாக மூக்கு வழியாக தொற்றி, நரம்பு இழைகளைப் பற்றி மேலேறி மூளையை அடைந்து நரம்பணுக்களை தாக்கி அழித்துவிடும். (குறிப்பு: ஹடயோக வகுப்புகளில் கலந்து கொண்டு மூக்கு வழியாக நீரைவிட்டு சுத்தம் செய்யும் ‘ஜல நேதி’ செய்பவர்கள், கட்டாயம் நன்றாக கொதிக்கவைத்து, உப்பு சேர்த்து பின் வெதுவெதுப்பாக ஆனவுடன் செய்யவேண்டும். குழாய் தண்ணீரை அப்படியே எடுத்து மூக்கில் விடுபவர்கள் நேக்லேரியாவிற்கு வாசலை அகலத் திறந்துவிடுவதற்குச் சமம்!) வெற்றிகரமான குணப்படுத்தும் மருந்துகள் இல்லை.
நம் சுற்றுப்புறம், நாம் உண்ணும் உணவு, நமது சொந்த தூய்மைப் பழக்கவழக்கங்கள் போன்றவைதான் அடிப்படையில் நுண்ணுயிர்களுக்கும் நமக்குமான தொடர்புப் பாலங்கள். நாம் அறியாவிட்டாலும் நம் உடல் மிகவும் நுணுக்கமாக அனைத்தையும் அறிகிறது. எல்லா காரணிகளுக்கும் மத்தியில் தராசு முள் போல் ஒரு சமநிலையைப் பேணுகிறது. நாம் வலிந்தோ, மிகுந்த அஜாக்கிரதையாலோ உடலின் இயற்கையான சமநிலையை கெடுக்காமல் இருந்தாலே போதும். நுண்ணுயிர்கள் பற்றி நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் இந்திய ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் அறிவு/மனம் x உடல் -எவ்வாறு ஒன்றை ஒன்று நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிக்கின்றன என்பது குறித்து நெடுங்காலமாகவே அழுத்திச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. சொந்த சௌகரியங்களுக்காக அவற்றை பழம்புராணம் என்று அலட்சியப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.
(முற்றும்)
உதவிய மூல ஆராய்ச்சிக் கட்டுரைகள்:
1. R. D. Heijtz, et al., 2011. Normal gut microbiota modulates brain development and behavior. Proceedings of the National Academy of Sciences. DOI: 10.1073/pnas.1010529108
2. K. M. Neufeld, et al., 2011. Reduced anxiety-like behavior and central neurochemical change in germ-free mice. Neurogastroenterology & Motility. 23 (3): 255 DOI:10.1111/j.1365-2982.2010.01620.x
3. E. Denou, et al., 2011. The Intestinal Microbiota Determines Mouse Behavior and Brain BDNF Levels.Gastroenterology. 140 (5): 1, S-57
4. J. A. Bravo, et al.,2011. Ingestion of Lactobacillus strain regulates emotional behavior and central GABA receptor expression in a mouse via the vagus nerve.Proceedings of the National Academy of Sciences, DOI: 10.1073/pnas.1102999108
5. U. Meyer, et al., 2009. A Review of the Fetal Brain Cytokine Imbalance Hypothesis of Schizophrenia. Schizophrenia Bulletin. 35(5): 959–972.
6. W.E. Watkins and E. Pollitt. 1997. “Stupidity or Worms”: Do Intestinal Worms Impair Mental Performance?. Psychological Bulletin. 121 (2): 171-91
7. C. Eppig, et al., 2011. Parasite prevalence and the distribution of intelligence among the states of the USA. Intelligence. 39: 155-60

கூடங்குளம் மின்திட்டம் - மாற்று சிந்தனை + எரிபொருள்





கூடங்குளம் அணுஉலையை மூடுவதால் சுமார் 13500 கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் என்று அரசு தரப்பும், அரசுத் தரப்பின் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். கூடங்குளம் போன்றே மக்கள் எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவிலும் சில அணுமின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக அதே மின்உலையில் வேறு எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புத்திசாலித்தனமான முடிவை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
மின்சாரத்தை தயாரிப்பதில் அணுசக்தி நேரடியாக பயன்படுத்தப்படுவதில்லை. மின் உற்பத்தியை எளிதில் விளக்குவதற்கு நாம் சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவின் எளிமையான இயக்கத்தை புரிந்து கொண்டாலே போதும். மின்சாரத்தை கடத்தக்கூடிய உலோகச் சுருளின் இடையே ஒரு காந்தத்தை சுற்றும்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே காந்தம் சுழல்வதற்கு சைக்கிளின் டயர் பயன்படுகிறது.
