சனி, 14 ஜனவரி, 2012

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு


மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

       நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு... மருத்து வமா? இல்லை... வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வு களை வழங்க முடியும்.
ஸ்பைரூலினா’...எனும் அரிய, எளிய உணவு
       ‘ஸ்பைரூலினா’ பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும், பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.
       ஸ்பைரூலினா.. ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (single celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்கா, வட ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் கடல்களில், ஏரி களில் காணப்படுகிறது.
       உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும், இறைச்சி உணவுப் பொருட் களையும் விட அதிகளவு புரதம் (டழ்ர்ற்ங்ண்ய்) இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக ‘ஸ்பைரூலினா’ பயன்படுகிறது. ஏனென் றால் நாம் இதை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது! Yes... Micro Food! Macro Blessing!
இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க உன்னத உணவு
       ‘இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால், இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும்’ என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும், உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தை களைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில் ‘ஸ்பைரூலினா’ பரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களி லிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை ‘மருந்துணவு’ (Medicine Food) என்கின்றனர்.
ஸ்பைரூலினா’வில் அடங்கியுள்ள சத்துக்கள்
       மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலினோனிக் அமிலம் (Gamma Linoleic Avid) இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக யண்ற் Vit A,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஸ்பைரூலினா’ அள்ளி வழங்கும் ஆரோக்கியம்
       நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கிய மும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள்ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும், எடை குறையும்.
       மேலும் புரதம், வைட்டமின்கள் அபரிமித மாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா லினோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (LDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (HDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமா லினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (powerful anti inflammatory) பணியும் ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்
       ஸ்பைரூலினா... மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (blood sugar level in fasting) 6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடு, அடிக்கடி பசி ஏற்படுதல், அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம், நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள், பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான, சுலபமான, நம்பகமான தீர்வு ஏற்படுகிறது.
Best Stomach Tonic
       ஸ்பைரூலினா... இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது. E.coli,candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.
முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்
       மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் anti oxidant/antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. vit.b.12 அடங்கியுள்ளதால் உடல், மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சி, தோலில் சுருக்கம், இதரதோல் நோய்களையும் முறிய டிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chromic Fatique Syndrome-CFS) நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும். தளர்ச்சி மறையும், முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (cancer fighting ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.
       ‘சேதமடைந்த செல் டிஎன்ஏ’ வின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில் “Endonucleus” என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல் “டிஎன்ஏ” நிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும். இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில் “டிஎன்ஏ” சரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா... செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்; அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஸ்பைரூலினா’ பெயரில் நடைபெறும் MLM-நிறுவனக் கொள்ளையை முறியடிப்போம்
       மனிதகுலம் எத்தனையோ போர்களை இயற்கை சீற்றங்களைச் சந்தித்து மீண்டுள்ளது. மனித சமூகமும் பூண்டோடு அழிந்துவிடப் போகிறது என ஆரூடம் கணித்த எத்தனையோ பேர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிரான சூழல்களிலிருந்தும், நோய்மையிலிருந்தும் மீள மனிதகுலம் இடையறாது போராடிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
       உயிரினங்களில் புரட்சிகரமானது மனித உயிர். உணவுகளில் புரட்சிகரமானது ஸ்பைரூ லினா. மருந்துகளால் அல்ல மிகச்சிறந்த (இயற்கை) உணவுகளால் மட்டுமே மனித நலம் பாதுகாக்கப் படும். இயற்கையை வணங்குவது அல்ல. இயற்கை யோடு இணைந்த வாழ்வதே முக்கியம். ஸ்பைரூ லினா ஒவ்வொரு குடும்பத்திலும் அடிப்படை உணவு போல அமைய வேண்டும். இந்த எளிய உணவுப் பொருளை MLM நிறுவனங்கள் தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கும் மோசடியில் வீழ்ந்துவிடாமல், எல்லோருக்கும் ஏற்றவிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் ‘ஸ்பைரூலினா’வையே அனைவரும் பயன் படுத்த வேண்டும்.
       “எதிர்காலத்தில் அதிகமான பேருக்குக் குறைந்த செலவிலான உணவு ஆதாரமாக இது திகழும்” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
(மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

