வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு ஸ்பைரூலினா..


மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.
       ஸ்பைரூலினா..நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு... மருத்து வமா? இல்லை... வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வு களை வழங்க முடியும்.
ஸ்பைரூலினா’...எனும் அரிய, எளிய உணவு
       ‘ஸ்பைரூலினா’ பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும், பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.
        ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (single celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்கா, வட ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் கடல்களில், ஏரி களில் காணப்படுகிறது.
       உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும், இறைச்சி உணவுப் பொருட் களையும் விட அதிகளவு புரதம் (டழ்ர்ற்ங்ண்ய்) இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக ‘ஸ்பைரூலினா’ பயன்படுகிறது. ஏனென் றால் நாம் இதை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது! Yes... Micro Food! Macro Blessing!
இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க உன்னத உணவு
       ‘இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால், இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும்’ என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும், உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தை களைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில் ‘ஸ்பைரூலினா’ பரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களி லிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை ‘மருந்துணவு’ (Medicine Food) என்கின்றனர்.
ஸ்பைரூலினா’வில் அடங்கியுள்ள சத்துக்கள்
       மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலினோனிக் அமிலம் (Gamma Linoleic Avid) இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக யண்ற் Vit A,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஸ்பைரூலினா’ அள்ளி வழங்கும் ஆரோக்கியம்
       நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கிய மும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள்ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும், எடை குறையும்.
       மேலும் புரதம், வைட்டமின்கள் அபரிமித மாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா லினோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (LDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (HDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமா லினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (powerful anti inflammatory) பணியும் ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்
       ஸ்பைரூலினா... மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (blood sugar level in fasting) 6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடு, அடிக்கடி பசி ஏற்படுதல், அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம், நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள், பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான, சுலபமான, நம்பகமான தீர்வு ஏற்படுகிறது.
Best Stomach Tonic
       ஸ்பைரூலினா... இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது. E.coli,candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.
முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்
       மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் anti oxidant/antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. vit.b.12 அடங்கியுள்ளதால் உடல், மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சி, தோலில் சுருக்கம், இதரதோல் நோய்களையும் முறிய டிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chromic Fatique Syndrome-CFS) நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும். தளர்ச்சி மறையும், முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (cancer fighting ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.
       ‘சேதமடைந்த செல் டிஎன்ஏ’ வின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில் “Endonucleus” என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல் “டிஎன்ஏ” நிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும். இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில் “டிஎன்ஏ” சரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா... செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்; அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஸ்பைரூலினா’ பெயரில் நடைபெறும் MLM-நிறுவனக் கொள்ளையை முறியடிப்போம்
       மனிதகுலம் எத்தனையோ போர்களை இயற்கை சீற்றங்களைச் சந்தித்து மீண்டுள்ளது. மனித சமூகமும் பூண்டோடு அழிந்துவிடப் போகிறது என ஆரூடம் கணித்த எத்தனையோ பேர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிரான சூழல்களிலிருந்தும், நோய்மையிலிருந்தும் மீள மனிதகுலம் இடையறாது போராடிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
       உயிரினங்களில் புரட்சிகரமானது மனித உயிர். உணவுகளில் புரட்சிகரமானது ஸ்பைரூ லினா. மருந்துகளால் அல்ல மிகச்சிறந்த (இயற்கை) உணவுகளால் மட்டுமே மனித நலம் பாதுகாக்கப் படும். இயற்கையை வணங்குவது அல்ல. இயற்கை யோடு இணைந்த வாழ்வதே முக்கியம். ஸ்பைரூ லினா ஒவ்வொரு குடும்பத்திலும் அடிப்படை உணவு போல அமைய வேண்டும். இந்த எளிய உணவுப் பொருளை MLM நிறுவனங்கள் தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கும் மோசடியில் வீழ்ந்துவிடாமல், எல்லோருக்கும் ஏற்றவிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் ‘ஸ்பைரூலினா’வையே அனைவரும் பயன் படுத்த வேண்டும்.
       “எதிர்காலத்தில் அதிகமான பேருக்குக் குறைந்த செலவிலான உணவு ஆதாரமாக இது திகழும்” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
(மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

சனி, 9 ஜூலை, 2011

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை

உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.


தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினான். காலஞ் செல்லச்செல்ல எலுமிச்சம் பழத்தில் பொதிந்திருக்கும் எண்ணற்ற சத்துக்களும் மருத்துவ குணங்களும் பலவாறாக உணரப்பட்டு இன்றளவும் அதனைப் பயன்படுத்தும் தன்மை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. இந்திய நாட்டை பொருத்தமட்டில் மக்கள் எலுமிச்சம் பழத்தைச் சமையல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள். தற்காலத்தில் வணிக நோக்குடன் ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு, மது பானம் போன்றவற்றையும் பெருமளவில் தயாரிக்கிறார்கள். மற்றும் எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், கால்சியம், சிட்ரேட் போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர உலோகத்தால் செய்த கலங்களைச் சுத்தம் செய்ய உலர வைக்கப்பட்ட எலுமிச்சைத் தோல்களைப் பயன்படுத்துகிறார்கள்.

எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது.

மருத்துவ நோக்கில் இன்று எலுமிச்சை பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும்.

எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம்.

எல்லா வகையிலும் ஏற்றமிகு பானம்:

எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் பழ வகைகள் அனைத்தையுமே சாப்பிட எல்லாக் காலத்திலும் எந்த நிலையிலும் இயலும் என்று கூறவியலாது.

அவர்கள் நாட்டுத் தட்பவெப்பம் காரணமாக சில பழங்களை சில பருவங்களில் பிடிவாதமாகச் சாப்பிட்டால் அவர்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்வது இல்லை.

ஆனால் அவர்கள் எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்கிறது. அவர்கள் எலுமிச்சம் பழத்தை விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது.

இவ்வாறு பச்சைக் காய்கறிகளுடன் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளும்போது பச்சைக் காய்கறிகளுக்குள் ஊட்டச்சத்தின் தன்மை அளிக்கிறது. நமது நாட்டில் இயற்கைச் சிகிச்சை மருத்துவ முறையில் எலுமிச்சம் பழம் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.

நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

பச்சையாகப் பறிக்கப்படும் எலுமிச்சம் பழங்களில் சத்துக்கள் மற்றும் உயிர்ப் பொருட்கள் முழுமை பெறாமலேயே இருக்கக் கூடும்.

மருத்துவ நோக்கில் பயன்படக்கூடிய எலுமிச்சம் பழங்கள் கூடியவரை மரத்திலேயே பழுத்தவையாக இருந்தால்தான் சிறப்பான பயன் கிடைக்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும்.

எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும்.

எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம்.

எலுமிச்சம் பழரசத்தை பானமாக அருந்த விரும்பினால் ரசத்துடன் போதுமான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிக்கலாம்.

பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.

எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.

சற்று உலர்ந்து போன எலுமிச்சம் பழத்தைக்கூட இளம் வெந்நீரில் போட்டு எடுத்தால் பழம் நன்கு துவண்டு அதிக அளவுக்குச் சாறு கிடைக்கும்.

நலம் காக்கும் காய கற்பம்:

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு.

இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.

மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

திங்கள், 23 மே, 2011

நிறத்தைத் தந்தவர் யார்? - ஓர் அறிவியல் பார்வை


மாதங்கி 

bright_colored_vegetables_and_fruits_-_effects_of_food_coloring
இலைகள் ஏன் பச்சைநிறத்தில் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், அதிலுள்ள பச்சையத்தால் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். கீரை எப்படி பச்சையாக இருக்கிறது என்றால் அதற்கும் இதே பதிலைச் சொல்லிவிடலாம்.
நம் கண்களில் அன்றாடம் தென்படும் கமலாப்பழத்தின் காவி நிறத்திற்கோ, கத்தரிக்காயின் கத்தரி நிறத்திற்கோ காரணி யார்? நம் அருகிலேயே இருக்கும் சில நுணுக்கமானவற்றைக் கவனிக்க மறந்துவிடுகிறோம் அல்லது தவறிவிடுகிறோம். இயற்கை பல புதிர்களை எளியமுறையில் நாளும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.
கமலாப்பழம், கத்தரிக்காய் மட்டுமல்ல, திராட்சை போன்றவற்றிற்கும் இன்னும் இவை போன்ற பிறவற்றின் நிறங்களுக்கும் காரணம் அந்தோசயனின் என்ற நிறமிதான்.
நிறமி என்பது ஒரு வண்ணக்கூட்டுப்பொருள். இதில் இரண்டும் வகைகள் உள்ளன.
ஒன்று இயற்கை நிறமிகள் அல்லது உயிரிய நிறமிகள். பச்சையம், பசுங்கணிகம், நிறக்கணிகம் போன்றவை இப்பிரிவில் அடங்கும். இவை ஒளிச்சேர்க்கையுடன் தொடர்பு உடையவை.
இரண்டாவது வகை வேதி நிறமிகள் ஆகும். குரோமியம் ஆக்ஸைடு, ஃபெரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
அந்தோசயனின் முதல் வகையைச் சார்ந்தது. தண்ணீரில் கரையக்கூடியது.தான் இருக்கும் பொருளின் அமிலத்தன்மையைப் பொறுத்து சிவப்பு, நீலம், ஊதா போன்ற ஏதேனும் ஒரு நிறத்தில் காணப்படும்.
அந்தோசயனின் எப்படி உருவாகிறது?
அந்தோசயனின் உருவாவது பலகூறுகளைப் பொறுத்து இருக்கிறது; பொருள் மீது படும் ஒளியின் செறிவு, ஒளியின் அலைநீளம், சுற்றுப்புற வெப்பநிலை, நீர், மாப்பொருள் அளவுகள், நைட்ரஜன், பாஸ்பரஸ், போரான் (boron) ஆகியவற்றின் அடர்வு போன்ற பல காரணிகள் அந்தோசயனின் உற்பத்திக்கு காரணமாகின்றன.
காய்கனிகள் மட்டுமல்லாமல் , மரங்கள், செடிகள் போன்றவற்றின் இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள், என்று பல்வேறு பகுதிகளிலும் உள்ள கண்ணறை நுண்குமிழிகளில் அந்தோசயனின் காணப்படுகிறது. ரோஜா, சாமந்தி, செவ்வந்தி, சங்குப்பூ, கருப்பு,சிவப்பு மொச்சை/கடலை/உளுந்துவகைகள், கருப்பு எள், போன்றவற்றில் அந்தோசயனின் உள்ளது. செந்திராட்சையில் 100 மில்லிகிராமிற்கு 888 மில்லிகிராம் அந்தோசயனின் உள்ளது.
உணவுவகைஅந்தோசயனின் (Mg/100 Gram)
செந்திராட்சை888
கத்தரி750
சேலாப்பழம்350 - 400
மரபணு மாற்றப்பட்ட ஊதா தக்காளி280
கரும்புற்றுநெல்லி365
கொடிமுந்திரி190 - 270
ஆரஞ்சு200
அவுரிநெல்லி,கருநெல்லி, குருதிநெல்லி, செம்புற்றுநெல்லி, கரும்புற்றுநெல்லி, செங்கரும்புற்றுநெல்லி போன்ற பலவித நெல்லிவகைகளிலும் கொடிமுந்திரிகளிலும் அந்தோசயனின் ஏராளமாக இருக்கிறது. சில நாடுகளில் வளரும் சிவப்பு, ஊதா நெல்லிக்கனிகளிலும் அந்தோசயனின் இருக்கிறது.
மேலும், வாழைப்பழம், நாவல்பழம், செவ்வாழைப்பழம், பேரிக்காய், கத்திரி, ஊதா நிறமுட்டைக்கோசு, தண்ணீர்விட்டான் கிழங்கு, பட்டாணி, சோம்புப்பூ, உருளைக்கிழங்கு (சிவப்பு ஊதா உருளைக்கிழங்குகள் சில நாடுகளில் இருக்கின்றன), சிவப்பு, ஊதா நிறங்களில் செயற்கையாக உருவாக்கப்படும் பச்சைப்பூக்கோசு, இலைக்கோசு, பூக்கோசு, சோளம், காவிக்கிழங்கு போன்ற பல்வித காய்கனிகளில் அந்தோசயனின் தாராளமாக இருக்கிறது. (அக்காரக்கிழங்கில் (பீட்ரூட்) உள்ள நிறமி பீட்டாசயனின் ஆகும்.)
tn-veg
இவைகளில் மட்டுமன்றி பல தானியங்களிலும் கூட அந்தோசயனின் நிறைந்துள்ளது. கருப்பு அரிசி, கருப்பு சோயாமொச்சையின் விதையுறை, கருந்துவர்நெல்லியின் (chokeberry) சதை, தோல் பகுதி, இவைகளில் உள்ள அந்தோசயனினின் அளவே ஆக அதிகமானதாகும் (ஒவ்வொரு 100 மில்லிகிராமுக்கும் 2000 மில்லிகிராம் அளவு அந்தோசயனின் உள்ளது- அதாவது 2000/ 100 மி.கி)
மிதவெப்ப நாடுகளில், இலையுதிர்காலங்களில் பச்சை நிற இலைகள் மஞ்சள் நிறம், பொன்னிறம், சிவப்பு நிறம், பழுப்பு நிறம் போன்று ஏதேனும் ஒரு நிறம் அடைவதை பார்த்திருப்போம். இதற்கான காரணங்களில் ஒன்று, இலைகளில் உள்ள பச்சையம் சிதைவுற்று, ஏற்கனவே அதில் உள்ள நிறமி வெளிப்படுவதால்,அவை காவி, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களை அடைவதுதான். காவிநிறமிக்கு கரோட்டினாயிடும், மஞ்சள்நிறமிக்கு ஸாந்தோஃபில்லும் சிவப்பு நிறமிக்கு அந்தோசயனினும் காரணமாகின்றன.
இலைப்பொழிவு காலங்களில் இம்மாற்றங்களை கூர்ந்து அவதானிக்கமுடியும். இலைப்பொழிவு காலங்களில் இலைகளின் நிறம் மாற்றம் அடைவதை நாம் கவனித்திருக்கிறோம். இதற்கு வெப்பநிலை, சூரியஒளி, ஈரப்பதம் போன்ற பல காரணிகள் இருக்கின்றன. வெப்பமான பகல்பொழுதுகளும் குளிர்ந்த இரவுகளும் கொண்ட முதுவேனிற்காலத்தின் பிற்பகுதியில் சில மரஞ்செடிகளின் இலைகள் சிவப்பதைக் காணலாம். இலைகள் மஞ்சள் நிறம் அடைவதற்கும் சிவந்த நிறம் அடைவதற்கும் ஓளிச்சேர்க்கை தடைபடுவது போன்ற பொதுவான காரணம் இருந்தாலும் சில மாறுபாடான காரணங்களும் இருக்கின்றன.
இக்காலங்களில் இலைகளின் அடிப்பகுதியில் ஒரு படலம் (அப்சிஷன் லேயர்) உருவாகிறது. தண்ணீரின் ஓட்டத்தை முதலில் தடுக்கிறது, பச்சையம் உற்பத்தியாவது நின்று போகிறது, இருக்கும் பச்சையம் சிதைவுற்று, அதிலுள்ள நிறமிகள், மஞ்சள் நிறமியான ஸாந்தோஃபில், காவி நிறமியான கரோட்டினாயிட்ஸ் (காவிக்கிழங்கிலும் இதே நிறமி உள்ளது) வெளிப்படுகின்றன.
இதே நேரத்தில் சர்க்கரையின் ஓட்டம் தடைபடுகிறது, இலைகளிலேயே தங்கிவிடும் சர்க்கரை அந்தோசயனின் ஆக மாறி விடுகிறது. செடிகளின் தன்மையைப் பொருத்து அந்தோசயனின் சிவப்பு, ஊதா அல்லது கபில நிறம் பெறுகிறது. வேனிற்காலம் நிறைவுறும்போது உதிர்தல் நடைபெறுகிறது. அபிசிஷன் என்பதன் நேரடியான எளிமையான விளக்கம் , உதிர்தல் என்பதே.