இதே சைக்கிள் டைனமோவை மிகப்பெரிய அளவில் ஜெனரேட்டர் என்ற பெயரில் செய்து அதன் மையத்தில் உள்ள காந்தத்தை சுழற்றுவதற்காகவே பலவிதமான ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக காற்றாலைகளில் உள்ள மிகப்பெரிய இறக்கைகள் சுழல்வதால் ஜெனரேட்டரின் மையத்தண்டு எனப்படும் டர்பைன் சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீர் மின் நிலையங்களில் மேலிருந்து கீழே விழும் நீரின் விசையால் ஜெனரேட்டரின் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனல்மின் நிலையங்கள் மிகப்பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி நீர் கொதிக்க வைக்கப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரின் டர்பைன் சுழல்கிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கண்ட உதாரணங்களில் இருந்து ஜெனரேட்டரின் டர்பைனை சுழல்வதற்கு ஆற்றல் தேவை என்பதை உணர முடியும். இதற்கான ஆற்றலாக நீரை கொதிக்க வைப்பதன் மூலம் உருவாகும் நீராவியே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீரை கொதிக்க வைப்பதற்கு ஒரு எரிபொருள் தேவை. அது நிலக்கரியாகவோ, இயற்கை எரிவாயுவாகவோ இருக்கலாம். அல்லது உயிர்ம எரிபொருள் எனப்படும் பயோமாஸ் போன்ற மற்ற எரிபொருளாகவும் இருக்கலாம்.
கூடங்குளத்தில் அணுஉலையை மூடவேண்டும் என்று கூறும் யாரும், அதே கூடங்குளத்தில் மாற்று எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை எதிர்க்க மாட்டார்கள்.
ஷோர்ஹாம் மின் உற்பத்தி நிலையம்அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் அருகே உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில் லாங் ஐலேண்ட் லைட்டிங் கம்பெனி (லில்கோ) சார்பில் 1973 முதல் 1984 ஆண்டுக்குள் அணு உலை ஒன்று கட்டப்பட்டது. 1979ம் ஆண்டு மூன்று மைல் அணுஉலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் 1986ம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் விபத்து காரணமாக எச்சரிக்கை அடைந்த அமெரிக்க மக்கள் ஷோர்ஹாமில் அமையவிருந்த அணுஉலைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடினர்.
இதனிடையே இந்த அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி அப்பகுதியிலுள்ள சஃபோல்க் உள்ளாட்சி அமைப்பு 1984ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் லில்கோ நிறுவனம் அணுஉலை கட்டுமானத்தை நிறைவு செய்தது. எனினும் மக்களின் கடும் எதிர்ப்பால் இந்த அணுஉலையில் பணிகள் தொடங்கப்படவில்லை.
அணுஉலை கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், மக்களின் போராட்டம் ஓயவில்லை. எனவே இந்த அணுஉலையை இயக்கப்போவதில்லை என்று லில்கோ நிர்வாகம் 1989, மே 19 அன்று அறிவித்தது.
ஷோர்ஹாமில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை உபகரணங்கள் வேறு அணுஉலைகளுக்கு அனுப்பப்பட்டன. 2002, ஆகஸ்ட் மாதத்தில் அதே இடத்தில் இயற்கை வாயுவால் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
அடுத்து ஓஹியோ மாகாணம் மாஸ்கோ கிராமத்தில் அமைந்த வில்லியம் ஹெச். ஜிம்மர் மின் திட்டத்தின் கதையை பார்க்கலாம். சின்சினாட்டி எரிவாயு மற்றும் மின்நிறுவனத் தலைவரின் பெயரில் அமைந்த இந்த மின்திட்டம் 1969இல் திட்டமிடப்பட்டது. இந்த மின்திட்டத்தின் பணிகள் ஏறத்தாழ 97 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இதன் கட்டுமானத்திலும், இயந்திரங்கள் நிறுவப்பட்டதிலும் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே 1982ம் ஆண்டில் இந்த மின்திட்டப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
வில்லியம் ஹெச். ஜிம்மர் அணுஉலைப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் அதே உலையில் வேறு ஆற்றல் மூலங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக அந்த மின் உற்பத்தி நிலையத்தை நிலக்கரி மூலமாக இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1991ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
மேற்கூறப்பட்ட இரு அணுஉலைகளும் ஆரம்பிக்கப்பட்ட 1967ம் ஆண்டிலேயே மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிட்லாண்ட் பகுதியிலும் ஒரு அணுஉலை திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்த நிலையில், 1984ம் ஆண்டில் இந்த அணுமின் நிலையத்தின் நிலத்தேர்வு, கட்டுமானம், இயந்திரங்கள் ஆகியவற்றில் குறைகள் கண்டறியப்பட்டன.