புதன், 11 ஜனவரி, 2012

பூவிடைப்படுதல் 5


சங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்.
ஆனால் பிரித்த கணத்தில் இருந்தே அகத்தையும் புறத்தையும் நம் கவிதை இணைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் பலசமயம் அறிவதில்லை. கூந்தலை இரு புரிகளாகப் பிரித்து அவற்றைப் பின்னிப்பின்னிச்செல்வது போலப் பிரபஞ்ச அறிதலை அகம் புறம் எனப் பிரித்தபின் அவ்விரண்டையும் பின்னிப் பின்னித் தன் அறிதல்களை நிகழ்த்துகிறது சங்கக்கவிதை. அவ்வாறு அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது அது.
அகத்தில் புறத்தையும் புறத்தில் அகத்தையும் கலப்பதே சங்கப்பாடல்களின் அழகியலின் ஆதாரமான விளையாட்டு.
அகவாழ்க்கை என்றால் என்ன? பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, முழுப்போதையில் என் சட்டையைப் பிடித்து சுவரோடு சேர்த்துச் சொன்னார் ‘டேய் மயிராண்டி, வாழ்க்கை என்பது என்னடா? உறவும் பிரிவும் மட்டும்தானே?’ கண்கள் எரிந்துகொண்டிருந்தன. ‘ஆமாம்’ என்றேன். அதை சங்கக்கவிஞன் உணர்ந்திருந்தான் . அகம் என்பதே உறவும் பிரிவும்தான். குறிஞ்சியும் பாலையும். நடுவே உள்ள பிற மூன்று திணைகளும் குறிஞ்சியில் இருந்து பாலைக்கும் பாலையில் இருந்து குறிஞ்சிக்கும் செல்லும் வழிகள் மட்டுமே.
அந்த அகத்தைப் புறவயமான உலகின்மேல் ஏற்றிக்காட்டுவதே அகப்பாடல்களின் வழி. யோசித்துப்பாருங்கள், மிகமிக நுட்பமான இயற்கைச்சித்திரங்கள் சங்ககால அக இலக்கியங்களிலேயே உள்ளன. அந்தப் புறச்சித்திரங்கள் அகத்தின் வெளிப்பாடுகள். ஆகவேதான் அவை உயிருள்ள படிமங்களாக ஆகின்றன.
அதேபோல சங்க இலக்கியப் புறப்பாடல்களில்தான் அகவயமான உணர்ச்சிகள் பெருகிக் கொந்தளிக்கின்றன. மரணம், இழப்பு, தனிமை, கோபம் என மொத்தப் புறப்பாடல்களும் அகவய உணர்ச்சிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அகம் இல்லையேல் புறத்தின் சித்திரங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை.
இதோ என் கண் முன் விரிந்துள்ள எல்லாம் என் மனமே என்ற உணர்வு ஒருபக்கம். என் மனமென்பது இந்த புற உலகின் வெளியே என்ற உணர்வு மறு பக்கம். இந்த விளையாட்டை ஒவ்வொரு கவிதையிலும் எவன் வாசித்தெடுக்கிறானோ அவனே சங்கப்பாடல்களின் வாசகன். அவனுக்குரிய நுழைவாயில் குறுந்தொகையே.
பின்னர் தமிழில் அகம் புறம் என்ற இந்தப் பிரிவினை மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. நாமறியும் அறிதல் நான்கு தளங்கள் கொண்டது என்கிறது சைவ சித்தாந்தம். அகம், அகப்புறம், புறம், புறப்புறம்.
அகம் என்பது நம் தூய அகம். அது நம்முடைய சாமானிய அறிதலுக்கு அப்பாற்பட்டது. யோகத்தால் மட்டுமே அறியப்படுவது. அகப்புறம் என்பதே நாம் அகம் என்று சாதாரணமாக உணரக்கூடியது. அது நம்மைச்சூழ்ந்துள்ள புறப்பொருளால் அடையாளப்படுத்தப்பட்ட நம் அகம். அதையே நாம் சங்கப்பாடல்களில் அகம் எனக் காண்கிறோம்.
நாம் உணர்வாலும் அறிவாலும் அறியும் நம் அகம் அதன் எல்லாத் தோற்றங்களையும் வெளியே இருந்து பெற்றுக்கொண்ட வடிவங்களைக் கொண்டே அமைத்துக்கொண்டுள்ளது. மனதைப்பற்றிய எல்லாப் பேச்சுகளையும் இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்ட படிமங்களைக்கொண்டே நாம் சொல்கிறோம். மனம் வலித்தது என்கிறோம். நெஞ்சு இனித்தது என்கிறோம். இதயம் உருகியது என்கிறோம். இந்தப் புற அம்சம் இல்லாமல் சாதாரணமாக நம் அகத்தை அறியவும் முடியாது, கூறவும் முடியாது.
ஆகவேதான் சங்க இலக்கியங்கள் அகத்தைப் புறத்தே ஏற்றிச் சொல்கின்றன. கோபத்தை சிவப்பு எனக் காட்டுகின்றன. சோகத்தைக் கறுப்பாகக் காட்டுகின்றன. வெளியே நிகழும் இயற்கைச்செயலை ஆன்மாவின் அசைவாக ஆக்குகின்றன.
புறம் என சைவசித்தாந்தம் சொல்வதில் அகமும் உள்ளது. அகம் கலக்காத புறத்தைக் காண நம்மால் முடிவதில்லை. நம்முடைய உணர்ச்சிகள் கலந்த மலைகளை, கடலை, சாலையை, அறையை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நம் மனதுக்குக் குறியீடுகள்தான். அந்தப் புறத்தையே நம் புறப்பாடல்கள் காட்டுகின்றன.
அவற்றுக்கு அப்பால் உள்ளது புறப்புறம். தூய பொருள். அகம் தீண்டாத பொருள். அப்படி ஒரு புறப்புறம் இல்லை, அது மாயையே என்றுதான் வேதாந்தம் சொல்கிறது. சித்தாந்தத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு தூய பொருள் உண்டு. அதை அறிய முடியும். அதற்குத் தூய அகத்தை அடையவேண்டும். தூய அகமும் தூய பொருளும் முழுமுதல் சக்திகள்.
ஆம், நம் தத்துவ சிந்தனை ஒரு அதிதூய கவித்துவ அனுபவமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை சங்கப்பாடல்கள். நம்மைச்சூழந்திருக்கும் இந்தக் காடு விதைநிலமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இன்று நாம் பிரித்துப் பிரித்துச் சிந்திக்கும் அனைத்தும் குழந்தைகளுக்குரிய பெரும் பரவசத்துடன் கண்டடையப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை.
அந்த பிரக்ஞையுடன் நாம் வாசிக்கவேண்டும். தலைக்காவேரியில் மொத்தக் காவேரியையும் ஒரு கைப்பிடி நீரின் கொப்பளிப்பாக நாம் காண்கிறோம். நாம் நீராடும் இந்தப் பெருநதியின் ஊற்றுமுகத்தில் ஒரு கை அள்ளிப் பருகும் மன எழுச்சியுடன் நாம் சங்கப்பாடல்களை அணுகவேண்டும்.
இங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்கே நான் குறிப்பிட்ட இக்கவிதைகளை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாகக் குறுந்தொகை நூலைப் பிரித்துக் கண்ணில் பட்ட முதல் கவிதையை எடுத்துக்கொண்டேன். அவற்றைக்கொண்டே இந்த உரையை அமைத்தேன். ஆம் குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இத்தகைய நுட்பங்கள் உண்டு.
இவ்வளவு மென்மையான குரலில் பேசும் இத்தனை நுட்பமான கவிதைகள் அன்று எவ்வாறு பொருள்பட்டன? இன்று இவற்றை இவ்வளவு விரித்துரைக்க வேண்டியிருக்கின்றனவே?
அன்று இவற்றை எழுதிய வாசித்த சமூகம் சின்னஞ்சிறியதாக இருந்தது. ஒன்றுடன் ஒன்று ஒட்டி இறுகி வாழ்ந்தது. ஆகவே அவர்கள் ஒருவர் நினைப்பது இன்னொருவருக்குப் புரிந்தது. இன்று நாம் விரிந்து அகன்றுவிட்டோம். ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து வெகுதொலைவில் இருக்கிறோம். மெல்லிய குரல்கள் இன்று கேட்பதில்லை. கூக்குரல்கள் மட்டுமே கேட்கின்றன.
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
- கொல்லன் அழிசி