வேனிற்காலம் முடிவடையும்போது அந்தோசயனின் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இக்காலத்தில் ஒளிச்சேர்க்கை தடைபடும்போது, ஓட்டம் தடைபடுவதால் சர்க்கரைப்பொருள்கள் இலைகளிலேயேத் தேங்கி, அந்தோசயனினின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அச்செடியின் அல்லது மரத்தின் தன்மையைப் பொறுத்து இலைகள் சிவப்பு, ஊதா அல்லது செம்பழுப்பு நிறம் அடைகின்றன. (பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில் உள்ள மரங்களின் இலைகள் எப்போதுமே பச்சை நிறத்துடன் இருக்கும் காரணத்தை இப்போது நாமாகவே புரிந்துகொண்டிருப்போம்.) பச்சை நிறக் குடமிளகாய், பச்சை மிளகாய், கோவைக்காய், இவையெல்லாம் பழுக்கத்துவங்கும்போது இதேபோல் பச்சையம் சிதைவுற்று அதிலுள்ள நிறமிகள் வெளிப்படுகின்றன. சிவப்பு நிறத்திற்கு காரணம் மீண்டும் அந்தோசயனின் தான். செடி வளர்ச்சியாக்கிகளான எதிலீன் முதலியவை பச்சையத்தை சிதைவுற வைத்து, இலையை உதிர்க்க, ஆக்சின் என்ற வளர்ச்சியாக்கி காரணியாகிறது. இந்த ஆக்சினின் செயல்பாடு பகல் பொழுதில் கிடைக்கும் சூரிய ஒளியைப் பொறுத்தே அமைகிறது. பச்சையம் சிதைவுறும்போது பழத்தின் சதைப்பகுதி மெதுமையடைகிறது. குடமிளகாயில் இம்மாற்றம் மெதுவாக நடக்கிறது. மற்றபடி காய்கள் எல்லாம் கனியாகும்போது பன்மசர்க்கரையான ஸ்டார்ச், கரிம அமிலங்கள் வளர்சிதைமாற்றம் அடைந்து சர்க்கரையாக மாறுகின்றன. இதனால் கனி இனிப்பாகிறது. பச்சையம் சிதைவுற்று இதிலுள்ள நிறமிகள் வெளிப்படுவதால், கனி வண்ணம் பெறுகிறது. அந்தோசயனின் நிறமி வெளிப்படும் கனிகள் சிவப்பு வண்ணம் பெறுகின்றன. நன்கு பழுத்த பழங்கள் பறவைகளால் உண்ணப்படுகின்றன அல்லது உதிர்தல் மூலம் விதைகளைப் பரவச் செய்கின்றன.
fruit-and-vegetable-boxஅந்தோசயனின் உயிரியல், உடலியல், இயல்பியல் போன்ற பல துறைகளிலும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது . மின்கலங்களின் ஒளி உட்கவரல் திறனை அதிகமாக்க அந்தோசயனின் கரிம சூரிய மின்கலங்களில் சேர்க்கப்படுகிறது. இதன் விளைவாக வெளியேற்றப்படும் ஒளிமின்மிகளின் (ஒளிமின்னணுக்களின்) எண்ணிக்கையும் கூடுகிறது. எளிதாகக் கிடைக்கும் அந்தோசயனினின் ஒளி உட்கவறும் பயனுறுதி திறன் மிக அதிகம் (%90 -நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு).
மூப்பியல், நரம்பியல் நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, அழற்சி, குச்சியத்தொற்று (பாக்டீரியத் தொற்று) போன்ற பல்வேறு நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும், அந்தோசயனின் நிரம்ப உள்ள நெல்லிவகைகள் தரும் நன்மைகள் குறித்து ஆய்வுகள் நடந்துகொண்டே வருகின்றன.
2007 ஆம் ஆண்டில் உணவுக்குழல், பெருங்குடல், முன்பரப்பி பகுதிகளில் புற்றுநோய்க்கு மனிதர்களிடமே, கரும்புற்றுநெல்லி, குருதிநெல்லி போன்றவற்றைப் பயன்படுத்தி மருந்தக சோதனைகள் துவங்கப்பட்டன.
இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் மரபணுவாக்கம் மூலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் தக்காளியில் அந்தோசயனினைச் சேர்த்துள்ளனர். இயற்கையாக விளையும் தக்காளியில் உயிர்வளியேற்றித் தடுப்பியான லைக்கோஃபீன் உள்ளது; அந்தோசயனின் கிடையாது. அந்தோசயனின் உற்பத்தி செய்யும் மரபணு இருப்பதால், 100 கிராம் தக்காளியில் 280 மில்லிகிராம் அந்தோசயனின் இருக்கும் ஊதா நிறத் தக்காளி விளைவிக்கப்பட்டது.
அந்தோசயனின் பல இயற்கையான பயன்பாடுகளைக் கொண்டது. அந்தோசயனின் இருப்பதால் வண்ணமயமாய் உள்ள பழங்களும் பூவிதழ்களும் உயிரினங்கள், மகரந்த சேர்க்கைக் காரணிகள் போன்றவற்றின் கவனத்தைக் கவர்கின்றன. இதனால் விதைகள், மகரந்தத் தூள் போன்றவை பரவுகின்றன. இலைகள், சிலசமயங்களில் தண்டுகள் ஆகியவற்றிலுள்ள ஒளிச்சேர்க்கைத் திசுக்களில் அந்தோசயனின் ஓர் ஒளி செறிவொடுக்கியாகச் செயல்படுகிறது. (செறிவொடுங்கல்- பொருளின் வழியே சூரியக் கதிர்வீச்சு செல்லும்போது அதன் அடர்த்தியும் செறிவும் ஒடுங்குவது) இதனால் புற ஊதா ஒளி, நீல பச்சை ஒளி ஆகியவற்றை உள்வாங்கிக்கொள்வதால் , அதிக ஒளிபட்டு கண்ணறைகள் பழுதாகாமல் பாதுகாக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நாம் கடுமையான வெயிலிலிருந்து அல்லது வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க கண்களுக்கு அணியும் குளிர்கண்ணாடி போல இயற்கையாகவே கண்ணறைகளைக் காக்கிறது.
அந்தோசயனினால் சில மறைமுக நன்மைகளும் இருக்கின்றன.
இதன் கடுமையான சுவையால் தாவரஉண்ணிகள் (தாவரங்களை மட்டுமே உண்பவை) இவற்றைத் தின்னாததால் இவ்வகைச் செடிகள் எளிதாகக் காக்கப்படுகின்றன.
அந்தோசயனின் திறன் வாய்ந்த உயிர்வளியேற்றித் தடுப்பி ஆகும். உயிர்வளியேற்றத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுவது.
ஜப்பானியர்கள் உயிரியல் தொழில்நுட்பத்தை வணிகத்திற்கு ஏற்றவகையில் பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் நிறுவனத்தின் பெயர்குறுக்கம், குறியீட்டுப்படம், பழமொழிகள் என்று ஏதேனும் ஒன்றை ஆப்பிள்பழங்களில் பதிக்கிறார்கள்.
பயிரிடுபவர்கள், கவனமாக மரத்தின் ஒவ்வொரு ஆப்பிள் பழத்தையும் ஒளிபுகா பையால் உறைபோல் வைத்து, முற்றிலும் இருளில் பழத்தை வளர்க்கிறார்கள். பழங்கள் கனியக் கனிய, இவ்வுறைகளை நீக்கியும், இட்டும், சுத்தப்படுத்தியும், பழத்தின் மீது ஒளிபடுதலைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக முற்றிலும் ஒரே வித சிவப்புநிறத்தோலுடைய ஆப்பிள் பழங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றன. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தங்கள் நிறுவனத்தின் குறியீட்டுப்படத்தின் (லோகோ) மாதிரி அச்சுபடத்தைப் (ஸ்டென்சிலை) பழத்தின் வளர்ச்சிகாலங்களில் வைத்து தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கி வணிகத்திற்கு உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
z156076490புகழ்பெற்ற சீன நாட்டுப்புறக்கதை ஒன்றில் நீல நிற ரோஜா மலரைக் காட்டுபவரே இளவரசியை மணமுடிக்கலாம் என்று அறிவிப்பர். பலரும் முயன்று தோற்றுப் போக, இறுதியின் நீலரோஜாவைக்காட்டிய தோட்டக்காரருடைய மகனையே இளவரசி மணப்பாள். அந்த நீல ரோஜா, உண்மையில் நிறப்பூச்சுபெற்ற சாளரக் கண்ணாடி வழியாகக் காட்டப்பட்ட ஒரு வெள்ளை ரோஜாமலர். இன்று இதுபோல் குறுக்கு வழி தேடத்தேவையும் இல்லை. உண்மையாகவே செடியில் பூக்கும் நீல ரோஜாவைத் தருவிக்க முடியும். மணமுடிப்பவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவேண்டும்.
ஹைப்பிரிட் டீ ரோஸ் என்ற பெயர் கொண்ட மரபணுமாற்றப்பட்ட நீல இதழ்களைக் கொண்ட ரோஜா மலரை வணிகரீதியாக கொண்டுவர (இயற்கையான முறையில் வளர்த்து) ஃபிளோரிஜீன் என்ற ஆஸ்திரேலிய உயிரியதொழில் நுட்ப நிறுவனம் உரிமம் பெற்றிருக்கிறது.
ஒரு மலர் வண்ணம் பெறுவது நிறமிகளை உற்பத்தி செய்யும் திறனைப் பொறுத்தே அமைகிறது. சிவப்பு, காவி, மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற பல வண்ணங்களில் ரோஜாமலர் இருந்தாலும் நீல நிறமியான டெல்ஃபினிடின்’ ஐ உருவாக்கும் நொதி இல்லாததால் நீல நிற ரோஜா மலர வாய்ப்பு இல்லாமல் இருந்தது. சிவப்பு நிறமியை பலவித மாற்றங்களுக்கு உட்பட வைத்து நீல வண்ணம் போன்ற சாயலை வரவழைத்தாலும் முற்றிலும் உண்மையான நீல நிற நிறம் இதுகாறும் முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.