சுமார் 17 ஆண்டுகால பணியும்,  400 கோடி அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய்களும் செலவழிக்கப்பட்ட நிலையில் 1984ம் ஆண்டில் இந்த அணுஉலைத் திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இதே உலையை இயற்கை எரிவாயு மூலமாக இயக்கத் திட்டமிடப்பட்டு 1986ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு இந்த அனல் மின் நிலையம் இயங்கத் தொடங்கி, சுமார் 1560 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
***
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5900 துணை மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 சதவீதம் துணை மாவட்டங்களுக்கு 15 முதல் 20 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தேவை. மிகக்குறைந்த அளவிலான இந்த மின்சாரத்தை அந்தந்த பகுதிகளிலேயே நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்களிலிருந்து தயாரிக்க முடியும்.
இந்தியாவில் முன்னர் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகள் சுமார் 200 கிலோ வாட் மின் உற்பத்தி திறனைக் கொண்டிருந்தன. தற்போது சுமார் 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் குறைந்த காற்றாலைகளின் திறனை அதிகரிக்க (Repowering) வேண்டும். இவ்வாறு உற்பத்தித் திறன் மேம்பட்ட காற்றாலைகளை துணை மாவட்டம் ஒன்றுக்கு சுமார் 10 வீதம் பொருத்தினாலே அப்பகுதியின் மின்சார தேவையை நிறைவு செய்ய முடியும்.
டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு வற்றாத ஆற்றல் மூலம் சூரியன்தான்! டெல்லி மாநகரத்தில் உள்ள கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் இயந்திரங்களை முழுமையாக நிறுவினால், அம்மாநகரத்தின் தேவையில் சுமார் 48 சதவீதம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டுக்கு சுமார் 300 நாட்களுக்கும் மேல் மேகம் மறைக்காத சூரிய ஒளி கிடைக்கும் நாட்களே! தார் பாலைவனத்தில் சுமார் 1 லட்சம் சதுர கிலோ மீட்டரை முறையாக பயன்படுத்தினால் மட்டும் சுமார் 35 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவில் சுமார் 7200 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் காற்று, கடல் அலை, கடல் நீர் மின்சாரம் ஆகியவற்றின் மூலமாகவும் கணிசமான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
மேலே கண்ட உதாரணங்களின் உதவியோடு கூடங்குளம் அணுஉலை குறித்தும் மறுபரிசீலனை செய்யலாம். கூடங்குளம் மின்திட்டத்தையும் நிலக்கரி மூலமோ, இயற்கை எரிவாயு மூலமோ இயக்க முடியும்.
windmill_400மேலும் கூடங்குளத்தின் அருகே உள்ள கயத்தாறு, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, முப்பந்தல் உள்ளிட்ட இடங்களில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் சுமார் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்படுகிறது. மீதியுள்ள சுமார் 1,100 மெகாவாட் மின்சாரம் சரியான திட்டமிடாமையால் வீணாகிறது.
இந்த காற்றாலைகள் அனைத்தும் தரையிலிருந்து சுமார் 150 மீட்டர் உயரத்தில் சுழல்கின்றன. இதையும் சற்று மாற்றி அமைத்து இரண்டு வேறு உயரங்களில் இரண்டு அடுக்கு காற்றாலைகள் அமைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளிலேயே இந்த காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் கீழே காலியாக இருக்கும் வெற்றிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பானல்களை நிறுவலாம். அல்லது இதன் இடையே உள்ள இடங்களில் மாற்று எரிபொருளாக பயன்படத்தக்க தாவரங்களை சாகுபடி செய்யமுடியும்.