‘ஊர் தூங்கினாலும் நான் தூங்கவில்லை. எங்கள் வீட்டருகே ஏழில் மலையில் மயிலின் கால் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் பூத்துக்கனத்த கொம்பில் இருந்து உதிர்ந்த மலர்களின் ஒலியைக் கேட்டுக்கொண்டிருந்தோம்’ என்கிறாள் சங்கத்தலைவி.
அந்த மலர் உதிரும் ஒலியைக் கேட்கும் காதுகள் தேவை. சங்கப்பாடலை ரசிப்பதற்கு இந்தக் கூக்குரல்கள் நடுவே நாம் சற்றே செவிகூர்வோம். நம் மரபின் இந்த மெல்லிய குரலைக் கேட்போம்.
நமக்கும் நம் மரபுக்கும் இடையே வந்த மலர்கள் இந்த சங்கப்பாடல்கள். இவை நம்மைப் பிரிப்பதில்லை. நமக்கு நினைவூட்டுகின்றன, நம்மை ஏதோ ஒரு மாயப்புள்ளியில் நம் மரபுடன் இணைக்கின்றன.
நன்றி
[23-12-2012 அன்று சென்னையில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நிகழ்த்திய உரையின் எழுத்து முன்வடிவம்]

தலையங்கம்:மனித மிருகங்கள்!



First Published : 
10 Jan 2012 03:12:53 AM IST
Last Updated : 10 Jan 2012 03:30:18 AM IST
யானைகளின் பாதையில் தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள கதிரொளி மின்வேலிகளை அகற்றுங்கள்' என்று சென்னை உயர் நீதிமன்றம் சென்ற வாரம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை ஆர்வலர் கொடுத்திருந்த மனுவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். "மனிதன் தன் பேராசை காரணமாகவும் தன் சுகத்துக்காகவும் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக்' கண்டிக்கவும் செய்துள்ளது.
 இந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு இத்தனை ஆண்டுகளாக இந்தக் குற்றங்களைக் கண்டும் காணாமல் இருந்துவந்த தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் தரப்பட்டிருக்கிறது. இதைச் செய்யத் தவறும் வனத்துறை அதிகாரிகளைப் பொறுப்பாக்கித் தண்டனை விதிக்கவும் முற்பட்டால் மட்டுமே இந்தக் குற்றங்கள் ஒரு முடிவுக்கு வரும். அதுவரை, மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறந்து போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
 இத்தகைய மின்வேலிகள் பெரும்பாலும், தேயிலைத் தோட்ட நிறுவனங்களால் அமைக்கப்பட்டவை. இவை குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகள் நுழைவதற்கே ஆயிரம் தடைகள் என்றால், மற்றவர்களின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை. ஏதோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டும் பின்வாங்காமல் செயல்படும் ஆர்வலர்கள் மட்டுமே இன்னமும் யானைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
 இத்தகைய கதிரொளி மின்வேலிகளை அமைப்பதால், பாதிக்கப்படுவது ஏழைகள்தான். மின்வேலிகள் இருப்பதை உணர்ந்து மாற்றுப் பாதையை யானைகள் தேடும்போது அவற்றின் கோபத்துக்கு இலக்காகும் மக்கள் ஏழைகளாகவும், காட்டுவாசிகளாகவும் இருக்கின்றனர். மின்வேலி அமைத்த நிறுவனத்தினர் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. பொருள் இழப்பும்கூட அவர்களுக்குக் கிடையாது. ஏனென்றால், இறந்தவர் குடும்பங்களுக்கு கருணைத் தொகையை தமிழக அரசு அல்லவா வழங்கிக் கொண்டிருக்கிறது!
 யாரோ செய்யும் தவறுக்கு யானைகள் கோபமடைந்து யாரோ ஒருவரைக் கொல்ல, அதற்கு யாரோ ஒருவர் கருணைத் தொகை வழங்குவது என்கிற நிலைமையை மாற்றி, இந்தக் கருணைத் தொகை மற்றும் இழப்பீடுகளை, யானைப் பாதையை மறித்துள்ள தேயிலைத் தோட்டங்கள், நிறுவனங்கள்தான் ஏற்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினால் அது சரியான, நியாயமான செயலாக இருக்கும்.
 காலம்காலமாக யானைப் பாதையில் காட்டுவாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் யானைகள் அவர்களை வாரம் ஒருவராகக் கொன்று போட்டதில்லை. மின்வேலித் தடைகளும், மாற்றுப்பாதையைத் தேடும் ஆத்திரமும்தான் அவற்றை மதம் கொள்ளச் செய்கின்றன; மனிதர்களைக் கொல்ல வைக்கின்றன.
 யானைகள் ஊருக்குள் நுழைய முடியாதபடி குழி வெட்டும் திட்டம் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மின்வேலிகள் அமைத்தது எப்படித் தவறான செய்கையோ அதற்கு ஒப்பானது யானைகள் நடமாட முடியாமல் குழி பறிப்பதும்! மக்கள் பணத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கத்தான் அரசு இதைச் செய்கின்றது என்றாலும்கூட, இந்தப் பள்ளங்களில் யானைகள், குட்டியானைகள் விழுந்தால், அவை எழவே முடியாது. இதற்கும் மின்வேலிக்கும் என்ன பெரிய வேறுபாடு? மின்வேலி சட்டத்துக்கு அப்பாற்பட்டது. குழிவெட்டுதல் அரசே சட்டப்படி செய்வது. அவ்வளவுதான்.
 இந்தவேளையில், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள "யானை டாக்டர்' என்ற கதையை நினைவுகூர வேண்டியுள்ளது. நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைப் போலக் காட்டின் மீது மனிதன் அதிகாரம் செலுத்த முடியாது என்பதுதான் இக்கதையின் அடிப்படைக் கருத்து. இருப்பினும் இதில் யானைகள் பற்றி சொல்லப்படும் இரண்டு விஷயங்கள் சிந்திக்க வேண்டியவை.
 முதலாவதாக, காட்டுக்குள் குடித்துவிட்டு வீசப்படும் பீர், மது பாட்டில்களின் கண்ணாடிச் சில்லுகள், பல டன் எடையுள்ள ஒரு யானையின் கால்களுக்குள் மிக ஆழமாகக் குத்திக் கொள்ளும்போது அந்தப் புண் புரையோடி யானை நடக்க முடியாமல் சாய்ந்து, பட்டினியால் சாகும் வேதனையான நிலை. தன் காலில் குத்திய கண்ணாடிச் சில்லுகளை தானே எடுத்துப்போட்டு வழிநடையைத் தொடர மனித விலங்கினால் மட்டுமே முடியும்.
 இரண்டாவதாக, கிரேன்களை மனிதன் கண்டுபிடித்து பல டன் எடை கொண்ட பொருள்களை எளிதாகக் கையாளும் இன்றைய நவீன உலகில், எதற்காக யானைகளைச் சுமைதூக்கப் பயன்படுத்த வேண்டும்? எப்போதும் பசுமையான சூழலில் வாழவேண்டிய யானைகள் எதற்காக கோவில்களில் அலங்காரப் பொருளாக இருக்க வேண்டும்? என்கின்ற கேள்விகள்.
 கோவில்யானைகளை இல்லாமல் செய்துவிடுவது சாத்தியமில்லை. கோவில் விழாக்களும், யானையின் மீது சுவாமி ஊர்வலமும் கலாசாரத்தில் கலந்துவிட்டதால் இதைத் தவிர்க்க இயலாது. ஆனால், யானைகளைச் சுமை தூக்கப் பயன்படுத்தாமல் இருக்கச் செய்வதும், காடுகளில் பீர் பாட்டில்களை உடைக்காமல் இருக்கச் செய்வதும் சாத்தியம்.
 யானைகள்-மனிதர்கள் மோதல், சாதல் முடிவுக்கு வர வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி, அவற்றை அதன் வழியில் வாழ விடுவதுதான். அதன் இனப்பெருக்கம் மற்றும் இயல்பான வாழ்க்கை, நடமாட்டத்துக்கான இடம் ஆகியவற்றிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவதுதான். 

பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை


                                                                                                                                         -  

 
manikkavachakarஆன்ம விழிப் பாவைகள்:
மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. ஆண்டாள் அருளியது திருப்பாவை. முன்னது திருவண்ணாமலையில் மலர்ந்தது. பின்னது ஸ்ரீவில்லிப்புத்தூரில் மலர்ந்தது. இரண்டுமே இசைப் பூங்கொத்துக்கள். திருவெம்பாவையில் 20 செஞ்சொற்சித்திரங்கள் மிளிர்கின்றன. திருப்பாவையில் 30 செஞ்சொற்சித்திரங்கள் ஒளிர்கின்றன.
மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர். பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர். கல்வியும் ஒழுக்கமும் மிக்கவர். மன்னரால் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டமும் பெற்றவர்.
ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த அருட்செல்வி. நந்தவனத் துளசியருகே விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப் பட்ட அற்புதக் குழந்தை. இதயத் துடிப்பெல்லாம் கடவுட் தாகமாக வளர்ந்த சின்னஞ்சிறுமி. பெருமை மிக்க பெரியாழ்வாரிடம் வளர்ந்தமையால் ஆழ்வார் திருமகளார் என்னும் நற்பெயரும் பெற்றார்.
மன்னருக்காகக் குதிரைகள் வாங்கச் சென்று திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர். குதிரைக்குரிய பணத்தை அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார். கோதையோ கடவுளுக்குக் கட்டிய மாலையைத் தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாசாரத்தில் பிழைபட்டாள். மாணிக்கவாசகரைச் சிவபிரான் ஆட்கொண்டார். சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார். இருவருமே இறை ஒளியில் கலந்த பெருமையினர். இருவருமே இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்களில் வழங்கிய அற்புதமான திவ்ய ஞான தீபங்கள்.
திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை. நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை. பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மீகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அவ்விரு விழிகளின் ‘பாவைகளாக’ ஒளிர்பவை.
’உத்திஷ்டத ஜாக்ரத’ என்னும் உபநிடதக் குரல்:
துயில் நீக்கம் என்னும் ஆன்மீக மையம் கொண்ட ஆன்மீக அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன. சிறுமியர் தம்மொத்த வயதினரை அதிகாலையில் எழுப்புகின்றனர். நீராட அழைக்கின்றனர். துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை. துயில் எழுப்புதல் ஆன்மாவின் துயில் நீக்கம் உணர்த்துகின்றது. ஆன்மீக அருளாளர்கள் அனைவரும் அழைத்த அழைப்பின் சாரம் இதுவே. ‘உத்திஷ்டத ஜாக்ரத’ என்னும் உபநிடதக் குரலுக்கு மாணிக்கவாசரும் ஆண்டாளும் தந்த செந்தமிழ்ச் சொல்லோவியங்கள் இவை. துயில் எழுப்புதல் என்னும் ஆன்ம விழிப்பூட்டல் உலக இலக்கிய அரங்கில் இத்துணை அழகியல் (aesthetic) நலத்துடன் பதிவுற்றுள்ளதா என்பதனை அறிதல் வேண்டும். பாவைப் பாட்டுக்கள் நிச்சயம் தமிழ்ப் பெருமிதங்களில் முக்கியமானது.
andal1வைகறை வாசலின் இன்சொற்கோலங்கள்:
‘எழுமின் விழுமின்’ என்னும் உபநிடதக் குரலுக்கு மணிவாசகரும், ஆண்டாளும் தந்த இன்னமுதப் பாவைப் பாடல்களின் நுழைவாயில் நாடகப் பாங்கினது.
உள்ளே துயில்வோர்; வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை. எழுப்பும் குரலிலோ நட்புரிமை. சிலபோது எள்ளல், சிலபோது நகையாடல், சிலபோது செல்லக் கடிந்துரைகள்; ஆனால் எப்போதும் நேயமிகு நெருக்கம் (intimacy).
”வன்செவியோ நின்செவிதான்?” (1*) என்று கேட்பவள் திருவெம்பாவைத் தோழி. “ஊமையோ அன்றிச் செவிடோ?” (9) என்று வினவுபவள் திருப்பாவைத் தோழி.
”ஒள்நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?” (4) என்பது திருவெம்பாவைக் குரல். “எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?” (15) என்பது திருப்பாவைக் குரல்.
“நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றவள் நாணாமே போனதிசை பகராய்!” (5) என்பது திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை. “கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?” (10) என்பது திருப்பாவையின் செல்லக் கடிந்துரை.
இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் பாவைப் பாட்டுக்களின் நுழைவாயில் வரவேற்பு இனிமைகள்; அழகியல் ஆர்வமும், ஆன்மீகத் தேடலும் உடையவர் தம் உள்ளத்தை எளிதில் பிணிக்கும் எழிலார்ந்த கோலங்கள்; ஆழ்ந்து நோக்குவோர்க்கோ லௌகீகத் துயிலுணர்த்தும் அற்புதக் குரல்கள்!
[*: அடைப்புக் குறிப்புக்குள் உள்ளவை திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல் எண்கள்]
நீராடல் சித்திரச் சோலையும் நோன்பின் சித்திரகூடமும்:
இரு பாவைப் பாடல்களுக்கும் அமைந்த பொதுமையம் ஆழமானது. எனினும் அவற்றிடையே நுட்பமான வேறுபட்ட பரிமாணங்களும் (dimensions) உள. நீராடலின் சித்திரம் திருவெம்பாவையில் விரிகிறது. நோன்பின் சித்திரம் திருப்பாவையில் விரிகிறது.
வாழ்க்கையை இனிய நோன்பின் புனித நீராடலாக அனுபவிக்கும் ஆழப்பார்வையின் விகசிப்பாகவே திருவெம்பாவை ஒளிர்கின்றது. இயற்கை அரங்கின் அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. பொய்கையின் கருங்குவளையும் செந்தாமரையும், நீலமேனியாள் உமையையும் செந்தழல் வண்ணன் சிவனையும் நினைவூட்ட – அங்கம் குருகினம் அம்மையின் கைவளையையும், பின்னும் அரவம் அப்பனின் பாம்பணியையும் நினைவூட்ட – தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தல் நீராடும் பொய்கையினையே பரம்பொருட்சுனை ஆக்குகின்றது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடு ..
என ஆனந்தமடைகிறது பாடல். இப்பார்வையின் பரவசத்தில் இன்னும் ஆழங்காற்படும்போது வாழ்க்கை அரங்கே இறைத்தடாகமாகின்றது. வாழும் வாழ்க்கையே பரமானந்த நீராடல் ஆகின்றது. பாய்ந்து பாய்ந்து – பாடிப் பாடி – குடைந்து குடைந்து – ஆடி ஆடி – தோழியருடன் ஆனந்த நீராடும் வைகறை இனிமையே – திருவெம்பாவையின் ஞானமொழியில் – ஆன்மீக வாழ்க்கையின் அற்புதக் குறியீடாகின்றது.
மாமத யானை மரத்தில் மறைந்திடும் அழகியல் நுட்பமிது; பார்முதல் பூதம் பரத்தில் மறைந்திடும் ஆன்மவியல் பரவசம் இது.
riverbath1
வாழ்க்கையை உன்னதமான இறைக்காதல் நோன்பின் சித்திரகூடமாகக் காணும் காட்சிக்கு இட்டுச் செல்கிறது திருப்பாவை. ”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்” என்று தொடங்குகிறது கோதையின் பாவை. நெய்யும் பாலும் நீக்கிடல், மலரும் மையும் ஒதுக்கிடல், செய்யத் தகாதன தவிர்த்திடல் – என்னும் விரத நெறிச் சித்திரங்களை அது தருகிறது. “குள்ளக் குளிர்ந்து நீராடல்” இங்கு விரத அங்கமே. துயில் எழுப்பும் குரலே நீட்சி கொள்கிறது. நந்தகோபன் மாளிகைக் காவலனை உணர்த்தி – நந்தகோபனைத் துயிலெழுப்பி – அன்னை யசோதையைத் துயிலெழுப்பி – பூவைப்பூ வண்ணனைத் துயிலெழுப்பி – அவனைப் போற்றி மகிழ்கின்றது கோதையின் பாவை. நோன்பின் நிறைவில் அவன் அருளால் பற்ற நல்லுடையும் பல்கலனும் அணிந்திடும் குதூகலம் அங்குண்டு. “மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்து” உண்ணும் பேறு உண்டு. அனைத்துக்கும் மேலாக, சிங்கமென நடந்துவந்து கண்ணன் சிங்காதனமிருந்து அருளும் பேரருட் காட்சியும், பறை பெற்றுய்தல் என்னும் கைங்கரியப் பிராப்தியின் பேரானந்தமும் சித்திரகூடச் சிகரக் காட்சியாகின்றன.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று..
என்பதுவே வாழ்க்கையையே நோன்பாகக் காணும் கோதைப் பார்வை.
திருவெம்பாவையின் சிவமணமும், திருப்பாவையின் மால்மணமும்:
shivaperuman17இறைமுகட்டின் புகழை இடையறாது ஒலிக்கும் இன் அருவி ஓசை பக்தி இலக்கியங்களின் பொதுமை. இறைப்புகழ் ஒன்றே பக்தர் நோக்கில் ‘பொருள்சேர் புகழ்’. “போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யாதலே” நோக்கம். எனவே “என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் – ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே” என்னும் நெகிழ்வொலியை அனைத்துப் பக்தி இலக்கியங்களிலும் பொதுப் பண்பாகவே காணலாம்.
மாணிக்கவாசகரின் திருப்பாவை சிவமணம் கமழ்வது. ஆண்டாளின் திருப்பாவை மால்மணம் கமழ்வது. மத்திட்டுக் கடைந்த தயிரில் மிதக்கும் வெண்ணெய்த் திரட்சியாக இறைமுன்பு நின்று நெகிழும் போற்றித் துதிகளை இரு பாவைகளும் ஏந்துகின்றன.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்
எனப் பாடித் துதிக்கின்றது திருவெம்பாவை.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இறங்கேலோர் எம்பாவாய்
எனப் பாடித் துதிக்கின்றது திருப்பாவை.