ஊதா வண்ண பான்சிப் பூவிலிருந்து ஃ·ப்ளேவினாய்ட் 3′5″ ஹைட்ராக்சிலேஸ்’ என்ற வேதிப்பொருளுக்கான மரபணுவின் (நீலநிறத்திற்கான மரபணு) உபயத்தால்தான் ஃப்ளேரிஜீன் நிறுவனத்திற்கு நீலநிற ரோஜாமலரை உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் காட்டுச்செடியாக வளர்ந்துவந்த இப்பூக்கள் நுரையீரல், தோல், நரம்புகள் போன்றவை தொடர்புள்ள நோய்களுக்கு மருந்தாக முற்காலத்திலேயே மருந்துச்செடியாக அறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் மரபணுதொழில்நுட்பக் கட்டுப்பாட்டகம் இந்நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தாலும் இதனால் உடல்நலத்திற்கோ சூழலுக்கோ இக்கு ஏற்படுத்தும் சாத்தியம் மிகக்குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது. எதற்கும் முன்னெச்சரிக்கையாக, மரபணுமாற்றப்பட்ட ரோஜாமலரின் மகரந்தத்தில் புதிதாகப்புகுத்தப்பட்ட மரபணு இல்லை என்பதையும் உறுதிமொழிந்திருக்கிறது.
அந்தோசயனின் நிறைந்த தானிய, பழ, விதை வகைகள் நம் முன்னோரால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. கருங்குறுவையரிசி, காராம்பசுவின்பால் இன்னும் சில பொருள்களைச் சேர்த்துத் தயாரித்த மருந்து, குறிப்பிட்ட வகையில், நேரத்தில், குறிப்பிட்ட பயிற்சியின்பின் உண்டால் காயசித்தி அளிக்கும் என்று சித்தர்களின் மருத்துவம் பற்றிய நூலின் வரிகள் என் நினைவுக்கு வந்தன.
கருநெல்லி, செம்புற்றுநெல்லி, என்று பல நெல்லிவகைகள் உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என்றும் தீவிர நோய்களிலிருந்து காக்க வல்லது என்றும், ஊதா, சிவப்பு, மஞ்சள் காவி நிற பழங்கள் காய்கறிகள் உண்ணவேண்டும் என்றும் கிட்டத்தட்ட எல்லா நலக்குறிப்புகளும் ஊடகங்களில் ஒருங்கிணைந்து கூறுகின்றன. இதற்கெல்லாம் இவற்றிலுள்ள அந்தோசயனினும் ஒரு காரணி.
அரசன் அதியமான் தனக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்த கருநெல்லிக்கனியை, ஔவையார் நீண்ட நாள் வாழ மனமுவந்து அளித்ததை நம் இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் படித்துவருகிறோம். சொல்லி மகிழ்கிறோம். கருநெல்லி உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பில் ஒளி உண்டாக்கும். (ஒளிவட்டம் அன்று, பளீரிடும் சருமம் என்று புரிந்துகொள்ளலாம்).
இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட கருநெல்லி பிளாக்பெரியாகும். Berry வகைகள் நெல்லி வகைகளாகவே கருதப்படுகின்றன. ஸ்ட்ராபெரி என்ற பெயர் காரணம் தெரியவந்தபோது வியப்பாக இல்லை. ஓரளவு எதிர்பார்த்ததுதான். மேலைநாட்டினர் மிக மெதுமையான பழம் என்பதால் பெட்டிகளில் வைக்கோலைப் பரப்பி அடுக்கியுள்ளனர். அப்படியே ஸ்ட்ராபெரி என்று பெயர்வைத்துவிட்டனராம். தமிழில் செம்புற்றுப்பழம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பார்க்க குட்டிப்புற்றைப்போலவே இருப்பதால் இருக்கும். ராஸ்பெரி கரும்புற்றுநெல்லியாகவும், ரெட்ராஸ்பெரி செங்கரும்புற்றுநெல்லியாகிவிட்டது.
கிரான்பெரிக்கு குருதிநெல்லி என்பதைவிட வேறு பொருத்தமான பெயர் இருக்க வாய்ப்பில்லைதான்.
தமிழகத்தில் துவர்ப்புச் சுவையுடைய நெல்லிக்கனியும் , புளிப்புசுவையுடைய நாட்டுநெல்லியும் (அரிநெல்லிக்கனி) பயன்பாட்டில் இன்றும் இருக்கின்றன.
amla1279171143_std‘சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்’
என்று அகநானூற்றுப் பாடலில் குறுமுயலின் கண்ணை ஒத்தது என்றெல்லாம் நெல்லிக்கனியை வருணித்திருக்கிறார்கள். காட்டுநெல்லி சத்துமிகுந்தது. இது இயற்கை உணவில் இடம்பெற்றது என்று சங்க இலக்கியத்தில் கூறப்படுகிறது. நெல்லிக்கனிகளும் சத்துகள் மிகுந்தவை. பச்சைநிற நெல்லிக்கனியில் அந்தோசயனின் இல்லை. கருநெல்லிக்கனியில் அந்தோசயனின் இருக்கிறது.
இப்போது அந்தோசயனின் நிறைந்த பிளாக்பெரிக்கு (கருநெல்லி) வருவோம். சிறியஅரிநெல்லி உருவளவில் மிகமென்மையான பழம்; கருப்பு நிறமுடையது. கொத்துகொத்தாக காய்க்கிறது; இனிப்புகலந்த புளிப்பு சுவையுடையது.
அதியமான் அளித்தது கருநெல்லிக்கனி அல்லவா. சிவப்பு, ஊதா நெல்லிக்கனிகள் சில நாடுகளில் இன்றும் விளைகின்றன. இவை மூன்றிலும் அந்தோசயனின் இருக்கிறது. கருப்புநெல்லிக்கனிகள் தமிழகத்தில் இற்றுப்போய்விட்டனவா.
நீண்டகாலம் வாழவைக்கும் மருந்துகளைத் தயாரிக்க ஆய்வுகள் உலகில் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. சித்தர் மருந்துக்கலவை போன்றோ சிறிது மாறுதல்களுடன் கூடிய மருந்துக்கான கலவைசூத்திரத்தை யாராவது கண்டுபிடிக்கலாம். அதற்குமுன் கருங்குறுவையரிசி, காரரிசி, எள் போன்றபலவற்றுக்கும் மருந்து நிறுவனங்கள்
காப்புரிமை பெற்றுக்கொள்ள முந்தலாம்.
2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க வேதியியல் கழகத்தின் 240 ஆவது தேசியக் கூடுகையில் கருப்பு அரிசியில்தான் ஆகக்கூடுதலான அளவு உடல்நலத்திற்கு உகந்த உயிர்வளியேற்றித் தடுப்பிகள் (antioxidants) உள்ளன என்ற அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
கருப்பு அரிசி, பழங்காலச் சீனாவில் அரசபரம்பரையினர் மட்டுமே உண்ண அனுமதி இருந்ததாகவும் மற்ற அனைவருக்கும் அது தடைசெய்யப்பட்ட அரிசியாக (forbidden rice) ஆக இருந்ததாம்.
சற்று விலை கூடுதலாக உள்ள அவுரிநெல்லி , கருநெல்லி (பிளாக்பெரி) போன்றவற்றைவிட விலை குறைந்தது கருப்பு அரிசி என்றும், ஒரு தேக்கரண்டி கருப்பு அரிசியில் உள்ள உயிர்வளியேற்றித் தடுப்பிகள், ஒரு தேக்கரண்டியில் கொள்ளும் அவுரிநெல்லிகளில் உள்ளதை விட அதிகம் என்றும், மேலும் கருப்பு அரிசியில் சர்க்கரை சத்து குறைவு, நார்ச்சத்தும், உயிர்ச்சத்து E யும் அதிகம் என்றும் கருப்பு அரிசி, அதன் தவிடு இவற்றை ஏன் பரவலாகப் பயன்படுத்தக்கூடாது என்று லூசியானா மாநிலப் பல்கலைகழகத்தின் விவசாய மைய இணைப்பேராசிரியர் ஸிமின் சூ கருதுகிறார்.
கொள், பயறு, வரகு, சாமை, தினை போன்றவை உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றவை என்றும் இவற்றை உட்கொள்வதால் பல நோய்நொடிகள் விலகி ஓடும் என்றும் தற்போதைய உடல்நலக்கேடுகளை விரட்ட இவை மருந்துகளுக்கு ஈடானவை என்ற அறிக்கை உலகில் எங்காவது சமர்ப்பிக்கப்படலாம். நாம் அதன் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்பதை அகநானூறு, ஐங்குறுநூறு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுடன் நிறுவலாம். வரகரிசி சோறும், வழுதுணங்காய் வாட்டும் என்ற ஔவையின் தனிப்பாடல் தேனாக இப்போதே செவியில் ஒலிக்கிறதல்லவா?

