திங்கள், 21 பிப்ரவரி, 2011

பூண்டும் அதன் மருத்துவ குணமும்!!!


தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் பூண்டு!: பூண்டு வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பலன்கள்: பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும். ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

பூண்டின் இன்றியமையாத பயன்கள்: பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டுப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

புதினாக்கீரையும் அதன் மருத்துவ குணங்களும் !!!


வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.



1) உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். (புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்.

2) உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.

3) இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும். மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

4) பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.

5) உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.

6) புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள் தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.

7) ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும். மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

8) முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) புதினாக்கீரை மூலம் தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.

ஆம்வே - இன்னும் பிற ஏமாற்று வலைகள்


ஒரு நண்பர் என்னை ஆம்வேயில் சேரும்படி விரட்டி கொண்டு இருக்கிறார்
சந்தையை வளைக்கும் மூலதனம் என்பதே ஆம்வே
 தரமான பொருட்கள் ஆனால் 15 ஆயிரம் ரூபாய்க்கு டார்கெட் ஏனிந்த டார்கெட் கேள்வி கேட்க கூடாது உங்களை மில்லியனர் ஆக்கனுமா வேணாமா என கேட்டு 1 மணி நேரம் மரண மொக்கை போட்டார் எனது சகலையின் நண்பர்.
 சரி போகுது என சகலைக்காக பொறுத்து பார்த்து பிறகு சந்தை பொருளாதாராம் மறுகாலனி யாதிக்கம் என்பவை பற்றி வகுப்பு எடுத்ததும் நான் எந்த காலத்திலும் மில்லியனர் ஆகபோவதில்லை என்றார்.
 இனி இந்தியாவில் பணக்காரர்கள்: ஏழைகள் இரண்டு வர்க்கம்தான் இருக்குமாம் இதில் சேரவில்லை என்பதால் நான் இரண்டாவது வர்க்கத்தில்தான் இருப்பேனாம்.
 சுவிட்சர்லாந்து பயணத்தையும், ஸ்டார் ஹோட்டல்களில் காலம்போக்குவதையும் வெறு மனே வங்கி கணக்கை மட்டும் பார்ப்பதையும் செய்யாமல் வேலைக்கு போவது படு முட்டாள் தனமாம்.
 உலகில் இன்வெஸ்டர்களுக்கு மட்டும்தான் நேரம், பணம், பாதுகாப்பு கிடைக்குமாம்.
 அத்தகைய இன்வெஸ்டராகாவிடில் நான் காணாமல் போய்விடுவேனாம். மொத்தத்தில் மகாலட்சுமியை காலால் உதைக்கிறேனாம். அப்படி பட்ட ஆம்வே என்றால் என்ன என்று இணையத்தில் படித்த போது ஒரு நண்பர் இந்த கட்டுரை எழுதி இருந்தார்
மலைச்சரிவு
 இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக் கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?
 இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி இழந்திருக் கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள். இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும் வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து அதனால் ஏற்படும் சங்கடம் ஆகும்.