vishnuநெஞ்சம் நெகிழ்தலே பக்திவயல்களின் வளமை ஆதாரம். இறைப்புகழ்த் தொடர்களே நெஞ்சம் நெகிழ்தலின் ஊற்றுக்கண்கள். இறைப்புகழ்த் தொடர்கள் தத்துவக் களத்திலோ – புராணக்களத்திலோ – உரிமை கெழுமிய உறவுப் பிணைப்பிலோ – அல்லது இவை மூன்றும் விரவிய இனிய சுரப்பிலோ கிளர்ந்தெழுகின்றன. இரு பாவைகளும் இவ்வகையான இறைப்புகழ்த் தொடர்களால் மனம் பிணிக்கின்றன. மனம் நெகிழச் செய்கின்றன. இருபாவைகளின் சிவமணமும், மால்மணமும் ஒன்றையொன்று வெல்லும் வண்ணம் உன்னதம் பெறுகின்றன.
”தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்” (2) என்றும், “ஆரழல்போல் செய்யா, வெண்ணீறாடி – மையார் தடங்கண் மடந்தை மணவாளா” (11) என்றும், ”செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை – அங்கண் அரசே அடியோங்கட்கு ஆரமுதே”(11) என்றும், “கண்ணார் அமுதமுமாய் நின்றான்” (18) என்றும், “என்னானை என்னரையன் இன்னமுது” (7) என்றும், இன்னும் பலவாறாகவும் தித்திக்கும் தொடர்களில் சிவமணம் தருகின்றது திருவெம்பாவை.
”ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் – கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்” (1) என்றும், “ஆழி மழைக்கண்ணா” (4) என்றும், “மாயன் மணிவண்ணன்” (16), ”சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” (14) என்றும் பலவாறு புகழ்கின்றது திருப்பாவை. “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை – தூய பெருநீர் யமுனைத் துறைவனை – ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை – தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை” (5) என வேகப் படிக்கட்டுகளேறித் துரத்தித் தொட முயல்கிறது கோதை தமிழ்.
மழைக்காட்சி:
மழைக்காட்சியின் மனக் குளிர்ச்சியில் இரு பாவைகளும் பெறும் பரவசமும் குறிக்கத் தக்கது. இறையருளின் சாசுவதக் குறியீடு மழை. விண்ணும் மண்ணும் இணையும் அழகிய மழைக்காட்சி அழகியலாரின் கலைக்கண்களுக்கு என்றுமே பெருவிருந்து. எங்குமே பெருவிருந்து. உலகின் அனைத்து மொழிகளிலும் இதன் ஈர்ப்பும் பதிவும் உண்டு. ஆன்மீகத் தளம் கொண்ட அகப்பார்வையிலும் மழைக்காட்சி அற்புத விருந்தேயாகும். உலக ஆன்மிக இலக்கியச் சொல்லோவிய அருங்காட்சியகத்துக்கு இரு பாவைகளும் தந்த அற்புதச் சித்திரங்கள் இவை.
கார்மேகத்தில் உமையவள் திருமேனி அழகையும், மின்னல் தெறிப்பில் அவளது இடையொளிக் கீற்றையும், இடிமுழக்கில் அன்னையின் பொன்னஞ் சிலம்போசையினையும் காண்கிறது திருவெம்பாவை.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். (16)
என்பது திருவெம்பாவைப் பாடல்.
monsoon_clouds_near_nagercoil
திருப்பாவையோ மேகநிறத்தில் திருமாலின் திருமேனியினையும், மின்னல் சுழற்சியில் திருக்கைச் சக்கர அருள் சீற்றத்தையும், இடுமுழக்கத்தில் பாஞ்சஜன்யத்தின் பேரொலியையும், வீசும் மழைச் சரங்களில் சார்ங்கக் கணைப் பொழிவையும் கண்டு பரவசங் கொள்கிறது.
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4)
என்பது திருப்பாவைப் பாட்டு.
‘உவமை என்னும் தவலருங் கூத்தி’ பாங்குற ஆடும் பல்வண்ணக் கூத்தில் ஒன்றே இப்பாடல்களின் உத்தியாக மிளிர்கின்றது என்னும் ‘உத்தி ஆய்வு – மனச்சித்திர எல்லை’ தாண்டிய ஸஹ்ருதய நோக்குடைய அனுபூதித் தேடலார்க்கே இப்பாடல்களின் விஸ்வ விசாலமும், ஆன்மிக ஆழமும் வசப்படும். பழகிய பாதையின் குறுகிய ஓடையில் சுழலும் எந்திரச் சிந்தனைத் தளைப்பட்டு ஆன்மிகம் நிராகரிக்கும் நுனிப்புல்லர்க்கும், கலகப்பிரியச் சித்தாந்த நிறக் கண்ணாடியர்க்கும் இங்கு நுழைதிறம் வாய்ப்பதில்லை.
ரிச்சர்ட் பாக் எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீகல் (Jonathan Livingston Seagull – Richard Bach) ஓர் அழகிய சுட்டு. அலைதழுவும் கடற்கரையில் தாம் பறப்பதெல்லாம் ஊனும் மீனும் தேடவும் தின்னவுமே என்பது பெரும்பான்மைக் கடற்பறவைகளின் பார்வை. ஊனும் மீனும் தின்பது வான்வெளி நீந்தலின் உயர்சுகத்துக்காக என்பது நாயகப் பார்வையின் பார்வை. பசியாற்றும் தரையிறக்கம் இலட்சியமன்று; வான் ஏறும் உயர்பறப்பே இலட்சியம். இப்பார்வைத் தகுதியே பாவை மழைப்பாட்டுக்கும் தேவை. எனில் படிப்பவர் பாட்டில் நுழைவர்; பாடல் படிப்பவருள் நுழையும்.
திருவெம்பாவையின் ஞானச் சிறகும், திருப்பாவையின் காதல் சிறகும்:
மாணிக்கவாசகரின் பக்தி நெகிழ்வில் ‘ஞானக் காட்சிகளே’ ததும்புகின்றன. ஞானப் பார்வையின் சொற்சித்திரங்களே திருவெம்பாவையின் பரம்பொருட்காதல் அனுபவத்தை இனிமை செய்கின்றன. “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் – சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள்தடங்கண் மாதே வளருதியோ?” (1) என்னும் தொடக்கமே ஆதியந்தமில்லா அற்புதச் சோதியாகப் பரம்பொருளைச் சுவைக்கிறது. “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் – போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே” (10) என்னும் போது (அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் எனப்) புராண மொழியில் தரப்படும் ஏழுநிலைத் தாழ்மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதமலர் அழகும்; எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சிகொண்டு நிமிரும் போதார் புனைமுடி நலமும் ஞானச் சித்திரங்களாகவே அகம் நுழைகின்றன. அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை நன்கு உணரலாம்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (9)
என்னும் போதும் பரம்பொருளின் காலாதீதச் சித்திரமே மனம்கொள எடுத்துரைக்கப் படுகின்றது.
cosmos”விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளை” (4) என்னும் போதும், “ஆர்த்தபிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” (12) என்னும் போதும், “பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் – விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” (18) என்னும் போதும் ஞானச் சுவையே காதற் சுவையாகின்றது.
ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம். பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம். அழகியல் மீதூர்ந்த அமுதச் சித்திரங்களும், புராணக் கால்வழி எழும் புனைவுச் சித்திரங்களும் அவள் ஆழ்மனம் உணர்ந்த அற்புத சத்தியங்கள்; அவளது பாவனா சக்தியின் அற்புத தரிசனங்கள்.
கோதைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி ஆகின்றது. தோழியர் ஆயர் கன்னிகையர் ஆகின்றனர். வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை ஆகின்றது. அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணனாகின்றான். ‘இடைப்பேச்சும் இடைநடையும்’ இயல்பாகின்றன. தானே இடைச்சிறுமி ஆகின்றாள்.
கோதை வாழ்வது “சீர்மல்கும் ஆய்ப்பாடி” (1). அங்கு புழங்கும் நெய்யும் பாலும் விரதவிலக்குப் பெறுகின்றன (2). சூழநிற்பவை “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” (3). “காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து” ஆய்ச்சியர் மத்தினால் எழுப்பும் தயிர் அரவம் (7)ஒலிக்கின்றது. எருமைகளைப் பனிப்புல்லுக்குச் சிறுமேய்ச்சலிடும் காட்சியும் (8), எருமை தன் கன்றுக்கிரங்கிப் பால்சோர நனைத்து இல்லம் சேறாகும் காட்சியும் (12) அங்கு காணலாம்.”பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்து” (27) உண்ணல் என்னும் குதூகல மாட்சியும் அங்கு உண்டு.
இந்த ஆயர்பாடி நாயகன் கண்ணன். அவன் “ஆயர்குலத்து அணிவிளக்கு” (5). அவனை “ஓங்கி உலகளந்த உத்தமன்” (3) என்றும், “பேய்முலை நஞ்சுண்டு – கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி – வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து” (6) என்றும், “புள்ளின் வாய் கீண்டான்” (13) என்றும், “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் – ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான்” (25) என்றும் பலவாறு புராணக் கீற்றுகளால் புனைந்து மகிழ்கிறாள் ஆண்டாள்.
புராணக் கீற்றுகள் மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ ஒன்றுக்கொன்று தாழ்ந்ததன்று; பறக்கும் எழிலோ ஒன்றுக்கொன்று குறைந்ததன்று. வாதவூரரும், வில்லிப்புத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாடல்களில் நாம் காண்பதெல்லாம். நாம் ருசிப்பதெல்லாம் ஆன்மீக அமுதவளமே.
என்.எஸ்.பி. என்று அன்புடன் அழைக்கப் படும் பேராசியர் என்.சுப்பிரமணியம் அவர்கள் நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆன்மீக ஈடுபாடும் கொண்டவர். ”வாழ்வியல் சிந்தனைகள்” (விவேகானந்த கேந்திர வெளியீடு) என்ற நூலின் ஆசிரியர். விவேகவாணி (விவேகானந்த கேந்திர இதழ்) உள்ளிட்ட ஆன்மிக, இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