செவ்வாய், 10 மே, 2011

விலங்குகளின் அறம்



                                                                                                                                                                                                    - மித்திலன் 
1-elephant-family-carl-purcell
அண்மையில் நான் படித்ததொரு செய்தி வியப்பளிப்பதாக இருந்தது. செய்தி என்னவோ எளிமையான ஒன்றுதான், ஆனால் அதன் அவசியம் நம் அறிவியல் அடிப்படையிலான தேர்வுகளைக் கேள்விக்குறியாக்குவதாக இருந்தது - மரபணுவின் அடிப்படையில் மனிதர்கள் சிம்பன்ஸீக்களைவிட பொனோபோ குரங்குகளுக்கே நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்கிறோம், ஆனால் மனிதன், சிம்பன்ஸீ, பொனோபோ இந்த மூன்றும் (இதில் மனிதனைத் தவிர மற்ற இரண்டும் குரங்குகள்) 98.8 சதவிகித மரபணுத் தொகுப்பில் ஒன்றே போலிருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவான யாரோ ஒரு மூதாதையர் இருக்கிறார். இவர்களில் இத்தனை நாட்கள் நாம் சிம்பன்ஸீ குரங்குகளைப் போலிருக்கிறோம் என்று அறிவியலாளர்கள் சொல்லி வந்தனர். ஆனால் இப்போது சிம்பன்ஸீயின் மரபணுத் தொகுப்பு விரைவான மாற்றங்களுக்கு உட்படுவதால் அவை மனிதனை விட வெகு தூரம் விலகிப் போய் விட்டதாகவும், மனிதன் பொனோபோ குரங்கைப் போன்றவன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று சொல்கின்றனர்.
bonobo
இது ஒன்றும் அறிவுலகில் ஒரு ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பைப் போன்ற மாபெரும் புரட்சியல்ல. ஆனால் இதைத் தொட்டு எழும் சிந்தனைகள் மனிதனுடைய இயல்பு குறித்து ஒரு பெரிய அளவில் பார்வை மாற்றம் செய்வதாக இருக்கிறது.
டார்வினின் காலம் வெள்ளையர்களை உயர்ந்தவர்களாகப் பார்த்த காலம். மற்றவர்கள் விலங்களைப் போன்றவர்கள் என்று நினைத்த காலம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது அறிவியல் உண்மையாக அடையாளம் காணப்பட்டு அதைத் தொடர்ந்து அது பொருளாதார உண்மையாகவும் அறியப்பட்டு, அரசியலில் சொல்லப்படாத நடைமுறையாக இன்று இருக்கிறது.
இதற்கெல்லாம் மனிதன் சிம்பன்ஸீயைப் போன்றவன் என்று சொல்வது பயனுள்ளதாக இருந்தது. காரணம் சிம்பன்ஸீக்களின் இயல்பு அப்படி. குரங்குகள் தங்கள் பகுதியைக் காக்க ஆண்களைக் காவல் குரங்குகளாய் நியமிக்கின்றன - அவை அந்நியக் குரங்குகளைக் கொலை செய்கின்றன. குழந்தைகளைக் கொல்கின்றன, அடித்துக் கொன்ற குரங்குகளைத் தின்கின்றன, வழிக்கு வராத தம் கூட்டத்தைச் சேர்ந்த குரங்குகளையும் கொல்லத் தயங்குவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குரங்குகள் வேட்டையில் ஆவேசமான களிப்படைகின்றன. இது எல்லாம் மனிதன் வன்முறைக்குப் புதியவனல்ல, அது அவனது இயல்பு என்று நியாயப்படுத்த உதவுவதாக இருந்தன. ஆனால் பொனோபோக்கள் பாவம், அவற்றின் பெண்கள் ஆண்களை எதிர்த்து நிற்கிறார்கள், ஒன்றோடொன்று சேர்ந்தியங்குகின்றன:
இதெல்லாம் நமக்கு சரிப்படவில்லை. இங்கு மனிதனின் பிம்பம் கிடைக்கவில்லை. இப்போதிருப்பதற்கு இணையான தகவல் அப்போது இருந்தாலும், நமக்கு சிம்பன்ஸீக்களே நெருங்கியவர்களாக இருந்தார்கள். பொனோபோ குரங்குகள் புறக்கணிக்கப்பட்டன.
காலம் மாறுகிறது, நமது விழுமியங்களும் மாறி வருகின்றன. இப்போது பொனோபோக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை நம்மைப் போன்ற இனமாக அடையாளம் காணப்படுகிறது. சிம்பன்ஸீக்கள் இனி மெல்ல மெல்ல நமது ஆய்வுக் கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் என்று நம்பலாம். எதிர்கால ஆய்வுகளில் பொனோபோக்கள் உட்படுத்தப்படும்.
–ooOOOoo–
பொனோபோக்கள் என்றில்லை, அனைத்து விலங்குகளும்கூட வளமான உணர்வுலகில் வாழ்வனவாக இருக்கின்றன என்று சில தகவல்களைப் படிக்கும்போது தோன்றுகின்றது. அறவுணர்வு, அல்லது நடத்தையின் அடிப்படையில் நம் முன்னோர்களைத் தீர்மானிப்பதானால் அதற்குத் தகுதியுள்ள விலங்குகளுக்குப் பஞ்சமில்லை.நாய்களின் நுகர்வுத்திறன் மனிதனதைவிட இருபத்து ஐந்து மடங்கு ஆற்றல் மிகுந்தது. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தன் சகாக்களுடன் யானைகள், திமிங்கலங்கள், நீர்யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் முதலைகள் தாழ் அலைவரிசை ஓலி எழுப்பி உரையாடுகின்றன. இவற்றுக்கு மாறாக வௌவால்கள், டால்பின்கள் போன்றவை உயர் அலைவரிசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
மனிதனைத் தவிர வேறெவருக்கும் கருவிகளை வடிவமைக்கத் தெரியாது என்று சொல்லலாம். சிம்பன்சிகளுக்கு இதில் ஓரளவு நிபுணத்துவம் உண்டு. பசிபிக் தீவிலுள்ள காகங்கள் கருவிப் பயன்பாட்டில் தேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. நீளமான ஒயர்களை வெவ்வேறு வடிவங்களில் வளைத்து அவை தம் உணவைக் கைப்பற்றுகின்றன. ஆய்வுக்கூடத்தில், ஒரு நூலில் கட்டப்பட்ட குச்சியை அந்த நூலை இழுத்துக் கைப்பற்றுகின்றன. இந்த சிறு குச்சியைக் கொண்டு இதனினும் பெரிய குச்சியைத் தம் பக்கம் இழுத்து, அதைக் கொண்டு தொலைவில் இருக்கும் உணவை அடைகின்றன.
ந்யூசீலாந்தில் உள்ள காகங்கள் தம் குஞ்சுகளுக்கு கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுத் தருகின்றன. ஆக்லாந்து பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இத்தகைய கல்வி பழக்க இந்தக் காகங்கள் பிரத்யேக இடம் வைத்திருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
மிருகங்களுக்கும் ஆனந்தம், மகிழ்ச்சி, கருணை, துக்கம், வெட்கம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. இதில் சந்தேகப்படவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. நம்மைப் போன்றே அவற்றுக்கும் மூளையின் லிம்பிக் அமைப்பு உணர்ச்சிகள் எழும் மையமாக இருக்கிறது.
ஸீ லயன்களின் குழந்தைகளைத் திமிங்கலங்கள் கொன்று தின்னும்போது அவை துயரத்தில் ஓலமிடுகின்றன. இறந்து போன தன் குட்டியை டால்பின்கள் கடலின் மேற்பரப்புக்குத் தள்ளி வந்து உயிர்ப்பிக்க முனைகின்றன. சிம்பன்ஸீ குரங்குகளும் யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றன. கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றன. பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டு தன் நெஞ்சில் அறைந்து கொண்டது. இறந்த கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை அதன் கையில் தந்து அதை எழுப்பப் பார்த்தது.