மாட்டுச்சாணத்திலிருந்து கோபார் வாயு மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வது நாம் அறிந்ததுதான். மாட்டுச்சாணத்திலிருந்து மட்டுமல்ல, மனிதக்கழிவிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் மாநகரங்களில் உருவாகும் மனிதக்கழிவுகளையும் ஆற்றல் மூலமாக மாற்றி அமைக்கலாம்.
மேற்கூறப்பட்ட இந்த மாற்று ஆற்றல் மூலங்களில் பெரும்பான்மை எந்த விதமான சூழல் சீர்கேட்டுக்கும் இடமளிக்காதவை. இந்த மாற்று ஆற்றல் மூலங்கள் அனைத்தும் அணுஉலைகளைப் போல பெரும் விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அறவே அற்றவை. மேலும் சிறப்பு தொழில்நுட்ப கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்க வாய்ப்புள்ளவை.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் சுமார் 40 சதவீத மின்சாரம் வீணாவதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அணுஉலைகள் போன்ற மிகப்பெரும் மின் உற்பத்தி திட்டங்களால்தான் இதுபோன்ற ஆற்றல் இழப்புகள் ஏற்படுகின்றன. மின்சாரம் தேவைப்படும் இடத்திலேயே மாற்று ஆற்றல் மூலங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் இத்தகைய ஆற்றல் இழப்புகளை தவிர்க்கலாம். இதன் மூலம் மாநில தேவைகளுக்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்திற்காக கையேந்தி நிற்கும் நிலையையும் மாற்றி அமைக்கலாம்.
***
ஐக்கிய நாடுகள் அவை சார்பில் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தை மனித குலம் முழுமைக்கும் அளிப்பதற்கான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக பிறந்துள்ள 2012ம் ஆண்டு, “நீடித்து நிலைக்கும் (மின்)ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டா”க (International year of Sustainable Energy For All) குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு பெயர்களில் சுரண்டப்படும் உலக மக்களை பாதுகாப்பதற்கான திட்டமாகவே இந்த திட்டத்தை ஐ.நா. அவை முன்னிறுத்துகிறது. மின்சாரம் தேவைப்படும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் ஆற்றல் மூலங்களைக் கொண்டு, எளிய தொழில்நுட்பத்தின் மூலமாக அம்மக்களுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.
ஐ.நா. அவையின் இந்த கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் மாறாக அணுமின் உலை போன்ற மிகப்பெரிய திட்டங்களை வளர்த்தெடுப்பது அதிகாரத்தை குவிப்பதற்கும், அந்த அதிகாரத்தை அறநெறிகளுக்கு புறம்பாக, மக்களுக்கு எதிராக பயன்படுத்த மட்டுமே உதவி செய்யும். இதைத்தான் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன. அணுஉலை போன்ற சிக்கலான தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா போன்ற ஏழை நாடுகளை தங்கள் பொருளாதார அடிமைகளாக வைத்திருக்க இந்த நாடுகள் விரும்புகின்றன.
இதேபோல இந்தியாவை ஆளும் மத்திய அரசும், மாநிலங்கள் எந்த வகையிலும் தன்னிறைவு அடைவதை விரும்புவதில்லை. மாறாக, மாநில அரசுகள் மின்சாரம் உட்பட அனைத்து அம்சங்களுக்கும், மத்திய அரசை எதிர்பார்த்து கையேந்தி இருப்பதையே மத்தியில் ஆட்சிக்கு வரும் அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன.
இந்த அடிப்படையான அரசியல் உண்மைகளை புரிந்து கொண்டால் மட்டுமே, கூடங்குளம் அணுமின் திட்டம் போன்றவை குறித்து தெளிவான முடிவை எட்ட முடியும்.
இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இந்தியாவின் குடிமக்களுக்கோ, இந்தியத் தொழில் அதிபர்களுக்கோ எந்த முன்னுரிமையும் இல்லை என்ற உண்மையையும் மறந்துவிட முடியாது. அதே நேரத்தில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமையுடன் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மத்திய அரசு ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும். இந்நிலையில் கூடங்குளத்தில் அனுமின்உலை இயங்க ஆரம்பித்தால், இந்தியர்களுக்கும் – இந்தியர்களின் நிறுவனங்களுக்கும் தேவையான மின்சாரம் முழுமையாக கிடைக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் மறந்துவிட முடியாது.