 மல்டி லெவல் மார்க்கட்டிங் என்றால் என்ன? ஒரு சட்டை வாங்குங்கள் உங்கள் நண்பர்களில் நான்கு பேரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு பணம் வரும். ஆயுள் காப்பீடு எடுங்கள், உங்கள் நண்பர்களில் இருவரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு பணம் வரும். மாதமாதம் கைநிறைய சம்பாதிக்கலாம். இப்படியெல்லாம் கவர்ச்சிகரமாய் விளம்பரம் செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டார்கள். இந்தக் கொடுமையைப் புரிய வைத்து மாட்டிவிட ஓரிடத்தில் கூட்டம் வேறு நடத்துவார்கள். நான் இப்படிப்பட்டவர்களிடம் இந்தமாதிரி பலவற்றைப் பார்த்திருக்கிறேன். இதில் இவ்வாறு குறைகள் இருக்கின்றன என்றால் அது வேறு இது வேறு நீங்கள் ஒருமுறை மீட்டிங் வந்து பாருங்கள் என்பார்கள். எனக்கு இந்தமாதிரி நண்பர்களைப் பிடிக்க நேரமில்லை என்றாலும் விடமாட்டார்கள். நீங்க உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி நண்பர்களைப் பிடிப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார்கள்.
 இப்படி தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள். உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து சோம்பேறிகளாகவும் தாந்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சி தான் இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தால்.
 ஆனால் இது உலகில் எந்த மூலையில் தோன்றியது தெரியுமா? புரட்சிக்கு முற்பட்ட இரஷ்யாவில் சில நிறுவனங்கள் சராசரித் தரமுள்ள தமது பண்டங்களை விற்பதற்கு இந்தச் சாதுரியமான வழியைக் கையாண்டன. அதிகமாக விற்பனை ஆகும் செய்தியேடுகளிலும் இதழ்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணத்துக்கு, ஒரு மிதிவண்டி 50 ரூபிள் என்று விற்ற காலத்தில் 10 ரூபிளுக்கு உங்களுக்கு மிதிவண்டி வேண்டுமா? நாங்கள் தருகிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க, இவ்வாறு விளம்பரம் செய்தால் யார்தான் மயங்க மாட்டார்கள். உண்மையில் 10 ரூபிளுக்கு அந்த நிறுவனம் ஒருவருக்கு அளிப்பது மிதிவண்டி அல்ல. நான்கு சீட்டுக்கள். இந்த நான்கு சீட்டுக்களையும் அந்த மனிதரின் நான்கு நண்பர்களுக்கு தலா 10 ரூபிளுக்கு விற்க வேண்டும். பின் அந்த 40 ரூபிளை அந்நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் மிதிவண்டியைக் கொடுப்பார்கள். அந்த மனிதர் கையிலிருந்து செய்த செலவு 10 ரூபிள்தான் ஆனால் அவருக்கு 40 ரூபிளுக்கான மிதிவண்டி கிடைத்தது. அதேபோல் அவரின் அந்த நான்கு நண்பர்கள் அவர்களின் இதர நான்கு நண்பர்களுக்கு விற்க வேண்டும். இவ்வாறு 10 ரூபிளுடன் அவரவர்களின் நான்கு நண்பர்களையும் சேர்த்து விற்று வந்த காசில் அவர்கள் மிதிவண்டி வாங்கிக் கொள்கிறார்கள்.
 இதில் மோசடி எதுவுமில்லை என்றே தோன்றுகிறதல்லவா? விளம்பரம் செய்த நிறுவனமும் அதன் வாக்கை நிறைவேற்றுகிறது. நிறுவனத்துக்கும் இழப்பு எதுவுமில்லை. இதை சோவியத் இரஷ்யாவில் மக்கள் மலைச்சரிவு என்றே அழைத்தார்கள். சரி ஒன்று நான்கானது புரிகிறது. நான்கு எவ்வளவாகும், 4 ஷ் 5 =20 ஆகும். அவர்கள் நான்கு நான்கு பேரை இந்த சரிவில் தள்ளிவிடுவதாய் வைத்துக் கொண்டால் 20 ஷ் 5 =100 ஆகிறது எண்ணிக்கை. ஆக மொத்தம் 1+4+20+100=125 புதிய ஆட்கள் இந்த மலைச் சரிவில் உருண்டுவிழுந்து விட்டார்கள்.
 மொத்தம் மிதிவண்டி வாங்கிய 25 நபர்கள் போக ஏனைய 100 பேருக்கு மிதிவண்டி வாங்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே கிடைக்கிறது. மலைச்சரிவு நண்பர்களது குறுகிய வட்டத்தை உடைத்துக்கொண்டு நகரெங்கும் பெருகிப் பரவுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் சீட்டுவாங்கக் கூடிய புதிய ஆட்களைத் தேடிப் பிடிக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாக வேண்டிவருகிறது. இந்த வியாபாரத்தில் இழுக்கப்பட்டு மலைச்சரிவில் உருண்டு விழுவோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது.
 1, 4, 20, 100, 500, 2500, 12,500, 62,500 இப்படியாக விரல்விட்டு எண்ணக்கூடிய 8 அடுக்கினில் அறுபதாயிரம் அப்பாவிகளைத் தாண்டிச் செல்கிறது. அடுத்த அடுக்கில் எத்தனை பேர் தெரியுமா? மூன்று இலட்சத்திற்கும் மேல். இதில் வாங்க விருப்பமில்லாதவர்கள், இந்தக் கட்டுரை யைப் படித்து சுதாரித்துக் கொண்டவர்கள் என ஒரு கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட இந்தக் கூட்டம் பெருகும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது முழுக்க தன் வளர்ச்சியை இழந்து நிற்கும். அப்போது ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஐந்தில் நான்கு பங்காய் இருக்கும். இன்னொரு உண்மை என்னவென்றால் மோசடிவேலையை ஆரம்பித்த நிறுவனத்துக்கு இப்போது முழுக்க இலாபமே. ஏனென்றால் 10 ரூபிள் மட்டும் கட்டி அட்டை வாங்கியவர்கள் மீதம் நாற்பது ரூபிளுக்கு ஆள் கிடைக்காமல் ஆப்பு வைக்கப்படும் போது அவர்கள் கட்டிய தலா 10 ரூபிளை இந்த நிறுவனமே சுவாகா செய்து கொள்ளும். தாங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத பண்டத்தைப் பெற ஒவ்வொரு மனிதனும் தன் நண்பரைப் பணயமாக வைத்து வாங்கிக் கொள்ள நண்பர்களே கிடைக்காதவர்கள் தலையில் நாமம் போட்டு திருப்பதி போய் மொட்டை போடக் காசு கூட இல்லாத நிலைக்கு வர காரணமாய் அமைந்து விடுகிறார்கள். இரஷ்யாவின் பிரபல எழுத்தாளர் இந்தக் கூத்தினை “பரஸ்பர மோசடியின் பெரும் பெருக்கு” என்று குறிப்பிடுகிறார்.
 ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒரு காலத்தில் இது பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால் காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும் நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவான தென்றே தெரியாமல் போனது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்துக்குள்ள பொறுப்புகளை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அழித்து மக்களை விலை பேசத் துணிந்திருப்பார் கள் என்பதில் நாம் யாருக்கும் சந்தேகமில்லை.
 இந்த மோசடியில் காப்பீட்டு நிறுவனமாகக் காலடி வைத்துள்ள பஜாஜ் அலயன்ஸ் நிறுவனமே ஈடுபடுகிறது. ஆயுள் காப்பீடு வேண்டுமா நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் இன்னொருவரை நான் கட்டாயப்படுத்த வேண்டுமென்றால், உங்க ளுக்கு இலட்சலட்சமாய்ப் பணம் வருகிறது என்று சொல்கிறது. இப்போது இதை பைனரி மார்க் கட்டிங் என்று பெயர் மாற்றம் செய்து விட்டனர்.
 அதாவது நான்குபேருக்கு பதில் இருவரை அறிமுகப்படுத்துவது. எதுவாயினும் மோசடி மோசடிதான். கடைசியில் நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாதவர்கள் கட்டிய பணம் அமுக்கிக் கொள்ளப்படும்போது அவர்களின் சாபம் நம்மைச் சும்மா விடாது. இது அப்பட்ட மான உண்மை காப்பீடே தேவைக்கு அதிகமாகப் போகும் போது அது வெட்டிச் செலவு ஆகும். கஐஇ, மபஐ போன்ற அரசு நிறுவனங்களில் காப்பீடு செய்வது நமக்குப் பாதுகாப்பு. சமீபத்தில் ஒரு வங்கி திவாலான போது பொதுத் துறை நிறுவனமான கஐஇ அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்ப அளித்தது. மியூட்சுவல் பண்டு எனும் பரஸ்பர நிதிகளில் கவர்ச்சி விளம்பரங் களைக் காட்டிவிட்டு விளம்பரத்தின் கடைசியில் வேகமாகப் புரியாத அளவுக்கு கசமுசா கசமுசா என்று ஒருவன் பேசக் கேட்டிருப்பீர்கள். அதை உன்னிப்பாகக்கேட்டால் மியூட்சுவல் பண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை முதலீடு செய்யும் முன் பங்குப் பத்திரத்தைக் கவனமாகப் படிக்கவும் என்பது விளங்கும். ஏன் அதை நிறுத்தி நிதானமாய்ச் சொன்னால் என்ன? அப்போ எவனாவது அதைப் பார்க்காமல் வாங்கி ஏமாற மாட்டானா என்று அவர்கள் ஏங்குகிறார் கள் என்றுதானே அர்த்தம். உழைத்த காசே நிலைக்காத இந்தக்காலத்தில் ஏமாற்றி பெருக்கும் காசு எம்மாத்திரம்.
 நல்ல நண்பர்களை இந்தமாதிரி மோசடிகளால் இழந்திருப்பீராயின் அதற்காகக் கவலைப் படாதீர்கள். அப்படிபட்டவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை. நம்மை விற்க நாம் ஒத்துக் கொள் ளாததால் இலாபத்தை இழந்து புத்திமாறிப்போன இவர்கள் நமக்கு நண்பராகவே இருக்கலாகாது. மலைச்சரிவு என்று இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங் முறைக்குப் பெயரிட்டது முற்றிலும் சரி. ஆனால் அந்தச்சரிவு ஒன்றில் நீங்கள் யாரும் விழுந்துவிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு
 ----வள்ளுவர்
தியாகு (thiagu1973)

பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி


இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை.

உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்த கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.
பூமியைச் சுற்றி உருவாகும் சரிப்பசை வளையம் உருவாகுவதனால் ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வந்த ஒளி வானத்திற்குத் திரும்புவது தடைபடுகிறது. இதனைப் “பசுமை இல்ல விளைவு’’ என்று அழைக்கின்றார்கள். இதற்கு அடிப்படையாக சூழும் காற்றுக்களை பசுமை இல்லக் காற்றுக்கள் என்கிறார்கள். இத்தகைய காற்றுக்களில் கரி அமிலகாற்றே (கார்பன் டை ஆக்சைடு) முதல் இடத்தைப் பிடிக்கிறது. காற்றும் பங்களிப்பும் கீழே தரப்படுகிறது.
கரி அமிலக் காற்று              49%
மீதேன்                    18%
குளோரோ ஃபுளோரோ கார்பன்    14%
நைட்ரசன் காற்று                6%
மற்றவை                  13%
கடந்த நூறு ஆண்டுகளில் வான்வெளி வெப்பம் 35% உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி சென்சியஸ் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டு இரண்டு முதல் மூன்று டிகிரி உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர்க் கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிப்பதற்கான நீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறையும். விளைச்சலும் குறையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடலோரங்களில் புயலும், வெள்ளமும் பெருகுவதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருளிழப்பும் பெரிய அளவில் நிகழும்.
அ. குடிநீர்ப் பற்றாக்குறை:
வடக்கு ஆசிய நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும், தட்ப வெப்ப மாற்றத்தைத் துல்லியமாக ஆய்ந்தறியும் அரசுகளுக்கு இடையிலான குழு (IPCC) கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். பனிப்பாளம் உருகி ஆற்றோட்டம் குறைவதால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
2020ஆம் ஆண்டில் ஆசியாவில் 12 கோடி மக்கள் முதலாக 120 கோடி மக்கள் வரை சிக்கல்களுக்கு ஆளாவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் 7 கோடி 50 லட்சம் மக்கள் வரை பாதிப்புக்கு ஆளாவார்கள். தென் அமெரிக்க நாடுகளில் 1 கோடி 20 லட்சம் முதல் 8 கோடி 10 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆ. பயிர் விளைச்சல் சரியும்:
பயிர்களின் வளர்ச்சிப் பருவம் சுருங்கும். அதனால் 2020 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் 50 விழுக்காடு விளைச்சல் குறையும். மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 2050ஆம் ஆண்டு வாக்கில் 50சதவீதம் விளைச்சல் குறையும்.
உலக உற்பத்தி பாதிப்புக்கு ஆளாவதால் ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.
இ. கடலோரப் பகுதி வெள்ளம்:
கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கல்கத்தா, டாக்கா, ஷாங்காய் போன்ற பெருநகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். வறட்சியினாலும் மக்கள் இடம் பெயருவார்கள். இதனால் உலகத்தில் பாதுகாப்பும் அமைதியும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அரசாங்கங்களின் கவனம் முழுவதும் இப்பிரச்சனையின் மீது குவிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
காற்றில் கலந்த கரி மண்டலம் உழவுத் தொழிலைப் பாதிக்கிறதா?
ஆம். இரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புகையைக் கக்குகின்றன. உரத்தைச் சுமந்து செல்லும் வாகனங்கள் புகையைக் கக்குகின்றன. உப்பு உரம் நைட்ரசன் காற்றைக் கக்குகிறது. பயிர்த் தொழிலில் பயன்படுத்தும் இதர பொருள் உற்பத்தி செய்யும் ஆலைகளும் புகையைக் கக்குகின்றன. நிலத்தில் பயன்படுத்தும் எந்திரங்கள் புகையைக் கக்குகின்றன. ஆக மொத்தம் பூமி சூடாவதற்கான காரணிகளில் பயிர்த்தொழிலின் பங்கு 35 விழுக்காடாகும். அதே போல, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பயிர்த்தொழிலும் பாதிப்புக்கு ஆளாகிறது.
2008ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்கள் அடை மழையால் நீரில் மூழ்கிப் போயின.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலம் தவறிப் பெய்த அடைமழையால் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உளுந்து, பயறு வகைப் பயிர்கள் அழிந்துபட்டன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிப்பேரலையில் கடலோரப் பகுதியில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர் அழிந்துபட்டது.
ஆழிப்பேரலை தொடங்கி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் சாகுபடிக்கு ஒவ்வாததாக மாறியுள்ளது.
2009ஆம் ஆண்டு மழைக் காலத்தில் வங்காளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெற்பயிர்கள் அழிந்து போயின.
2010 ஆம் ஆண்டிலும் இரண்டு இலட்சம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போயின.
இரசாயனத்தைப் புகுத்தியது பசிப்பணி போக்கவா?
இவ்வளவு உண்மைகள் அம்பலமான பின்பும் உழவாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் உழவாண்துறை அலுவலர்களும் இரசாயன உரம், பூச்சி கொல்லிகள், பூஞ்சானக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றை பரிந்துரை செய்வதை நிறுத்தவில்லை. இவையாவும், இவற்றை விற்று இலாபம் பார்ப்பதற்காகவே குள்ளரகப் பயிர்களைப் புகுத்தினார்கள் என்ற வாதத்தை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. இந்தியாவில் பசிப் பிணியைப் போக்குவதற்காகவே பச்சைப் புரட்சி வந்ததாக ஒரு கட்டுக்கதை உலவுகிறது. உண்மையோ வேறு விதமாக உள்ளது. ஒட்டுக்கட்டி உருவாக்கிய குட்டை ரகத்தை அமோக விளைச்சல் ரகம் என்று உழவர்களுக்கு விளம்பரம் செய்தார்கள். ஆனால், விஞ்ஞானிகள் மத்தியில் அதிகம் இரசாயன உரம் ஏற்கும் ரகம் என்ற கருத்துப் பரிமாறினார்கள். அதிக ரசாயன உரம் இட்டபோது நாட்டு நெல் ரகம் சாய்ந்து போனது. அதனால் அதிக ரசாயனத்தை இந்திய உழவர் தலையில் கட்டுவதற்காகவே குள்ளரகத்தைப் புகுத்தினார்கள். அதனால்தான், ஆல்பர்ட் ஓவார்டு சொன்னதை ஏற்கவில்லை. ரிச்சார்யா சொன்னதை ஏற்கவில்லை. எக்ன நாராயன் ஆவணத்தை சீர்தூக்கவில்லை.
பச்சை புரட்சியினுடைய கொடுமைகளிலிருந்து உழவரையும் உண்போரையும் காப்பாற்றும் வகையில் இயற்கை உழவாண்மை வளர்ந்து கொண்டிருக்கும் போது அப்படி ஏதும் நடந்துவிடாதபடி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனி இந்திய அரசாங்கத்தை நெருக்குகிறது. இந்தியாவில் ஒட்டுவிதை விற்றுக் கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகிக்கோ கம்பெனியின் பங்கு தொகைகளை மேலே சொல்லப்பட்ட மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. அதே போல சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருந்த ராசி கம்பெனியின் பங்குத் தொகைகளையும் மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. இந்திய கம்பெனிகளை வாங்கிவிட்டதன் அடையாளமாக மான்சாண்டோ மகிக்கோ என்றும் மான்சாண்டோ ராசி என்றும் கடைப்பெயர்களையும் மாற்றிவிட்டது. இதன் பிறகு மான்சாண்டோ மகிக்கோ கம்பெனியின் பெயரில் பி.டி. கத்திரிக்காய் விற்பதற்கு நடுவண்அரசிடம் அனுமதி கேட்டு கம்பெனி அழுத்தம் கொடுக்கிறது.
“பச்சைப் புரட்சி’’ என்று பெயர் சூட்டியதே ஒரு அமெரிக்கன் என்று எம். எஸ். சுவாமிநாதன் எழுதியுள்ளார். “உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள புரட்சிகள் அனைத்தும் சிவப்பாக இருந்ததுதான் சரித்திரம் “பச்சைப் புரட்சி’’ என்ற பெயர் புரட்சியையே இழிவுபடுத்துவதாக அமைந்தது. 
பச்சைப் புரட்சியின் விளைவுகள்:
இந்தியாவில் உழவுத்தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது என்று கூறும் தேசிய உழவர் ஆணையத்தின் தலைவர் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையில்...
1. 1947இல் அன்றைய பிரதமர் ஜவகஹர்லால் நேரு சொன்னார், “வேறு எதுவும் காத்திருக்கலாம், ஆனால் உழவுத் தொழில் காத்திருக்க முடியாது’’ என்று. ஆனால் 59 ஆண்டுகள் கடந்த பின்பும் உருப்படியான கொள்கை ஏதும் உழவுக்காக உருவாக்கப்படவில்லை.
2. 65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு வழி இல்லை. உழவொன்றே அவர்கள் வாழ்கைக்கு ஆதாரம்.
3. 65 கோடி மக்களுக்கு வருவாய் குறைந்தவண்ணம் உள்ளது. செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
4. உழவர்கள் வாங்கியுள்ள கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது.
5. விளைபொருட்களை விற்பதற்கான உட்கட்டமைப்பு மிகவும் சொற்பம்.
6. காய்கறி, பழம் போன்ற அழுகும் பொருட்களுக்கு சந்தையும், சேமிப்புக் கிடங்கு வசதிகளும் மிக மிக சொற்பம்.
7. உருப்படியான கொள்கை ஏதும் இல்லாமையால் கால்நடை பராமரிப்பு நொறுங்கிப் போயுள்ளது.
8. உழவை நம்பியுள்ள குடும்பங்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கிறது.
9. உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வது மட்டுமல்ல, அதிகரித்த வண்ணம் உள்ளது.
10. முப்பதாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
11. தற்கொலைக்கு அடிப்படைக் காரணங்கள்: அ. வாங்கிய கடனுக்கு வட்டி மிக அதிகம். ஆ. அதிகரித்து வரும் இடுபொருள் செலவு. இ. விளைபொருளுக்கான நியாயமான விலை கிடையாது.
12. கம்பு, தினை, சாமை போன்ற சத்து மிகு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, கிழங்கு போன்றவை அனாதைப் பயிர்கள். இவற்றுக்குச் சந்தையோ, நியாயமான விலையோ கிடையாது.
13. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளில் நான்கில் மூவருக்கு சத்துணவுப் பற்றாக்குறை, இரும்புச் சத்து குறைவு (சோகை)
14. 55% குழந்தைகளுக்கு வைட்டமின் கி பற்றாக்குறை. அதனால் பார்வைக் கோளாறு.
15. பயிர்த் தொழிலில் அரசு முதலீடு குறைந்தவண்ணம் உள்ளது.
16. கோதுமையும், நெல்லும் தீவிரமாக சாகுபடி செய்ததால் நிலம் உப்பாகிப் போனது. நிலத்தடி நீர் குறைந்தவண்ணம் உள்ளது.
17. நுண்ணூட்டங்களின் பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது.
18. ஆண்டு சராசரி மழை போதுமானதாகத் தோன்றுகிறது. ஆனால், மழையின் பெருமளவு 100 மணி நேரத்தில் கொட்டி விடுகிறது.
19. கிடைக்கும் நீர் அனைத்தும் பூச்சிக்கொல்லி நஞ்சாலும், மிகக் கொடிய நச்சுப் பொருட்களாலும் மாசுபட்டுக் கிடக்கின்றன.
20. மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், பயிருக்குப் பாய்ச்சவும் மேலும் மேலும் குழாய்க் கிணற்றையே சார்ந்துள்ளார்கள். இந்தக் குழாய்க் கிணறுகளில் மிகக்கொடிய ஆர்சனிக் நஞ்சு வருகிறது. மேலூற்று கிணறுகள் வற்றிப்போய் விட்டன.
இப்படி உழவர் நிலைமையை வருணித்தாலும் சுவாமிநாதன் இக்குறைபாடுகளுக்கான வேர்க் காரணத்தைக் தோண்டவில்லை. குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் வழிசொல்லவில்லை.
அமைச்சர்களும் புதுவழி தேடவில்லை. மாறாக ஆளுவோரும் அவர்களது ஆலோசகர்களும் மக்கள் தலையில் பேரிடியை இறக்குகிறார்கள். அதன் பெயர் “இரண்டாம் பச்சைப் புரட்சி’

சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்


சிறு விதைகளைக் கொண்ட, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, வறண்ட பிரதேசங்களில் விவசாயிகளின் வரப்பிரசாதமாக, உயிர் ஆதாரமாக, மலைவாழ் மக்கள் மற்றும் கிராம மக்களின் வளமான, வளமையான உடலமைப்பைத் தரக்கூடிய பயிர்களே சிறுதானியங்களாகும். வளமான மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய இப்பயிர்களில் கிடைக்கும் சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்ந்து வந்தது. 
              சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. 
              இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. மேலும், இவை அதிக நார்சத்து கொண்டுள்ளன. இதனால் இவை இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், மக்காட்சோளத்தில் சப்டூஆலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக்குழாய் நோயை குணப்படுத்தும் வல்லமை படைத்தது.              
கேழ்வரகு 
              இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது இதுவாகும். இதனை கர்நாடகாவில் ராகி என்றும், இந்தியில் மேண்டு என்றும் ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், கேரளாவில் கேவுரு, ஆந்திராவில் ராகூலு, இலங்கையில் குரங்கன் என்றும் அழைக்கிறார்கள். தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. 
சத்துக்கள் 
              ராகி என்றழைக்கப்படும் 100 கிராம் கேழ்வரகில் 7.3கி புரதம், 1.3கிராம் கொழுப்பு, 3.9 கிராம் இரும்புச்சத்து, 3.6 கிராம் நார்ச்சத்து, 344 மில்லி கிராம் கால்சியம், 203 மில்லிகிராம் பாஸ்பரஸ், 420 மில்லி கிராம் தய்மின், 72 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பிகரேட்டின் (42மிகி), நயசின் (1.1மிகி), ரிபோப்ளேவின் (1.1மிகி) போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இதே நேரத்தில் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .06 மற்றும் 1.5 கிராம் இரும்புச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோலவே நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .02 மற்றும் 1.2 கிராம் நார் சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோன்றே கால்சியம் .045 மற்றும் .041 மில்லி கிராம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமைகளில் கிடைக்கிறது. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் வலிமையுடையவர்களாகவும், நல்ல திடகாத்திரமானவர்களாகவும், உடலுழைப்பாளிகளாகவும் திகழ்ந்து வந்துள்ளனர். 
              இதுபோலவே சிறுதானியங்களான திணை (8 கிராம்), சாமை (7.6 கிராம்), பனிவரகு (7.2கி), வரகு (9கி), குதிரைவாலி (9.8கி) ஆகியவை அரிசியைக் (.02கி) காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான நார்ச்சத்தினைக் கொண்டுள்ளன. அதேபோன்றே தாதுப்பொருட்களையும் அதிகளவில் கொண்டுள்ளன. திணையை உட்கொண்டால் இது இரைப்பையிலுள்ள ஈரம் நீக்குவதற்கு உதவும். எனவே தான் மலைகளில் வாழக்கூடிய பழங்குடி இன மக்கள் தேனும் திணை மாவும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளாக உட்கொண்டு வந்துள்ளனர். 
              இவ்வளவு மிகுதியான சத்துக்களைக் கொண்ட இப்பயிர்கள் குறைந்த காலத்தில் விளைச்சலைத் தரக் கூடியவையாகவும், குறைந்தளவிலான தண்ணீருடன் அதிகளவு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாகவும் உள்ளன. 
இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 
              இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிக அளவிலான சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2007-08ஆம் ஆண்டில் இந்தியாவில் 39.56 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2008-09ஆம் ஆண்டில் 38.34மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இந்த உலகில் முதல் பத்து நாடுகள் சிறுதானிய உற்பத்தி விவரம் (டன்களில்) இந்தியா 1061. நைஜீரியா 77,00,000, நிகார் 27,81,000, சீனா 21,01,000, பர்க்கினா பாசோ 11,04,010, மாலி 10,74,440, சூடான் 7,92,000, உகாண்டா 7,32,000, சாட் 5,50,000, எத்தியோப்பியா 5,00,000 ஆகும். இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுதானிய உற்பத்தியில் அதே அளவு விகிதத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியாவதில்லை. 2003-04ஆம் ஆண்டில் 213.19 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2008-09ல் 234.47 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 2003-04ஆம் ஆண்டில் 36.3 மில்லியன் டன்களாயிருந்த சிறுதானிய உற்பத்தி 2008-09ல் 38.4 மில்லியன் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. 2003-04ல் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 17 சதவீதமாயிருந்த சிறுதானிய உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் 16 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மிகவும் கவலை கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்குக் காரணம் இத்தானியங்களுக்கான நுகர்வு குறைந்து கிராமங்களில் கூட அரிசியையும், கோதுமையையும் பிரதானமாக உட்கொள்ள ஆரம்பித்ததுதான். ஒரு சில கிராமங்களில் சிறுதானியங்களை விற்று அரிசியை வாங்கி நுகரும் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி
              தமிழகத்தில் 1998-99ஆம் ஆண்டில் 7,56,523 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இது 2008-09ஆம் ஆண்டில் 7,18,396 ஹெக்டேராக குறைந்துள்ளது. அதிலும் மக்காச்சோளம் உற்பத்தி இப்பத்தாண்டு கால இடைவெளியில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. மக்காட்சோளம் தவிர்த்து இதர சிறுதானியங்களைக் கணக்கிட்டால் இதன் பரப்பளவில் பெரும் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பத்தாண்டு காலத்தில் சோளம் பரப்பு 3,64,944 ஹெக்டேரிலிருந்து 2,58,876 ஹெக்டேராகவும், கம்பு பரப்பு 1,53,937 ஹெக்டேராகவும் 56,672 ஹெக்டேராகவும், வரகு பரப்பு 15654 ஹெக்டேரிலிருந்து 4086 ஹெக்டேராகவும், சாமை பரப்பு 43,799 ஹெக்டேரிலிருந்து 21231 ஹெக்டேராகவும், கேழ்வரகு பரப்பு 1,20,047 ஹெக்டேரிலிருந்து 90,079 ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. இதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் மக்காட்சோளம் கோழித்தீவனமாக பயன்படுத்தப்படுவதால் உத்தரவாதமான விலையும், பல கோழிப்பண்ணைகள் நேரடியாக விதை உட்பட அனைத்து இடுபொருட்களும் வழங்கி நல்ல நிலையில் விளை பொருளை வாங்கிக் கொள்வதாலும் இதன் பரப்பு கடந்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. துரித உணவு மற்றும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் உணவு நுகர்வு காரணமாக இதர சிறுதானியங்களில் பரப்பு சிறிது சிறிதாகக் குறைந்து முழுவதும் அழியும் நிலையில் உள்ளது.
              தமிழகத்தின் கேழ்வரகு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேலான பரப்பும், உற்பத்தியும் கிருக்ஷணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலேயே கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 70,000 ஹெக்டேர் பரப்பில் டிசம்பர் 2010ல் அறுவடை சமயத்தில் மழை பெய்ததால் 50,000 ஹெக்டேரில் உற்பத்தியான கேழ்வரகு விளைச்சல் முழுவதுமாக அழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மேலும் உற்பத்திக் குறைப்பை ஏற்படுத்தும்.
              இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்திய ஆய்வு, தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 42,00,000 எனவும், மேலும் சர்க்கரை நோய் அறிகுறிகளுடன் 30,00,000 வாழ்வதாகவும் தெரிவிக்கிறது. ஏறத்தாழ 72 இலட்சம் பேர் உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக சர்க்கரை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தற்போதைய தேவை துரித உணவை விடுத்து சிறுதானியங்களை அதிகளவில் உட்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். இதனால் உடல் ஆரோக்கியமடைவதுடன் உழவர்களையும் காப்பாற்றிட முடியும். நிரந்தரமான விலையும், பொதுமக்களின் ஆதரவும் இல்லாதுதான் இதுபோன்ற சத்தான சிறுதானியங்கள் அழிவிற்கு முதன்மையான காரணம் என்பது மக்காட்சோள உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கொண்டே அறிய முடியும். இதுபோன்றே தற்போது குதிரைவாலிப் பயிர் உற்பத்தியும் மதுரை மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருவதும் நிரந்தரமான அங்காடி இருப்பதனால் தான். எனவே, இப்பொருட்கள் உற்பத்தியை, பரப்பை அதிகரிக்க நுகர்வு குறித்த விழிப்புணர்வை, கலாச்சார மரபை உருவாக்குதல் வேண்டும். அரசு சர்க்கரைநோய்க்கு அருமருந்தாய் உள்ள இச்சிறுதானிய உற்பத்திக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்து உற்பத்தியை பெருக்கிடல் வேண்டும். இப்பொருட்களிலிருந்து செறிவூட்டப்பட்ட சத்தான ஆதாரங்களைத் தயாரித்து விற்பனை செய்ய தக்க முயற்சி செய்து நமது நாட்டின் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை அழிவிலிருந்து காப்பாற்றுதல் வேண்டும்.
மதுரை சு.கிருஷ்ணன் ( maduraisuki@gmail.com)
ஆதாரங்கள் 
1) பருவமும் பயிரும் பற்றிய அறிக்கை பசலி 1408 மற்றும் 1418
 பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, சென்னை‍-6.
2) இந்து நாளிதழ் 14.12.201.0
3) தினமலர் நாளிதழ் 11.12.201.0
4) வீழ்ந்துவரும் விவசாயம், சு.கிருக்ஷணன் டிசம்பர் 20,2010 www.keetru.com

அன்புடைத்ததே தழைக்கும்


மனிதன் சுயநலமானவன். அப்படித்தான் அவன் பரிணாமத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறான். அவனது மூளையும் அதற்கேற்ப அமைந்திருக்கிறது என்பது போன்ற கருத்துக்கள் இப்போது வலுவிழந்து கொண்டிருக்கின்றன. மாறாக மனிதன் இரக்கமிக்கவன் என்பதும் விட்டுக்கொடுத்து வாழக்கூடிய வினோத விலங்கு என்பது அண்மைக்கால சமூக அறிவியல் ஆய்வுகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றன.

hands
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்ளி) வல்லவன் வாழ்வான்என்பதை மாற்றி நல்லவன் வாழ்வான் என்று அறிவிக்கிறது. டார்வின் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் “பரிவுணர்வுதான் மனிதனின் பிரதானமான உள்ளுணர்வு'' என்று. மனிதன் மற்ற ஏனைய விலங்குளைக் காட்டிலும் வெகு சீக்கிரமாக உலகில் பரவி உலகை வெற்றியுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்குக் காரணமே மனிதனது பரிவுணர்வுதான். இல்லாதவர்களை பரிவுடன் அறிந்து அவர்களுக்கு உதவி செய்து ஒப்புறவுடன் வாழ்வதுதான் மனிதனது அளப்பரிய பலம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனித மூளையில் உருவாகும் ஆக்சிடோசின் என்ற ஒரே ஒரு ஹார்மோன் மனிதனை பற்றுடையவனாக ஆக்குகிறது. சொந்தங்களை நேசிப்பது, காதல் வயப்படுவது, தாய்மை சுகம், பொது நன்மைக்காகப் பாடுபடுவது போன்ற உயரிய பண்புகளெல்லாவற்றிற்கும் காரணம் ஆக்சிடோசின்தான். அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு அந்தஸ்த்து உயருகிறது என்பதை மனித குலம் புரிந்துகொள்ள வேண்டும். இது மனிதனது ஜீன்களிலேயே பொரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.
ஒருவர் மற்றவர்மேல் காட்டும் பரிவைப் பார்க்கும் இன்னொருவரும் பரிவுடையவராகிறார் என்பதும் பரிசோதனைகளிலிருந்து வெளிப்பட்டுள்ளது. பொதுநல உணர்வை இன்னம் சற்றே விரித்து தன் இனம் தன் மொழி என்பதையும் தாண்டி மற்ற இனத்தவரிடையும் விரிவடையவேண்டும். அதை நோக்கித்தான் மனித பரிணாமம் சென்று கொண்டிருக்கிறது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
-     முனைவர் க.மணி