b-315034-gorilla_looking_to_him_dead_baby_cry_cry
[தன் இறந்த குழந்தைக்காக அழும் கொரில்லா]
மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றன; அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றன. இறந்த நரிகள் புதைக்கப்படுகின்றன. யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றன.
துயரம், கருணை ஆகிய உணர்வுகள் மட்டுமல்ல, ஆனந்தம் கூட விலங்குகளுக்கு சாத்தியமாக இருக்கிறது. ஜேன் குட்டால் ஒரு அருவிக்கு மெய்யாகவே மெய் சிலிர்த்த நிலையில் வந்தடைந்த ஒரு சிம்பன்ஸீ குறித்து விவரிக்கிறார். “நெருங்கி வருகையில், அருவியின் நீர் வீழ்ச்சி அதன் செவியில் உரத்து ஒலிக்கையில் அதன் நடையில் வேகம் கூடுகிறது; அதன் சரும முடிகள் குத்திட்டு நிற்கின்றன; அருவியின் அண்மையை நெருங்கியதும் அது நீரினருகில் அற்புதமாக ஆடக் கூடும். நிமிர்ந்து நிற்கிறது, காலோடு கால் மாற்றி ஒரு லய உணர்வுடன் சாய்ந்தாடுகிறது. பெருகி ஓடும் ஆழமில்லாத தண்ணீர் பரப்பைத் தன் கால்களால் தட்டுகிறது; மிகப் பெரிய கற்களை எடுத்து வீசுகிறது. சில சமயங்களில் அது நெடிந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் சன்ன விழுதுகளைப் பற்றி மேலேறுகிறது- அருவியிலிருந்து தெறிக்கும் நீர்த்திவலைகளில் அந்த விழுதுகளைப் பற்றித் தொங்கி ஆடி மகிழ்கிறது. இந்த “அருவி நடனம்” பத்து பதினைந்து நிமிடங்களுக்கு நீடிக்கலாம்” என்று எழுதுகிறார் குட்டால். சிம்பன்ஸீக்கள் பலமான மழை வரும்போதும் கடுங்காற்று வீசும்போதும் அருள் வந்தது போன்ற உத்வேகத்துடன் ஆடுகின்றன.
ஜேன் குட்டால் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட ஒரு சிம்பன்ஸீ குடும்பத்தில் நடந்த நிகழ்வை விவரிக்கிறார். பிபியின் ஐந்தரை வயது மகன் பிராய்ட். அவளது அண்ணன் பிகாண் அந்தக் கூட்டத்தின் தலைவன். ஒரு முறை பிபி தன் அண்ணனுக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தபோது காட்டு வாழை மரமொன்றின் மேலேறிய பிராய்ட் தண்டு உடைந்து கீழே விழுந்ததாம். விழுந்ததும், தான் விழுந்ததைத் தன் மாமன் கவனித்துவிட்டானா என்று ஒரு அவமான உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தது பிராய்ட். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றறிந்ததும் சத்தமில்லாமல் இன்னொரு மரமேறி சாப்பிடத் துவங்கிற்று.
மார்க் ஹௌசர் ரீசஸ் குரங்கு ஒன்றைப் பற்றி சுவையான கதை சொல்கிறார். அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒரு பெண் குரங்கைப் புணர்ந்து முடித்ததும் பெருமிதமாக நடை போடுகையில், கவனமில்லாமல் போய் ஒரு சாக்கடையினுள் விழுந்து விட்டது. அது அவசர அவசரமாக எழுந்து, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு ராஜ நடையைத் தொடர்ந்தது என்கிறார் ஹௌசர். அந்த ரீசஸ் குரங்கு உண்மையில் இப்படியெல்லாம் அவமானப்பட்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாது, ஹௌசர் அந்தக் கவலை எதுவும் இல்லாமல் தன் ஆய்வு முடிவுகளைத் திருத்தி எழுதி அவமானப்பட்ட கதை நமக்குத் தீர்மானமாகத் தெரியும், இல்லையா? அவமானப்பட்ட பிறகு அவர் இன்னும் ஹார்வர்ட் பல்கலை வகுப்பறைகளில் ‘ராஜ நடை’ போடுகிறாரா என்பது குறித்துத் தகவல் இல்லை, ஆனால் ஹார்வர்ட் அவமானப்பட்ட பிறகு ஒரு நிறுவனமாக நடந்து கொண்டு அவரை வேலையை விட்டுத் தள்ளி வைத்திருக்கிறது. இன்னும் நீக்கவில்லை. ஹார்வர்ட் அவரை நீக்காமல் மறுபடி வேலையில் அமர்த்தினால், அவமானப்பட்ட பிறகு ஹார்வர்டும், ஹௌசரும் மேற்படி ரீசஸ் குரங்கைப் போல நடந்தனரா என்று நாம் யோசிக்கலாம்.
யானைகள் புதிதாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. டென்னசீயில் உள்ள யானைகளின் சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட இரு முதிய யானைகள் ஒன்றை ஒன்று கண்டதும் பிளிறி அழைக்கத் துவங்கின. அவை இருந்த கூண்டுகளின் கம்பிகளுக்கு இடையே தம் துதிக்கைகளை நுழைத்து ஒன்றை ஒன்று தொட்டுத் தடவின. என்ன நடக்கிறது இங்கே, என்ற ஆச்சரியத்துடன், இந்த யானைகள் குறித்த ஆவணங்களைத் தேடிப் பார்த்தபோதுதான் இவை இரண்டும் இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்க்கஸில் இணைந்திருந்திருக்கின்றன என்ற தகவல் தெரிந்ததாம். யானைகளின் நினைவுத் திறன்!
சிறு வயதில் தன்னைக் குட்டியாக எடுத்து வளர்த்த எஜமானர்களை மீண்டும் பார்த்தபோது ஒரு ஆப்பிரிக்க சிங்கம் கட்டியணைத்துக்கொண்டது ஒரு பிரபலமான நிகழ்ச்சி.
கூட்டங்களாய் வாழும் மிருகங்களின் அறம் சார்ந்த விதிகள் கூட்டத்தினுள் சண்டையைக் குறைத்து ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன. ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் என்பது நாமனைவரும் அறிந்த ஒன்று. அவை மிக சாதுரியமாக தாம் வேட்டையாடும் விலங்கை சுற்றி வளைக்கின்றன. விளையாட்டின் மூலமே இவை இத்திறனை வளர்த்துக் கொள்கின்றன. ஓநாய்களின் விளையாட்டு விதிகள் மிகக் கடுமையானவை, அவற்றின் வேட்டை விதிகளைப் போலன்றி விளையாட்டு விதிகள் நியாயமானவை. விளையாடும்போது அதிகாரம் செலுத்தும் ஓநாய்கள் மற்ற ஓநாய்களிடம் பணிந்து போகின்றன, ‘செல்லமாகக்’ கடிக்க அனுமதிக்கின்றன- ஓநாய்களின் அதிகாரம் கவர்ச்சியாலோ பிரபல்யத்தாலோ அடையப்பட்ட ஒன்றல்ல- அது ஆற்றலால் ஈட்டப்பட்ட ஒன்று. எளிதில் தம்மால் வெல்லப்படக் கூடியவர்களிடம் விளையாட்டுக்காக கடி வாங்குவது, அவற்றுக்கு நுட்பமான்தொரு அற உணர்வு உள்ளது என்ற உண்மையைச் சுட்டுகிறது, இல்லையா? அப்படி விளையாட்டு சுவாரசியத்தில் கொஞ்சம் பலமாக பதம் பார்த்து விட்டால் தவறு செய்த ஓநாய் வணங்கி மன்னிப்பு கேட்டுவிட்டு விளையாட்டைத் தொடர்கிறது.
wolves