***
மனித வாழ்க்கைக்கு மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் மின்சாரத்திற்காக வெளியார் யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லாமல், சுயச்சார்புடன், பாதுகாப்பான, மலிவான, வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய, தூய்மையான, நீடித்த ஆற்றல் மூலங்கள் இருக்கும்போது அவற்றிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மனித குலத்தை அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. அவை இந்த ஆண்டை “நீடித்து நிலைக்கும் (மின்)ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டா”க (International year of Sustainable Energy For All) கொண்டாடும் நிலையில் இந்தியா தனது இறையாண்மையை ஆதிக்க நாடுகளிடம் சமர்ப்பிக்கும் விதத்தில் அணுமின் உலைகளை தேர்வு செய்வதை கைவிட வேண்டும். அமெரிக்காவை முன் மாதிரியாகக் கொண்டு கூடங்குளம் மின்திட்டத்தை அணுசக்தி பயன்படுத்தாத பாதுகாப்பான மாற்று எரிபொருள் மின்திட்டமாக செயல்படுத்த முன்வர வேண்டும்.
- வழக்கறிஞர் சுந்தரராஜன் ( sundar@lawyersundar.net)

பூத்து குலுங்கும் இல்லற இன்பம்





ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
 இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, “மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்” என்ற வரையறையையும் தாண்டி கணவன்- மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து கொண்டு வாழும்போது தான் தம்பதியர் வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.
 மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக, எல்லா வகையிலும் பாது காப்பு தரும் உணர்வுடன் ஒரு கணவன் தனது மனைவியிடம் பழகினால் அந்த மனைவி அவன் என்ன சொன்னாலும் கேட்பாள்.
 அதுபற்றிதான் உளவியல்ரீதியாக நாம் இங்கே பார்க்கப் போகிறோம் ...
செக்சில் திருப்தி
 தம்பதியர் வாழ்க்கையில் செக்சும் முக்கிய இடம் பெறுகிறது. இதில், ஒருவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான எதிர் விளைவை அடுத்த நாள் எதிர்பார்க்கலாம். செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தால், அந்த மகிழ்ச்சியையும் அவர்களது முகத்தில் மறுநாள் பார்க்கலாம்.
  செக்ஸ் விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத்தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லி விடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. இப்படித்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் என்று சிறுவயது முதலே அவள் சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டு இருக்கிறாள். அதனால், நாசூக்காகத் தான் அவள் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
 “இன்னிக்கு வேண்டாம்” என்று மனைவி சொன்னால்கூட கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது சரி ... என்று பாசமாகவே சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை கேளுங்கள். உடல்நலம் சரியில்லையா? டாக்டரை பார்க்க செல்லவேண்டுமா? என்றெல்லாம் பாசத்தோடு கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் 50 சதவீதம் சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
உறவில் மகிழ்ச்சி :
 உறவின் போது மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்து விட்டு படுத்துத் தூங்கிவிடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடிவிடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின் போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் கேளுங்கள்.
 ஒரு வேளை அவள் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் கூட, உங்களது அந்த அன்பான - ஆதரவான பேச்சில் அவள் சந்தோஷமாக இருந்தேன் என்று தான் தலையாட்டி புன்னகை பூப்பாள். எதிலும் விட்டுக் கொடுத்தே பழகியவள், உங்களது அன்பான பேச்சுக்கு எதையுமே விட்டுக்கொடுப்பாள். அதனால் தான் அன்பின் வடிவானவள் பெண் என்கிறோம்.
 செக்ஸ் விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் அவளுக்கு விரக்தி தான் மிஞ்சும். என்ன வாழ்க்கை இது? என்று யோசிப்பவள், எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள். ஒருவேளை அப்படி நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கையே பிரச்சினைகளின் கூடாரமாகிவிடும். நரகத்தின் வேதனைதான் உங்களுக்கு மிஞ்சும்.
 இதெல்லாம் தேவைதானா?
 செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.
மனைவியை வெல்லும் மந்திரங்கள் - 10
1. அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.
2. அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.
3. சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.
4. சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.
5. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.
6. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.
7. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.
8. சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
9. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!
10. எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.
 இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சங்கீத சந்தோஷம்தான்.
இனி உங்கள் வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும்.