அறிவாற்றல் மரபுப் பண்பா?


பிரகாஷ் சங்கரன்

நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?”

உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நிலை அமைந்தால் எல்லோராலும் அறிவாற்றலைப் வளர்த்துக் கொள்ள முடியும் என்று வாதிடப்பட்டது.
மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு உயிரியின் உடற்கூற்றியல் (Anatomy) மற்றும் உயிர்செயற்பாட்டியல் (Physiology) ரீதியான எல்லாப் பண்புகளையும் மரபணுக்களே தீர்மானிக்கின்றன, மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதுவரை வெளிப்படுத்தப்பட்ட உயிரியல் பண்புகளையே (Phenotype) ஆராய்ந்து கொண்டிருந்த உயிர் அறிவியல், அப்பண்புகளைக் குறிக்கும் மூலமாகிய மரபணுத் தொகையின் (Genotype) கட்டமைப்பை ஆராயும் மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்களின் வழியாக புதுப்பாய்ச்சல் பெற்றது. மரபுப் பண்புகளையும், அதன் மூலமாகிய மரபணுக்களின் பங்களிப்பையும் பற்றிய ஆய்வு எல்லாத் துறைகளிலும் (பரிணாமவியல், மரபியல், உயிர்வேதியல், நரம்பியல், உளவியல், நோய்க்கூறியல், நடத்தை மரபியல் மற்றும் பல…) வேகம் பெற்றது.
அறிவாற்றலை மரபியல், நரம்பியல் மற்றும் நடத்தை மரபியல் (Behavioural genetics) ஆகிய துறைகளின் வாயிலாக உயிரியல் ரீதியாக அணுகலாம். அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறைகள் அறிவாற்றலைப் பற்றி என்ன சொல்கின்றன?
அறிவாற்றல்
அறிவாற்றல் மரபுப் பண்பா என்ற கேள்விக்கு முன், அறிவாற்றல் என்று குறிப்பிடப்படுவது எது? என்று தெரிந்து கொள்ளுதல் முக்கியம். அறிவாற்றல் (Intelligence) என்பது அறிதல் திறன் (Cognition), சிந்தித்தல், சமயோசிதம், கற்றல், வெளிப்படுத்துதல், தொடர்புகொள்ளல், திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்ற சிந்தனைச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது.
உளவியலில் பொதுவான அறிவாற்றல், பாய்ம மற்றும் படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் (Fluid and Crystallized Intelligence) என இரண்டாக வகுக்கப்படுகிறது. இதில் பாய்ம அறிவாற்றல் என்பது பெற்றுக்கொண்ட அறிவாக அல்லாது புதிய சூழ்நிலைக்கும், சிக்கலுக்கும் ஏற்றவாறு தர்க்கபூர்வமாக சிந்தித்து செயல்படுதலாகும். கணித, அறிவியல், தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதில் திறன் பெற இது மிகவும் முக்கியம். படிகமாக்கப்பட்ட அறிவாற்றல் என்பது திறமையையும், அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தும் ஆற்றல். ஆழ்ந்து அகன்ற பொது அறிவு, பரந்த சொல்வங்கி (Vocabulary), தகவல்களை நினைவிலிருந்து மீட்டுப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இதன் பங்கு அதிகம்.
நரம்பு மண்டலத்தின் தலைமையகமான மூளை என்னும் உயிரியல் உறுப்புதான் அறிவாற்றலின் மையம். தத்துவ ஞானி பிளாடோ மூளையே அறிவாற்றலின் மையம் என்று ஊகித்தார், ஆனால் அவரது சிஷ்யரான அரிஸ்டாட்டில் இதயமே அதன் மையம் என்று கருதினார், காலன் (Galen) என்கிற கிரேக்க ஹிப்போகிராட்டெஸ் வழி மருத்துவர் தான் சண்டையில் அடிபட்டு மூளை சிதைந்த போர்வீரர்களின் சிந்தனைப் புலம் பாதிக்கப்படுவதை கவனித்து, அறிவுச் செயல்பாடுகளில் மூளையின் முக்கியத்துவத்தை முதலில் உறுதி செய்தார்.
பரிணாமத்தின் பாதையில்
பரிணாமத்தின் மிக நீண்ட பாதையில், மனிதனுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் பொது மூதாதையான ஒரு பேரினக் குரங்கிலிருந்து மனிதன் தன் நெருங்கிய இனமான சிம்பன்ஸிகளிடம் விடைபெற்றுப் பிரிந்து, தனியாகத் தன் பயணத்தைத் துவங்கி இன்று கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்த நீண்ட பரிணாமப் பயணத்தில் இதுவரை மனிதனின் மரபணுத் தொடர் (DNA sequence) சிம்பன்ஸிகளிடமிருந்து சற்றேறக்குறைய வெறும் 1.5% மட்டுமே வேறுபடுகிறது1 (இதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு –மரபணு வேறுபாடு எப்படி கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை வைத்து).
(Credit: Image: Edwin Hadley, University of Illinois.)
மரபணுத் தொடரில் 99% ஒற்றுமை இருந்தாலும் எது மனிதனை மனிதனாகவும், குரங்கைக் குரங்காவும் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு 2002-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வு முடிவு கூறிய பதில் மிக முக்கியமானது - மனித மூளையில் உள்ள மரபணு செயல்பாடு (Gene activity) தான்!2 இத்தனைக்கும் மனிதனுக்கும், சிம்பன்ஸிக்கும் மூளையில் வெளிப்படும் மரபணுக்களில் (Gene expression) உள்ள வித்தியாசம் மற்ற உள்ளுடல் அங்கங்களில் – அதாவது இதயத்திலோ, கல்லீரலிலோ, சிறுநீரகத்திலோ வெளிப்படும் மரபணுக்களை விடக் குறைவு தான்.(3) ஆனால் அது தான் மனிதனின் அறிவாற்றல் சார்ந்த பரிணாம வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மரபணுக்களின் பண்பு வெளிப்பாட்டில் ஆர்.என்.ஏ படியாக்கல் (Transcription) என்ற இடைநிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் சில காரணிகள் ஆர்.என்.ஏ ‘படியாக்கல் காரணிகள்’ (Transcription factors) என்று குறிக்கப்படும். இவற்றின் பங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது என்று நிறுவப்பட்டுள்ளது.(4) உதாரணமாக, ‘ப்ரோடோகாதெரின்’ (Protocadherin) என்கிற புரதத்தின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணியைச் சொல்லலாம். இந்த ப்ரோடோகாதெரின் மூளை வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது.
பெருமூளை அரைக்கோளங்களைச் (Cerebral hemisphere) சுற்றியுள்ள மடிப்புகள் நிறைந்த சாம்பல் நிறப் பொருள் (Grey matter) என்றழைக்கப்படும் புறணி (Cerebral cortex) மற்ற பேரினக்குரங்குகளை விட மனிதனுக்கு மூன்று மடங்கு அளவில் பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். (மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis)). இந்த சாம்பல்நிறப் பகுதி தான் சிந்தனை, விழிப்புணர்வு, மொழி, கற்றறிதல், பகுத்தறிதல் போன்ற மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தும் முக்கியப் பண்புகளை நிர்ணயிக்கிறது. சரி, இங்கே மரபணுக்களுக்கு என்ன முக்கியத்துவம்? என்று கேட்டால், பதில் ‘மிக முக்கியமான பங்கு மரபணுக்களுக்கு உண்டு’ என்பதே. உதாரணமாக HAR1F என்னும் ஒரு மரபணு மனிதக் கருவளர்ச்சியின் ஏழாவது வாரத்தில் மிக அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மரபணு நேரடியாக எந்தப் புரதத்தையும் குறிப்பதில்லை, பதிலாக மூளைப் புறணியில் (Cortex) நியூரான் அடுக்குகளை உண்டாக்குவதிலும், மூளையின் வடிவமைப்பைக் கட்டமைப்பதிலும் பங்குபெறும் இதர புரதங்களுக்கான மரபணுக்களின் வெளிப்பாட்டை மேம்படுத்துகிறது. மொத்தம் 49 மரபணுப் பகுதிகள் இவ்வாறு மனிதர்களில் சிம்பன்ஸிக்களை விட மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது5. அதில் ஒன்று தான் மேற்கண்ட HAR1F (மனிதர்களில் முடுக்கிவிடப்பட்ட பகுதி - Human Accelerated Region – HAR) மரபணு. மீதமுள்ள 48 பகுதிகளையும் அவற்றின் பண்புகளையும் கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மனித இனத்தில்
இதுவரை மனிதன் அபாரமான மூளை வளர்ச்சி பெற்று தனது நெருங்கிய இனமான சிம்பன்ஸிக்களிலிருந்து வேறுபட்டு பரிணாமத்தின் பாதையில் விரைவாக முன்னேற மரபணுக்களின் பங்கையும் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இனி, மனித இனத்துக்குள் அறிவாற்றலை குறிக்கும் ஒரு காரணியாக மரபணுக்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
‘நவீன மரபியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆராய்ச்சியாளரான மெண்டல் (Gregor Mendel), பட்டாணிச்செடிகளை வைத்து ஆராய்ந்து, சில பண்புகள் மரபாக தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன என்ற தனது புகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கு ஒரு வருடம் முன்பே 1865 ல் ஃபிரான்ஸிஸ் கால்டன் (Francis Galton) என்பவர் உயர்தள அறிவாற்றலும் மற்றும் சில திறன்களும் மனிதர்களில் மரபுப்பண்பாகக் கடத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்து இரண்டு ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிட்டார்.
இவர் தான் “Nature Vs Nurture” என்கிற பதத்தையும் அந்த விவாதத்தையும் தொடங்கிவைத்தவர். கால்டனின் கண்டுபிடிப்புகளால் உந்தப்பட்டு ஸ்பியர்மேன் (Charles Spearman) என்பவர் பொதுவான அறிவாற்றல் காரணி (Genaral Intellingence factor, g ) என்கிற பதத்தை முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி வாய்மொழி (Verbal), எண்கணிதம் (Arithmetic), விழிப்புலம் (Visual), முப்பரிமாண சிந்தனை (Three dimensional thinking) போன்ற தனித்தனியான அறிவுத்திறன் சோதனைகளில் சிறப்பாக தேர்வுபெறுபவர்கள் இவற்றுக்குள் தொடர்புறக்கூடிய மைய இழையாக அடிப்படையான (அ) பொதுவான ஒரு அறிவாற்றல் உடையவர்களாக இருபார்கள். இந்த ‘அறிவாற்றலின் சாரம்’ அல்லது அடிப்படையான அறிவாற்றல் மரபாகக் கடத்தப்படக்கூடியது. இந்த கருதுகோளுக்கு எதிராக சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் இதுவே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் ஆகும்.
மூலக்கூறு உளவியல் மற்றும் நடத்தை மரபியல் துறைகளில் சில பண்புகளின் மரபுத்தன்மையை ஆராய்ச்சி செய்ய இரட்டையர்களையே மாதிரிகளாகக் கொள்வது வழக்கம். ஒருவித்து இரட்டைகளில் (Monozygotic twins) இருவருக்கும் மொத்த மரபணுக்களும் 100% ஒத்ததாக இருக்கும். இருவித்து இரட்டைகளில் (Dizygotic twins) 50% மரபணு ஒற்றுமை இருக்கும். எனவே ஒரே சூழ்நிலையிலோ அல்லது பிரிந்து வெவ்வேறு சூழ்நிலைகளிலோ இந்த இரட்டைகள் வளர நேர்கையில், அவர்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது நீடிக்கும் ஒற்றுமைகளை ஆராய்வதன் மூலமாகப் பண்புகளை நிர்ணயிப்பதில் மரபணுக்களின் பங்கையும், சூழ்நிலை, சமூக தாக்கத்தையும் அறியலாம். அதே போல அல்ஸைமர் (Alzheimer’s), பார்க்கின்சன் (Parkinson’s), ஹண்டிங்டன் (Huntington’s) போன்ற நரம்பு குன்றல் நோய்கள் (Neuro degenerative diseases) அல்லது ஸ்கீசோஃப்ரீனியா (Schizophrenia) போன்ற மனநல குறைபாடுள்ளவர்களின் மரபணுவை (DNA), ஒத்த வயதும் சூழலும் கொண்ட ஆரோக்கியமானவர்களின் மரபணுவோடு ஒப்பிட்டு, ஆரோக்கியமானவர்களிடம் இல்லாத - அதே சமயம் மூளை குன்றல் நோயுள்ளவர்களிடம் இருக்கிற மரபணு மாற்றங்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாக மூளைச் செயல்பாட்டுக்கும், அறிவாற்றலுக்கும் உள்ள மரபுக் காரணிகளை விளக்கும் ஆராய்ச்சிகள் ஏராளமாக நடந்துள்ளன. இவை ஒரு மறைமுகமான வழிமுறை தான்.
நேரடியாக அறிவாற்றலுக்கான மரபணுக்காரணிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட ஒற்றை மரபணுவும் அறிவாற்றலை நேரடியாகக் குறிப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அறிவாற்றல் என்பது பல்வேறு திறன்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது. அது ஒரு சிக்கலான பண்பு. எனவே பல்வேறு மரபணுக்கள் (Polygenic) தொடர்புடையதாக இருக்கும், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த மரபணுக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அறிவாற்றலோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருந்தாலும் சமீபத்திய சில முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளை தெரிந்துகொள்வது இந்தத் தலைப்பின் நோக்கத்திற்கு உதவும். எடுத்துக்காட்டாக, CHRM2 என்னும் மரபணுவின் புரதம் நரம்பணுக்கள் மின்னதிர்வை ஏற்று சமிக்ஞைகளை கடத்துவதில் பங்கு வகிக்கிறது. கற்றல் திறன், ஞாப சக்தி ஆகியவற்றுக்கு முக்கியமானது. 2007ம் ஆண்டு 200 குடும்பங்களைச் சேர்ந்த 2,150 தனிநபர்களின் CHRM2 மரபணுவில் உள்ள ‘மரபணு அடையாளங்களையும்’ (Genetic markers) அவர்களின் அறிவுத்திறன் அளவீட்டு சோதனையில் (IQ test) பெற்ற மதிப்பெண்களையும் ஒப்பிட்டதில், CHRM2 மரபணு அறிவாற்றல் திறனில் தாக்கம் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது (6). இதே மரபணு இதற்கு முன்பும் பலமுறை பல்வேறு நாடுகளில் செய்த ஆய்வுகளிலும் அறிவுத்திறன் அளவீட்டுடன் உள்ள தொடர்பு நிரூபிக்கப் பட்டுள்ளது. இன்னொரு நரம்பு மண்டல மரபணுவான STX1A, நரம்பணுக்களின் மின்வேதி சமிக்ஞை பரிமாற்றத்தில் பங்குபெறும் மிக முக்கியமான புரதத்தைக் குறிப்பது. STX1A மரபணுவின் வெளிப்பாடு வில்லியம்ஸ் ஸிண்ட்ரோம் என்னும் மனவளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளவர்களிடம் மிகக் குறைவாக உள்ளதும், அது அவர்களின் குறைவான அறிவுத்திறன் அளவீட்டுடன் (IQ-60) மிகவும் தொடர்புள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது7. சாதாரணமான ஒரு மனிதனின் அறிவுத்திறன் அளவீட்டு சராசரி 100 இருக்கும் (அதிகபட்ச IQ விற்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற மரிலின் சாவன்துக்கு அவருடைய பத்தாவது வயதில் IQ-228 இருந்தது!). இதன் மூலம் அறிவாற்றலுக்கும் மரபணுவுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளது என்பது வில்லியம்ஸ் ஸிண்ட்ரோமுக்கும் STX1A மரபணுவுக்கும் உள்ள தொடர்பின் வழியாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் (ஆகஸ்டு, 2011) வெளியிடப்பட்ட முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை மரபணுக்களுக்கும் அறிவாற்றலுக்கும் உள்ள தொடர்பை மிக நேரடியாக நிரூபிக்கிறது (8). இதற்கு முன் வெளிவந்த ஆய்வுகள் பெரும்பாலும் மூளை சார்ந்த குறைபாடு நோயுள்ளவர்களையும், ஆரோக்கியமானவர்களையும், அல்லது இரட்டைகளையும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும், அவர்கள் பெற்ற/வளர்ப்பு பெற்றோரையும் ஒப்பிட்டு அறிவாற்றலின் மரபுப் பண்பை நிரூபித்துவந்தன. ஆனால் இந்த ஆய்வு ஆரோக்கியமான 3511 (ஆண், பெண் இருபாலரும்) பேரின் மரபணுவில் மொத்தம் 5,49,692 மரபணு அடையாளங்களைப் பரிசோதித்ததன் மூலம் மனிதர்களுள் படிகமாக்கப்பட்ட-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 40%ம், பாய்ம-அறிவாற்றலில் காணப்படும் வேறுபாடுகளில் 51%மும் அவர்களின் மரபணு வித்தியாசங்களாலேயே தீர்மாணமாகின்றன என்று நிரூபிக்கிறது. ஒட்டுமொத்த மரபணுவையும் (DNA) கொண்டு ஆய்வு செய்யப்பட்டதால், எந்த குறிப்பிட்ட மரபணு (Gene) அறிவாற்றலில் பங்கு வகிக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியாவிட்டாலும், மரபணுக்களின் பங்கையும் அறிவாற்றலின் மரபயிலையும் (Genetics of Intelligence) நேரடியாக தெரிவிப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மூளையின் அளவையும், நரம்பணுக்களின் வலைப்பின்னலையும் கட்டுமானத்தையும் நிர்ணயிப்பதில் மரபணுக் காரணிகள் வகிக்கும் இன்றியமையாத பங்கையும், மூளையின் அளவு எப்படி அறிவாற்றல் வளர்ச்சியில் முக்கியத்துவத்துவம் வாய்ந்தது என்பதையும் முன்னர் கண்டோம். மூளையின் செயல்பாடுகளைப் படம் பிடிக்கும் அதிநவீன கருவிகள் (HARDI) மூலம் 23 ஜோடி ஒருவித்து இரட்டையர்கள் மற்றும் 23 ஜோடி இருவித்து இரட்டையர்களின் மூளையைப் படம் பிடித்துப் பார்த்ததில் அவர்களின் மூளை நரம்பணு இழைகளைப் (Axons) போர்த்தியுள்ள மயலின் (Myelin) என்னும் கொழுப்புப்-புரதத்தின் தடிமனைப் பொறுத்து அவர்களின் மூளை செயல்பாட்டின் வேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தடிமனான மயலின் போர்வை இருந்தால் கட்டளைகளையும், தகவல்களையும் மூளை மிகவேகமாகக் கையாளும். அவர்களின் முப்பரிணாம சிந்தனை, விழிப்புலம் சார்ந்த செயல்பாடும், தர்க்கமும் எல்லாம் இதை அடிப்படையாகக் கொண்டது. மயலின் போர்வையின் வளர்ச்சியைக் குறிக்கும் மரபணுக்கள் தான் இதைத் தீர்மாணிக்கின்றன. இருவித்து இரட்டைகளில் இந்த மயலின் போர்வையின் தடிமனில் வித்தியாசம் இருந்தது (ஏனென்றால் அவர்கள் 50% மட்டுமே மரபணு ஒற்றுமை கொண்டவர்கள், எனவே பெற்றோர்களிடமிருந்து மரபாகக் கடத்தப்படும் பண்பு வேறுபடலாம்) கண்டுபிடிக்கபட்டதன் மூலம் மூளை-அறிவாற்றல் செயல்பாடு மரபாகக் கடத்தப்படும் தன்மை புதியமுறையில் நிரூபிக்கப்பட்டது (9). இவையும் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகளும் அறிவாற்றலில் சமூகத்தின்/சூழலின் பங்கிருந்தாலும் முதல் மற்றும் முக்கியமான பங்கு பாரம்பரியமாகக் கடத்தப்படும் மரபணுக்களே என்ற கருத்தை அறிவியல் பூர்வமாக முன்வைக்கின்றன.
எதிர்காலம்
பரிணாமத்தில் மனித இனத்துக்குச் சிறப்புப் பண்பாக அமைந்த மூளை வளர்ச்சியையும், அறிவாற்றலையும் குறிக்கும் இந்த மரபணுக்கள் மனித இனம் முழுமைக்கும் பொதுவாகத் தானே இருக்கவேண்டும்?, அதனால் எல்லா மனிதருக்கும் அறிவாற்றலும் சமமாகத்தானே இருக்க வேண்டும்?, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே? என்ற கேள்விகள் எழுகிறது. இங்கே தான் உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவித்து இரட்டைகளையும், இருவித்து இரட்டைகளையும், அவர்களின் அறிவுத்திறன் அளவீடு, வளர்கின்ற குடும்ப மற்றும் சமூகச்சூழல், சத்தான உணவு, பெற்றோரின் கல்வியறிவு மற்றும் அறிவாற்றல், கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை வைத்து சமூகவியலாளர்களும் பல்வேறு ஆய்வுகளைச் செய்து அறிவாற்றலில் சூழ்நிலையின் பங்கையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக்கி வருகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் அறிவாற்றலின் மரபுத்தன்மை குறித்து ஆராயும் மூலக்கூறு மரபியல் ஆராய்ச்சிகள் வேகம் பெற்று வருகின்றன. இப்போதும் இது ஒரு வளரும் துறையே. இது வரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளவையும் ஒப்புநோக்க அடிப்படையானதே. இந்தத் துறையின் எதிர்காலப் போக்கை இதை போன்ற இன்னொரு துறையின் வளர்ச்சியை வைத்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். தொற்று நோய்களுக்கான ஒற்றைப் புறக்காரணமாக நுண்கிருமிகளைக் கண்டுபிடித்த ஆரம்ப அறிவியல் காலங்களில், நோய்க்கூறு அறிவியல் (Immunology) வேகமாக வளர்ந்தது. ஆனால் ஒரு நோய்க்கிருமி ஒரே சூழ்நிலையில் வாழும் அனைவரையும் தாக்குவதில்லை என்பதும், ஒரு நோய்க்கிருமிக்கெதிரான தடுப்பூசி (Vaccine) அந்த நோய்கெதிரான பாதுகாப்பை எல்லா இன மக்களிலும் வெற்றிகரமாக உண்டாக்க முடிவதில்லை என்ற உண்மையும் அறிவியலாளர்களை மனிதர்களின் மரபணுக் கட்டமைப்பை நோக்கிச் சிந்திக்கச்செய்தது. நோயெதிர்ப்பில் ஈடுபடும் மரபணுக்களும், அதில் ஏற்படும் மாற்றங்களும் தான் ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட நோய் ஏற்படுவதற்கு முதற்காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. (தொற்றுநோய்கள் மட்டுமல்ல உடற்செயலியக்கம் சார்ந்த எல்லா குறைபாடுகளுக்கும் மரபியல் முன்சார்பு உண்டு. எ.கா. இதயநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரைவியாதி, புற்றுநோய்…).
அந்த மரபணுக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கடத்தப்படுவதால், பிறப்பிலேயே சில நோய்கள் வருவதற்கான மரபியல் முன்சார்புகள் (Genetic predisposition) மனிதர்களில் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டதும் நோய்க்கூறியல், நோய்க்கூறு மரபியலாக வளர்ந்தது (Immunogenetics). பின்னர் இந்த மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட மனித இனத்துக்கோ (Race), இனக்குழுவுக்கோ (உதாரணம்: சாதிகள்) பொதுவானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது (Population-Immunogenetics). மனிதனின் மொத்த மரபணுத் தொடரும் வரிசைப்படுத்தபட்டபின் (Human Genome Sequencing) இன்னும் வளர்ந்து, ஒரு தனிமதனின் ‘நோய்க்கூறு ஜாதகத்தை’க் (Immunological Horoscope; என்னென்ன நோய்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது, எவ்வாறு அதைத் தடுத்துக்கொள்ளலாம்) கணிப்பதிலும், ஒவ்வொரு தனிமனிதனின் மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவம் (Personalized Medicine) என்ற நிலையையும் எட்டியுள்ளது. இதே போக்கு அறிவாற்றலின் மரபியலுக்கும் பொருந்தும்.
இப்போது அறிவாற்றலுக்கான மரபணுக் காரணிகளைக் கண்டறிவதில் வெற்றி பெற்றுள்ள இத்துறை பின்னர் ஒரு இனத்திலோ, சமூகத்திலோ அந்த மரபணுக்களின் பரவலை (Prevalence) ஆராய்ச்சி செய்யலாம். பின்னர் தனிநபரின் மூளை – அறிவுச் செயல்பாட்டை அல்லது நோய் வாய்ப்புகளை முன் கூட்டியே கணித்து முன்னேற்ற, பாதுகாக்க வழிசொல்லலாம். உதாரணமாக நாம் மேலே பார்த்த மயலின் போர்வையின் தடிமனை அதிகரிக்க, அதன் மரபணுவை வெளிப்பாட்டை அதிகரிக்கும் மருந்தை அல்லது மரபணு சிகிச்சையைக் கண்டுபிடிப்பதன் வழியாக பிறவியிலேயே வில்லியம்ஸ் சிண்ட்ரோம் வருவதற்கான மரபியல் முன்சார்பு இருக்கும் குழந்தைகளைக் காக்கலாம் (சாதாரண அறிவுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை அதிகப்படுத்தலாம்!!)  இப்போதைக்கு மூளை-அறிவாற்றல் வளர்ச்சிக் குறைவு நோய்களை முழுமையாக அறிந்துகொள்ளவும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கவும் தான் அறிவாற்றல் மரபியல் துறை மரபணுக் காரணிகளைக் கண்டறிய முயற்சிக்கிறது.
அறிவாற்றலின் மரபுத் தன்மை என்னும் கருத்து சமூகவியல் பார்வையில் மிக அபாயகரமான கொள்கையாக இருக்கலாம். காரணம்- பன்னெடுங்காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் மரபான பண்பாக அறிவாற்றல் (இன்னும் பல பண்புகள்) கருதப்பட்டு, அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது வம்சாவழியினருக்கோ சொந்தமானதென்றும் அதனால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டும் பிறர் தாழ்வாக நடத்தப்பட்டும் உருவான ஏற்றத்தாழ்வுகளே. சமூகவியல், சமவாய்ப்பின் மூலம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதும், வளர்த்துக் கொள்ளக் கூடியதும் தான் அறிவாற்றல் என்று நிரூபிப்பதன் மூலம் சமுக சமநிலையை வலியுறுத்த விழைகிறது. சமூகவியல் என்பது சட்டம், மொழியியல், அரசியல், தத்துவ, கலாச்சார விழுமியங்களையும், அறிவியலின் முடிவுகளையும் சற்றே மழுங்கடித்துச் சேர்த்து ஒன்றிணைத்து அலசி மனித சமூகத்தை, நடத்தையை, சமூக அமைப்பு முறைகளை புறவயமாக விளக்க முயல்வது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் கூர்மையான, புறவயமான, நிரூபிக்கக் கூடிய உண்மைகளை மட்டும் தரமுடியும். அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தான் பரிணாமத்தில் சிறப்புப் பரிசாக நமக்குக் கிடைத்த அறிவாற்றல் சார்ந்த மரபணுக்களுக்களை ஒவ்வொரு செல்லிலும் பொதிந்து வைத்திருப்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகும்!
உதவிய மூல ஆராய்ச்சி கட்டுரைகள்
2. Wolfgang Enard., et al., 2002. Intra- and Interspecific Variation in Primate Gene Expression Patterns. Science. 296: 5566. 340-343
3. Philipp Khaitovich., et al., 2005. Parallel Patterns of Evolution in the Genomes and Transcriptomes of Humans and Chimpanzees. Science. 309: 5742. 1850-1854
4. Yoav Gilad., et al., 2006. Expression profiling in primates reveals a rapid evolution of human transcription factors. Nature. 440, 242-245
5. Katherine S. Pollard., et al., 2006. An RNA gene expressed during cortical development evolved rapidly in humans. Nature. 443, 167-172
6. Danielle M. Dick., et al., 2007. Association of CHRM2 with IQ: Converging Evidence for a Gene Influencing Intelligence. Behavioural Genetics. 37:265–272
7. Gao MC., et al., 2010. Intelligence in Williams Syndrome Is Related to STX1A, Which Encodes a Component of the Presynaptic SNARE Complex. PLoS ONE. 5(4): e10292. doi:10.1371/journal.pone.0010292
8. G Davies., et al., 2011. Genome-wide association studies establish that human intelligence is highly heritable and polygenic. Molecular Psychiatry. DOI: 10.1038/mp.2011.85
9. Ming-Chang Chiang., et al., 2009. Genetics of Brain Fiber Architecture and Intellectual Performance. Journal of Neuroscience. 29 (7): 2212 – 2224