கொயோட் என்றழைக்கப்படும் நாய் வகை பிராணிகளின் விளையாட்டு விதிகள் இன்னமும் கடுமையானவையாக இருக்கின்றன. வெறித்தனமாக விளையாடும் குட்டிகள் வலுவாகக் கடித்த காரணத்துக்காக கூட்டத்தை விட்டு விரட்டப்படுகின்றன. இவை தனியாக வேட்டையாடி வாழ்வது என்பது மிகக் கடினமான ஒன்று- இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக ’இயற்கை நெறி’ தெரிவு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். காலப்போக்கில் கூட்டங்களில் இருக்கும் கொயோட்கள் அனைத்தும் விதிகளுக்குப் பணிந்து ஒத்துழைப்பனவாகவே இருக்கும், இல்லையா? சொன்ன பேச்சு கேட்காதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்து போகிறார்கள். இவை போலல்லாமல் மனிதர்களின் அறவுணர்வு கூட்டத்துக்கு எதிரானவர்களின் உரிமைகளுக்காகவும் வாதாடுகிறது என்பது மானுடத்தின் பலமும் பலவீனமுமாகும்.
ஆனால் நமது தேவைகள் மற்ற விலங்குகளில் தேவைகளைப் போன்றதல்ல, நமது வாழ்வாதார கட்டாயங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவனவாக இருப்பதால் தனி மனித உரிமைகள் குழு சார்ந்த உரிமைகளுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன.
கூடி வாழும் பிராணிகளுக்கு கருணையும் இரக்கமும் தேவைப்படுகின்றன. அவை குழு ஒற்றுமையைக் கூட்டி வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள உதவுவதால் இக்குணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று சொல்லலாம்- அல்லது கூடி வாழும் எந்தக் குழுவிலும் தம் குழுவைச் சார்ந்தவர்கள்பால் அனுதாப உணர்வு தோன்றுவது இயற்கையே என்றும் சொல்லலாம். டயானா குரங்குகள் சோதனைக் கூடத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். ஒரு சோதனையில் ஸ்லாட்டில் வில்லையை நுழைத்தால்தான் உணவு அவற்றுக்குத் தரப்பட்டது. இந்தக் கலையில் தேர்ந்த குரங்கு ஒன்று, தன் கூட்டத்தின் மூதாட்டியின் சார்பில் ஸ்லாட்டுக்குள் வில்லையைப் போட்டு உணவு வரவழைத்துக் கொடுத்தது- இதில் அதற்கு என்ன லாபம் இருந்திருக்க முடியும்?
செரிப்ரல் பால்சி என்பது உடல் மற்றும் மனதைப் பெருமளவில் பாதிக்கும் நிலை- நம் ஊரில் பெற்ற தாயே இத்தகைய குழந்தையைக் கைவிடுவதும் உண்டு. ஆனால் ப்ளோரிடாவில் உள்ள ஒரு வனவிலங்கு மையத்தில் இந்நிலையில் உள்ள சிம்பன்ஸீ குரங்கை மற்ற சிம்பன்ஸீக்கள் கருணையுடன் அணுகுவதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கின்றனர். பொதுவாகவே சிம்பன்ஸீகள் நியாய உணர்வு மிகுந்தவை. யாராவது இவற்றின் நடத்தை விதிகளை மீறினால் உடனே மற்றவர்கள் ஒன்று சேர்ந்து தண்டிப்பது உறுதி.
சிம்பன்ஸீக்களாவது மனிதனுக்கு நெருங்கின சொந்தம், அவற்றுக்கு அறவுணர்வு இருப்பதிலோ அதைக் கட்டிக் காக்கக்கூடிய சட்ட விதிகள் இருப்பதிலோ ஆச்சரியமில்லை. ஆனால் எலிகள்?
ஒரு குரூர சோதனை- சோதனைக் கூடத்து எலிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர் விஞ்ஞானிகள். ஒரு குழு சாப்பிடும்போது மற்ற குழுவில் உள்ள எலிகளுக்கு மின் அதிர்ச்சி தரப்பட்டது. சகாக்கள் தம் செயலால் வதைபடுவதைப் பார்த்து தாம் சாப்பிடுவதை நிறுத்துகின்றன எலிகள்.
வலியால் அவதிப்படுகிற ஒரு எலியைப் பார்க்கிற இன்னொரு எலி, தானும் வதை செய்யப்படும்போது மிகை வலியை உணர்கிறது. பிறரது உதவியைப் பெற்ற எலிகள் மற்ற எலிகளுக்கு உணவு பெற்றுத் தந்து உதவுகின்றன. சில வௌவால்கள் பிராணிகளின் ரத்தத்தைக் குடிக்கும். இந்த காட்டேரி வௌவால்கள் வேட்டை முடிந்து திரும்பியதும் இரை கிடைக்காமல் பசியோடிருக்கும் சகாக்களுக்கு தாமருந்திய ரத்தத்தைப் பகிர்ந்தளித்து உதவுகின்றன. பெண் வௌவால் ஒன்று பிரசவ வேதனையில் இருக்கும் இன்னொரு வௌவாலுக்கு சரியான முறையில் பிரசவிக்க உதவியதை ஃஃப்ளாரிடாவில் ஒரு விஞ்ஞானி ஆவணப்படுத்தி இருக்கிறார்.
–ooOOOoo–
விலங்குகளுக்கு விளக்கத் தெரியாது- இருந்தாலும் அவை அற உணர்வுகளால் உந்தப்படுகின்றன என்பதை அவற்றின் செயல்களைக் கொண்டு நாம் அனுமானிக்க முடியும். அடுத்தது மனிதனின் கதையைப் பார்க்கலாம்.
உலகில் உள்ள பண்பாடுகளில் பல பண்பாடுகள் மனிதனை மனிதன் தின்பதை அங்கீகரிக்கின்றன. இன்னும் அதிக அளவிலான பண்பாடுகள் பலதார மணம் செய்வதை ஊக்குவிக்கின்றன. விளையாட்டுக்காக வேற்றுக் குடிகளுடன் மோதி அவர்களது தலைகளை மனிதர்கள் கொய்கிறார்கள். சித்திரவதை காலங்காலமாக மனிதனால் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இது தவிர உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்திக் கொள்வதும் மனிதனின் இயல்பாக இருக்கிறது- சீனாவில் ஆயிரமாண்டுகள் போல, சில குழுப் பெண்களின் கால்கள் இறுக்கக் கட்டி வைக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றன. இன்றும் சில இசுலாமிய நாடுகளில் பெண்களின் பாலியல் உறுப்புகள் பின்னப்படுத்தப்படுகின்றன. எந்திரமயமாகிவிட்ட முன்னேறிய நாடுகளில்கூட அடிமை முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மிகச் சமீப காலம் வரை இருந்திருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத, ஆனால் சமூக கவனிப்பு அதிகம் இல்லாது இன்றும் அடிமை முறைப் பாலுறவு மேற்கு நாடுகளில் ஒரு வாணிபமாகவே புழங்குகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்று அறிவியலின் பயன்கள் அனைவருக்கும் உரியனவாக இல்லை. வறுமை நிலையில் வாழ்பவர்களை அலட்சியப்படுத்தி வளங்கள் ஒரு சிலரால் மட்டும் ஆண்டனுபவிக்கப்படுவதை பொருளாதாரக் கோட்பாடுகள் நியாயப்படுத்துகின்றன- அவற்றை ஏற்பவர்கள் கல்வி அறிவற்ற காட்டுமிராண்டிகள் அல்ல- மிக்கப் படித்தவர்கள், உயர் பண்பாட்டின், நாகரீக வளர்ச்சியின் பிரதான முகங்கள்.
யோசித்துப் பாருங்கள், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அசையக்கூட இடமில்லை. மேலை நாடுகளில் மாடுகளுக்கும் இந்நிலைதான். நம்மால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு பூமி முன்னெப்போதும் காணாதது. இது போதாதென்று அணு ஆயுதங்கள். முதலியத்தின் பெயரால் சுரண்டல், சமத்துவத்தின் பெயரால் அடக்குமுறை, உலகமயமாக்கத்தின் கோரப் பசிக்கு இரையாகும் மூன்றாம் உலக வளங்கள்…
மனிதனின் அறவுணர்வுக்கு என்னாயிற்று? அது தர்க்க நியதிகளால்- சுருக்கமாக சொன்னால் அறிவால்- மிகைபலம் பெற்றிருக்கிறது. நியாயப்படுத்துவதன் மூலம் எதையும் நிகழ்த்திக் காட்டக் கூடியவனாக மனிதன் இருக்கிறான். அறிவு, மனிதனின் அறவுணர்வின் கேடாக இருக்கிறது.
hh-coverஒரு யானைப் பாகனைப் போன்றது அறிவு, என்று சொல்கிறார் ஜோனதன் ஹெய்ட். நமக்கு விலங்கு உணர்வுகள் உண்டு, அவையே மேலோங்கிய ஆற்றல் கொண்டவை. அவற்றுக்கு திசையறிவிக்கும் பணியையே அறிவு செய்கிறது என்கிறார் அவர். ஆமாம், அறவுணர்வு அறிவைக் கொண்டு அடையப்பட்டதல்ல என்கிறார் ஹெய்ட். அறிவு அறம் குறித்தெழும் உணர்ச்சிகளுக்கு நியாயப்படுத்தலை மட்டுமே செய்கிறது. இதை சுட்டும் விதமாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார்-
ஒரு சகோதரனும் சகோதரியும் பயணம் செய்கிறார்கள். ஒரே ஒரு நாள் இரவு, ஒருவரை ஒருவர் மகிழ்விப்பதற்காக காண்டம் அணிந்து பாதுகாப்பான பாலுறவு கொள்கிறார்கள். இதை யாரிடமும் சொல்வதுமில்லை, இனித் தொடர்வதுமில்லை என்று உறுதி பூண்டவர்களாக அடுத்த நாள் அவரவர் வேலையைப் பார்க்கிறார்கள். இவர்கள் செய்தது சரியா?
நாமெல்லாரும் தவறு என்றுதான் சொல்வோம், ஆனால் ஏன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது, இல்லையா? ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று சொல்ல முடியாது. இதில் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. அப்புறம் என்ன? இருந்தாலும் இது ஒழுக்கக் கேடான செயல் என்றுதான் நாம் சொல்வோம். காரணம், அறத்தை நாம் அறிவைக் கொண்டு அறிவதில்லை. நாமறிந்த அறத்துக்கான நியாயங்களை மட்டுமே அறிவு கொடுக்கிறது.
நிலைமை இப்படி இருக்கையில், எந்த நம்பிக்கையில் குறிப்பிட்ட சில அறங்களை மேலான அறங்களாக நாம் முன் வைக்கிறோம்? சிந்திக்க வேண்டிய கேள்விதான், இல்லையா?
ஹெய்ட் அறவுணர்வின் அடிப்படைகளை ஐவகையாக பிரிக்கிறார்-
1. நியாயவுணர்வு: நாம் நியாயமாக நடந்து வேண்டும், அனைவருக்கும் சம உரிமை, நமக்குக் கிடைத்த நன்மைகள் பிறருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
2. தீதின்மை, அக்கறை - எல்லாருக்கும் நன்மை செய்யவேண்டும், யாருக்கும் தீமை செய்யக் கூடாது.
இவ்விரண்டு விழுமியங்களும் தனி மனித உரிமைகளை அரண் போல் காக்கின்றன. இவையே தற்போது நாகரீக நாடுகளில் மேலாதிக்கம் செய்யும் அற விழுமியங்களாக இருக்கின்றன.
ஆனால், இவற்றை அன்றி மேலும் மூன்று முக்கியமான விழுமியங்கள் இருக்கின்றன என்கிறார் ஹெய்ட். அவை,
1. குழு மனப்பான்மை, விசுவாசம்
2. மதிப்பு, மரியாதை
3. சுத்தம், புனிதம் குறித்த அக்கறை.
இந்த மூன்றும் குழு ஒற்றுமைக்கு உதவி செய்கின்றன என்கிறார் ஹெய்ட்.
இவை குறித்து நிறைய விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது- ஆனால் தற்போது நாம் கவனிக்க வேண்டியவை இந்த ஐந்து அற அடிப்படை உணர்வுகளும் மனிதனோடு ஏனைய மிருகங்களுக்கும் இருக்கின்றன: ஓநாய்கள்கூட விளையாடும் பொழுதில் சம உரிமை தருகின்றன, எலிகள் மற்ற எலிகள் தங்கள் செயலால் வதைபடுவதை விரும்புவதில்லை, விலங்குகளின் குழு ஒற்றுமை குறித்தும் கீழ்படிதல் குறித்தும் சொல்லவே வேண்டாம்- நரிகள் கூட இறந்த நரிகளைப் புதைத்து ஏதோ ஒரு வகையில் அவற்றின் சீர்கேட்டைத் தவிர்க்கின்றன. இதற்குத் தற்காப்பு என்பது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் நரிகளின் தர்க்கத்தை நாம் எப்படி அறிவோம்?
அறத்தின் இந்த ஐந்து அடிப்படை கூறுகளையும் நாம் மற்ற உயிர்களோடு பகிர்கிறோம். அறிவைக் கொண்டு ஒன்றை மற்றதைவிட உயர்த்திக்கூற முடிகிறதென்பதால் மட்டுமே அவை உயர்வானவையாகி விடுவதில்லை. அற உணர்வு அறிவை விட உணர்ச்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதால் இந்த ஐந்து கூறுகளும் ஒன்றுக்கொன்று இணையாகவே கருதப்பட வேண்டும். சரியாக சொல்வதென்றால், ஒன்றைக் காட்டிலும் மற்றதை உயர்வாய்ப் பேசுதல் ஒரு சுவை மற்றதைக் காட்டிலும் உயர்ந்ததென்று கொண்டாடுவதைப் போன்றது: இனிப்பு எனக்கு புளிப்பைக் காட்டிலும் உவப்பானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு என் சுவை நுகர்வுக்கு அப்பால் வேறென்ன நியாயம் இருக்க முடியும்?
இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அறம் என்பது அதன் பயன்பாட்டை ஒட்டியோ அதன் பின்விளைவுகளை ஓட்டியோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஹெய்ட்டின் பார்வையில் அத்தகைய வாதங்கள் நம் அடிப்படை உணர்வுகளின் தர்க்க ரீதியான நியாயப்படுத்துதல்கள் மட்டுமே- உண்மையில் அறம் உணர்வுகளின் எழுச்சி. அறிவின் சமன்பாடு அதன் பிற்சேர்க்கை.
தனி மனித சுதந்திரத்தை ஒரு பண்பாடு கொண்டாடலாம். ஆனால் அது அந்த ஒரு காரணத்தால் மட்டும் குழு ஒற்றுமையைக் காக்க அதிகாரத்தை வெவ்வேறு தளங்களில் பகிர்ந்தளிக்கும் பண்பாட்டைவிட உயர்ந்ததாக மாறி விடாது. ‘தூய்மை’யைக் காரணம் காட்டி பெண்களுக்கு திரை போடும் பண்பாடுகள், மாதவிலக்கைக் காரணம் காட்டி பெண்களை ஒதுக்கி வைக்கும் பண்பாடுகள் நமக்கு பிற்போக்கானவையாகத் தெரியலாம். ஆனால் அத்தகைய அடையாளப்படுத்துதல் பொருளற்றது. எனது பண்பாட்டின் சுதந்திர உணர்வின் அடிப்படை எதுவோ அங்கிருந்துதான் இன்னொரு பண்பாட்டின் சுகாதார உணர்வும் குழு மனப்பான்மையும் எழுகின்றன.
இன்று நாம் பல பண்பாடுகளாய்ப் பிரிந்து நிற்கிறோம். நமக்கிடையே உள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு ஆழமானதாகத் தோற்றம் தருகிறது. இதில் ஒரு பண்பாடு தன்னை முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பண்பாட்டைப் பிற்போக்கானதாக அடையாளம் காட்டி அதைத் தர்க்கத்தின் வழியாகவும் அதிகாரத்தின் வழியாகவும் திருத்த நினைப்பது பெரும் பிழையாகவே இருக்கும்.
ஹெய்ட் சுட்டிக் காட்டும் அறத்தின் ஐந்து அடிப்படைக் கூறுகளையும் அவற்றின் தொன்மை மற்றும் பரிணாமப் பயன்பாடுகளையும் குறித்த அறிதல் வெவ்வேறு விழுமியங்களை மேலானதாகக் கருதும் பல்வகைப் பண்பாடுகளுக்கிடையில் ஒரு புரிதலை உருவாக்கக் கூடும். அறம் உணர்ச்சி சார்ந்தது, அறிவு சார்ந்ததல்ல என்ற பார்வை, தர்க்கம் மற்றும் பொருளாதார, அறிவியல் ஆதாரங்களைத் துணைக்கழைத்து நியாயப்படுத்துதலின் நீட்சியான ஆதிக்க உணர்வுகளுக்கு அணை போடக் கூடும். அடிப்படையில் அறம் பல வண்ணங்களைக் கொண்ட நிறப்பிரிகையை ஒத்தது- உயர்ந்து செல்லும் ஒரு நேர்கோட்டின் முனையில் நிற்கும் இலக்கல்ல அது என்பது ஹெய்ட்டின் புதிய அறத்தின் அடிப்படையாக இருக்கிறது.
குறிப்புகள்: